நகைச்சுவை நடிகர் வடிவேல் ஒரு படத்தில், `ஐயய்யோ இங்கிருந்த கிணத்தைக் காணவில்லை. அதை யாரோ திருடிவிட்டனர். வட்ட கிணறு, வற்றாத கிணறு சார்' என்று காவல்துறையிடம் புகார் கொடுத்து, எல்லோரையும் சிரிக்கவைத்தார். இதே பாணியில், கரூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்திலிருந்த பொதுக் கிணற்றை மூன்று நாள்களாகக் காணவில்லை என்று அந்த கிராம மக்கள் சீரியஸாக முதல்வர் வரை புகார் கூறி, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
Also Read: `தேவாங்குகளுக்கு காப்புக்காட்டில் விரைவில் சரணாலயம்!' - அறிவித்த கரூர் ஆட்சியர்
கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியத்தில் இருக்கிறது பொருந்தலூர் கிராமம். இந்த ஊராட்சியிலுள்ள தெலுங்கப்பட்டி மேலத்தெருவில் இருக்கும் 2-வது வார்டில், அரசு மற்றும் கிராமப் பஞ்சாயத்துக்குச் சொந்தமான 100 அடி ஆழம் உள்ள கிணறு ஒன்று இருந்துள்ளது. இந்தப் பொது உறை கிணற்றைத்தான் தனிநபர் ஒருவர் மூடி, அந்த இடத்தை வேலிபோட்டு அடைத்து அபகரித்துவிட்டதாக கிராம மக்கள் 'பகீர்' புகார் கிளப்புகிறார்கள்.
இது குறித்து, நம்மிடம் பேசிய சமூக ஆர்வலரான பழனிசாமி,
``1946 -ம் வருடம் வெட்டப்பட்ட உறை கிணறு இது. பொருந்தலூர் ஊராட்சி நிர்வாகக் கட்டுப்பாட்டில் இந்தக் கிணறு இருந்துவந்தது. 100 அடிக்கும் மேல் ஆழமுள்ள இந்தக் கிணற்றுத் தண்ணீரைத்தான் கிராம மக்கள் குடிக்கப் பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தக் கிணற்றில் தண்ணீர் வற்றி, பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. இந்தப் பகுதியே வறட்சியான பகுதி. மக்கள் குடிநீருக்காக அல்லாடும் சூழல். அதனால், இந்தக் கிணற்றைத் தூர்வாரி, பழையபடி மக்கள் பயன்பாட்டுக்கு விடும்படி பஞ்சாயத்து நிர்வாகத்திடம் மக்கள் தொடர் கோரிக்கை வைத்து வந்தார்கள். ஆனால், பொருந்தலூர் ஊராட்சி நிர்வாகம், அதை செயல்படுத்தவில்லை. இந்தநிலையில், அந்தக் கிணற்றையொட்டி வசிக்கும் ஆதி நாராயணன் என்பவர், திடீரென இந்தக் கிணற்றை மண் போட்டு மூடிவிட்டு, அந்தக் கிணறு மற்றும் அங்கிருந்த பஞ்சாயத்துக்குச் சொந்தமான 5 சென்ட் இடத்தைச் சுற்றி வேலி அமைத்து, ஆக்கிரமித்துவிட்டார். இதைப் பார்த்ததும் மக்கள் கொந்தளித்துவிட்டனர். அவரிடம் போய் கேட்டதுக்கு, `நான் அப்படித்தான் பண்ணுவேன். முடிஞ்சதைப் பார்த்துக்குங்க' என்று சொல்லிட்டார். பஞ்சாயத்து நிர்வாகத்திடம் புகார் சொல்லியும், ஒன்றும் நடக்கவில்லை. அதனால்தான், 'கிணற்றைக் காணவில்லை' என்று முதல்வர், வருவாய்த்துறை, பி.டி.ஓ என்று பலதரப்புக்கும் புகார் அனுப்பியுள்ளோம். கிணற்றை மீட்டு, அதைப் பழையபடி தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்குக் கொடுக்கணும். இல்லையென்றால், போராடுவோம்" என்றார்.
கிணற்றை ஆக்கிரமித்ததாகச் சொல்லப்படும் ஆதி நாராயணனிடம் பேச முயன்றோம். அவர் நம்மிடம் பேச மறுத்துவிட்டார். இது குறித்து, பொருந்தலூர் ஊராட்சி லொளெர்க் ரவிச்சந்திரனிடம் பேசினோம்.
``அது பஞ்சாயத்துக்குச் சொந்தமான பொது உறை கிணறுதான். அது தூர்ந்து போய் மக்கள் பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. இந்தநிலையில், ஆதி நாராயணன் அதை தூர்த்து, சுத்தி வேலி போட்டது உண்மைதான்.
நாங்க போய்க் கேட்டதுக்கு, 'எங்க வீட்டை விரிவுபடுத்தினோம். அதற்கு, இந்தக் கிணறு இடைஞ்சலாக இருந்தது. அதனால், அதை மண் போட்டு தூர்த்தோம். அதேபோல், குழந்தைகள் இருப்பதால், அவர்களின் பாதுகாப்பு கருதியும் கிணற்றை மூடினோம். வேணும்னா, கிணறு இருந்த இடத்தைப் பஞ்சாயத்துக்குக் கொடுத்துடுறோம்'னு சொன்னார். 'கிணறு இடைஞ்சலா இருந்தா எங்ககிட்ட புகார் கொடுத்தா, அதை நாங்க மூடியிருப்போமே... நீங்களா எப்படி மூடலாம்?'னு அவரை கண்டித்துவிட்டு வந்தோம்" என்றார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/karur-village-people-protest-against-their-village-man-who-closed-the-well
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக