Ad

செவ்வாய், 29 ஜூன், 2021

காங்கிரஸ் டூல்கிட் முதல் ஜம்மு காஷ்மீர் இல்லா இந்திய வரைபடம் வரை! - தொடரும் ட்விட்டர் சர்ச்சைகள்

ட்விட்டர் நிர்வாகம் இந்தியாவின் புதிய வரைபடம் ஒன்றினை வெளியிட்டதையடுத்து, அது சர்ச்சையை ஏற்படுத்த அதனை தனது தளத்திலிருந்து உடனடியாக நீக்கியுள்ளது ட்விட்டர். இது தொடர்பாக, இந்திய ட்விட்டர் நிர்வாக இயக்குநர் மனீஷ் மகேஸ்வரி மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.

பிரச்னை என்ன?!

ட்விட்டர் நிர்வாகம் ‘ட்வீப் லைஃப்’ (Tweep Life) என்ற தனது பக்கத்தில், இந்தியாவில் ட்விட்டர் நிர்வகிக்கும் இடங்களைக் கொண்ட புதிய வரைபடம் ஒன்றினை வெளியிட்டது. அதில் இந்தியாவிலிருந்து ஜம்மு காஷ்மீர், லடாக் உள்ளிட்ட பகுதிகளைப் பிரித்து தனி நாடுகளாக காட்டும் வகையிலான வரைபடத்தை வெளியிட்டனர். இந்த புதிய வரைபடம் இணையவாசிகள் மத்தியில் தீயாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய அரசினர் தரப்பிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, ட்விட்டர் நிர்வாகம் அந்த வரைபடத்தினை தனது தளத்திலிருந்து உடனடியாக நீக்கியது.

இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவின் ட்விட்டர் நிர்வாக இயக்குநர் மனீஷ் மகேஸ்வரி மீது உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்ட காவல் நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரின் மேற்பார்வையில் தான் இது நடைபெற்றிருக்குமென்றும், அவரது ஒப்புதலின்றி இதை பதிவிட வாய்ப்பில்லை என்றும் இந்திய ட்விட்டர்வாசிகள் மனீஷ் மகேஸ்வரிக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சர்ச்சை சங்கிலியில் ட்விட்டர் இந்தியா நிர்வாகம்

Twitter | ட்விட்டர்

சமீப நாட்களாகவே இந்தியாவில் ட்விட்டர் நிர்வாகம் தொடர்ச்சியாக சர்ச்சைகளில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது. அண்மையில், மத்திய அரசு இந்தியாவில் செயல்பட்டுவரும் சமூக வலைதள நிறுவனங்களுக்கான புதிய டிஜிட்டல் விதிகளை அமல்படுத்தியபோது, அதை ஏற்க மறுத்து கால தாமதப்படுத்தியது ட்விட்டர். அத்தோடு, புதிய டிஜிட்டல் விதிகளின்படி அந்தந்த நிறுவனங்களின் குறைதீர்ப்பு அதிகாரியாக இந்தியரான ஒருவரையே நியமிக்க வேண்டும். ஆனால், முதலில் தர்மேந்திர சத்ரு என்பரை நியமித்த ட்விட்டர் இந்தியா நிர்வாகம், அடுத்த சில நாட்களிலேயே அவருக்கு பதிலாக அமெரிக்காவைச் சேர்ந்த ஜெரிமி கெஸ்ஸல் என்பவரை குறைதீர்ப்பு அதிகாரியாக நியமித்தது. தர்மேந்திர சத்ரு பணியிலிருந்து விலகினாரா?! என்பது குறித்த தெளிவான விளக்கத்தை ட்விட்டர் தரப்பு இதுவரை அளிக்கவில்லை.

அதைத்தொடர்ந்து, காங்கிரஸ் டூல்கிட் சர்ச்சையில் சிக்கியது. அது குறித்து பா.ஜ.க-வின் செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா ட்விட்டரில் தெரிவித்த கருத்தில் ட்விட்டர் நிர்வாகம் (Manipulated Media) என்ற ஹேஷ்டேக்கை குறித்தது. இது தொடர்பான காவல்துறையினரின் விசாரணையில் மனீஷ் மகேஸ்வரி முழுமையாக ஈடுபடாததால் அவரது வீட்டிற்கே சென்று விசாரித்தபோது தனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்துவிட்டார்.

அதேபோல், வெகு நாட்களாக பயன்படுத்தபடாமல் இருந்து வந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் மற்றும் அமைப்பைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலருடைய ட்விட்டர் கணக்கிலிருந்த ப்ளூ டிக்கை நீக்கி, அது சர்ச்சையாக மீண்டும் திருப்பியளித்தது. இதேபோல் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் ப்ளூ டிக்கையும் நீக்கியது விவாதத்தை ஏற்படுத்தியது.

இதுபோன்று சமீப காலமாகவே, மத்திய அரசு தரப்பினர் மத்தியில் மோதலில் இருந்து வரும் இந்திய ட்விட்டர் நிர்வாகம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்தது. அந்த வரிசையில் தற்போது இந்தியாவையும், ஜம்மு காஷ்மீரையும் தனித்தனி நாடுகளாக வகைப்படுத்தி வெளியிட்டுள்ள புதிய வரைபட விவகாரம் சர்ச்சையின் உச்சத்தை தொட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி மத்திய அரசாங்கம் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தினை ரத்து செய்து உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் மெஹ்பூபா முப்தி, ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்கள் ஒரே அணியாக உருவெடுத்து சிறப்பு அந்தஸ்த்தினை மீண்டும் நடைமுறையில் கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சூழலில், ட்விட்டர் நிர்வாகம் இது போன்ற வரைபடங்களை வெளியிட்டு தேவையற்ற சர்ச்சைகளை கிளப்பி திசைதிருப்புவது தவறானது என்று அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



source https://www.vikatan.com/news/india/from-congress-tool-kit-to-kashmir-map-twitter-controversy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக