நான் 18.5.2021 அன்று கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக் கொண்டேன். அடுத்த 4 நாள்கள் கழித்து காய்ச்சலும் வயிற்றுப்போக்கும் இருந்தது. டெஸ்ட் எடுத்துப் பார்த்ததில் கொரோனா பாசிட்டிவ் என்று உறுதியானது. அதையடுத்து 4 நாள்கள் மருத்துவமனையில் இருந்தேன். இந்த நிலையில் நான் 2-வது டோஸ் போட்டுக்கொள்ள வேண்டுமா?
- கார்மல் ராஜன்(விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த மருத்துவர் சஃபி.
``நீங்கள் சொல்லும் கணக்குப்படி பார்த்தால் முதல் தவணை தடுப்பூசி போட்ட பிறகு நான்கு நாள்கள் கழித்து உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகு நான்கு நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கிறீர்கள். எனவே மொத்தமாக உங்களுக்கு எட்டு நாள்கள் இந்த பாதிப்பு இருந்திருக்கிறது.
கோவிஷீல்டு தடுப்பூசியைப் பொறுத்தவரை முதல் தவணை போட்டுக்கொண்டு 85 நாள்கள் கழித்தே இரண்டாவது தவணை போட்டுக்கொள்ளச் சொல்கிறார்கள். நீங்கள் முதல் டோஸ் போட்டுக்கொண்ட மே 18-ம் தேதியிலிருந்து கணக்கிட்டாலே இரண்டாவது தவணைக்கு இன்னும் ஒன்றரை மாதம் அவகாசம் இருக்கிறது. இந்நிலையில்தான் உங்களுக்குத் தொற்று வந்திருக்கிறது. அதன் காரணமாக உங்கள் உடலில் இயற்கையாகவே ஆன்டிபாடிக்கள் உருவாகியிருந்தாலும் அவை முழுமையாக நியூட்ரலைசிங் ஆன்டிபாடிக்களாக மாறாது. இதை எளிமையாக விளக்குகிறேன்.
அன்றாட வாழ்க்கையில் உணவு, நீர், காற்று மூலமாக நமக்குப் பலவித தொற்றுகள் வருகின்றன. அவை வைரஸ் தொற்றாகவோ, பாக்டீரியா தொற்றாகவோ இருக்கலாம். அவற்றை எதிர்க்க இயற்கையாகவே நம் உடலில் ஆன்டிபாடி எனப்படும் நோய் எதிர்ப்பாற்றல் செல்கள் உருவாகும். இவற்றுக்கு `பைண்டிங் ஆன்டிபாடீஸ்' என்று பெயர். நியூட்ரலைசிங் ஆன்டிபாடீஸ் என்பவை கோவிட் நோய்க்கு எதிராக பிரத்யேகமாக நம் உடலில் உருவாகும் தடுப்பாற்றல் செல்கள். தடுப்பூசி போடுவதால் `வாக்சின் மீடியேட்டடு இம்யூனிட்டி' (vaccine mediated immunity) என்ற எதிர்ப்பாற்றலை உடல் பெறுகிறது.
Also Read: Covid Questions: தடுப்பூசி இடைவெளியை அதிகரித்த அரசு... இதற்கு முன்பு போட்டவர்கள் என்ன செய்வது?
இந்த எதிர்ப்பாற்றலானது மேற்குறிப்பிட்ட நியூட்ரலைசிங் ஆன்டிபாடிக்களை உருவாக்கவும் நோய் எதிர்ப்புத்திறனை இன்னும் சில காலத்துக்கு நீட்டிக்கச் செய்யவும் உதவும். அதற்கு நீங்கள் இரண்டாவது தவணை தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளத்தான் வேண்டும். முதல்முறை உங்களுக்கு வந்த தொற்று பெரிய பிரச்னைகளைக் கொடுக்காமல் போயிருக்கலாம். மூன்றாவது அலையில் மீண்டும் நீங்கள் பாதிக்கப்படாமலிருக்கவும், அப்படியே மீண்டும் தொற்று வந்தாலும் அது தீவிர பாதிப்பாக மாறாமலிருக்கவும் தடுப்பூசி மட்டுமே உங்களுக்குப் பாதுகாப்பு".
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
source https://www.vikatan.com/health/healthy/can-a-person-take-2nd-dose-after-tested-positive-to-covid-19-post-1st-dose
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக