Ad

சனி, 26 ஜூன், 2021

தமிழ்நாடு, மகாராஷ்டிரா உட்பட 8 மாநிலங்களில் டெல்டா ப்ளஸ் கொரோனா; மத்திய அரசு எச்சரிக்கை!

நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வருவது லேசான மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், புதிதாக உருமாறிய டெல்டா ப்ளஸ் வகை கொரோனா பரவ ஆரம்பித்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கர்நாடகா, பஞ்சாப், ஆந்திரா, குஜராத், ஹரியானா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த உருமாறிய டெல்டா ப்ளஸ் வகை பரவி வருவதாகக் கூறி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூசன் இந்த மாநிலங்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். அதில், இம்மாநிலங்களில் டெல்டா ப்ளஸ் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்ட மாவட்டங்களில் மக்கள் கூடுவதை தடுப்பதோடு, கொரோனா சோதனையை அதிகரித்து, தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்தும் படி குறிப்பிட்டுள்ளார்.

Corona

Also Read: நெருங்குகிறதா டெல்டா ப்ளஸ் கொரோனா? - என்ன செய்ய வேண்டும் அரசு?

தமிழகத்தில் சென்னை, மதுரை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 7 பேர், மகாராஷ்டிராவில் மும்பை, தானே, ரத்னகிரி போன்ற மாவட்டங்களில் 22 பேர் உள்பட நாடு முழுவதும் 48 பேருக்கு இத்தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று இருப்பவர்களிடம் மாதிரிகள் எடுக்கப்பட்டு உடனே சோதனைக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்றும், கொரோனா நோயாளிகளை உடனே தனிமைப்படுத்தவேண்டும் என்றும் அரசு தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

டெல்டா ப்ளஸ் மற்றும் மூன்றாவது அலை அச்சுறுத்தல் காரணமாக மகாராஷ்டிரா அரசு தற்போது இருக்கும் கட்டுப்பாடுகளில் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. கொரோனா தொற்று எண்ணிக்கைக்கு ஏற்றபடி, அந்தந்தப் பகுதிகளுக்கான கட்டுப்பாடுகளை ஐந்து பிரிவுகளாகப் பிரித்திருக்கிறது. ஒன்று மற்றும் இரண்டாவது பிரிவில் வரும் பகுதிகளில், கட்டுப்பாடுகள் எதுவும் இருக்காது. ஆனால் இப்போது, ஒன்று மற்றும் இரண்டாவது பிரிவில் இருந்த இடங்கள் அனைத்தும், கட்டுப்பாடுகள் கொண்ட 3-வது பிரிவுக்குக் கொண்டு வரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

COVID-19 vaccine

Also Read: மூன்றாம் அலை பீதியை வலுப்படுத்தியிருக்கும் டெல்டா ப்ளஸ் வைரஸ்; யாரையெல்லாம் தாக்கும்?

கொரோனா டெல்டா ப்ளஸ் பரவல் எண்ணிக்கை, மகாராஷ்டிராவில் 21 என்ற அளவில் மட்டுமே இருக்கிறது. ஆனால் இந்த நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த 80 வயது முதியவர் ரத்னகிரி மாவட்டத்தில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார். இதனை மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே அறிவித்துள்ளார்.

இதற்கிடையே நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிகபட்சமாக 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் பிரதீப் இதனை தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியை தாண்டியதாக அவர் குறிப்பிட்டார்.



source https://www.vikatan.com/news/healthy/centre-alerts-8-states-including-tamilnadu-regarding-corona-delta-plus-variant-spread

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக