Ad

செவ்வாய், 29 ஜூன், 2021

ஜம்மு காஷ்மீர்: புதிய வடிவில் தீவிரவாதத் தாக்குதல்? மோடி அரசின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையா?!

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370, 2019 -ம் ஆண்டு, ஆகஸ்ட் 5-ம் தேதி அதிரடியாக ரத்து செய்யப்பட்டதுடன், ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. அந்த நடவடிக்கைகளுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கைகள் கணிசமாகக் குறைந்துவிட்டதாக ஆட்சியாளர்கள் கூறிவருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி, ஜம்மு காஷ்மீரில் 2018-ம் ஆண்டு, 614 பயங்கரவாதச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அவை, 2019-ல் 594-ஆகவும், 2020-ல்-244 ஆகவும் குறைந்துள்ளன. அதாவது, சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, பயங்கரவாதச் சம்பவங்கள் 60 சதவிகிதம் அளவுக்குப் படிப்படியாகக் குறைந்ததாகச் சொல்லப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர்

மேலும், ஜம்மு காஷ்மீரில் 2021-ம் ஆண்டு, பிப்ரவரி 28-ம் தேதிவரை 15 பயங்கரவாதச் சம்பவங்கள் நிகழ்ந்ததாகவும் எட்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது. 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் பயங்கரவாதச் சம்பவங்கள் நிகழ்ந்த ஒரே மாநிலம், ஜம்மு காஷ்மீர்தான். இதைத் தாண்டி பஞ்சாபில் ஒரே ஒரு பயங்கரவாதச் சம்பவம் நிகழ்ந்தது என்று சொல்லப்படுகிறது.

Also Read: சென்னை: `டி டாக்ஸி என்ற ஒன்று உருவானதா இல்லையா என்றே தெரியாமல் போய்விடும்!' - கலங்கும் ஊழியர்கள்

2019-ம் ஆண்டு 27 பேர், 2020-ம் ஆண்டு 33 பேர் எனப் பாதுகாப்புப் படையினர் வீர மரணம் அடைந்திருக்கிறார்கள் என்ற புள்ளிவிவரத்தை உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதேபோல, பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, தீவிரவாதம் தொடர்புடைய சம்பவங்களில் பொதுமக்கள் 59 பேர் கொல்லப்பட்டதாகவும் 168 பேர் காயமடைந்ததாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒப்பீட்டளவில் வன்முறைச் சம்பவங்கள் குறைந்துள்ளபோதிலும், பிரிவு 370 நீக்கப்பட்டதற்குப் பிறகு தீவிரவாத நடவடிக்கைகளிலும் எந்த மாற்றமும் இல்லை என்று ஜம்மு காஷ்மீர் பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் கூறுகிறார்கள்.

பிரதமருடன் ஜம்மு காஷ்மீர் தலைவர்கள்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு பிரிவு 370 தடையாக இருப்பதாக பா.ஜ.க தரப்பில் முன்பு சொல்லப்பட்டது. ஆனால், ``காஷ்மீரில் வன்முறைகள் தொடர்கின்றன. தீவிரவாதிகள், பொதுமக்கள், பாதுகாப்புப் படையினர் என நூற்றுக்கணக்கானோர் கடந்த இரண்டு ஆண்டுகளில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 2019, ஆகஸ்ட்டுக்குப் பிறகு, 10-க்கும் மேற்பட்ட அரசியல் செயற்பாட்டாளர்கள் உயிரிழந்துள்ளனர். ஏராளமான இளைஞர்கள் தீவிரவாத இயக்கங்களில் இணைவதாகச் செய்திகள் வருகின்றன. காஷ்மீரில் வன்முறை குறையவில்லை என்பதையே இது காட்டுகிறது. கிட்டத்தட்ட இதே மாதிரியான நிலைமைதான், சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதற்கு முன்பாகவும் இருந்தது" என்று ஜம்மு காஷ்மீர் பிரதேசத்தின் முக்கிய அரசியல் கட்சிகளைக் கொண்ட குப்கார் கூட்டணியின் தலைவர்கள் கூறுகிறார்கள்.

வன்முறைச் சம்பவங்களும், தீவிரவாதச் செயல்களும் குறைந்திருப்பதாகச் சொல்லப்பட்டுவந்த நிலையில், தற்போது ஜம்முவில் உள்ள பாதுகாப்புப் படை விமான தளத்தின் மீதே வெடிகுண்டுத் தாக்குதல் நடைபெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஜம்மு காஷ்மீர் பிரதேச அரசியல் கட்சித் தலைவர்களுடன் ஜூன் 24-ம் தேதி பிரதமர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அடுத்த நான்கு நாள்களில் ட்ரோன் மூலம் தாக்குதல் சம்பவம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

காஷ்மீர் எல்லையில் ராணுவ வீரர்கள்

ஜம்மு விமானப்படைத் தளத்தின் தொழில்நுட்பப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1:30 மணியளவில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் வீரியம் குறைவானவை என்றும், அதனால் பெரிய சேதாரத்தை ஏற்படுத்தவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனாலும், இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது, இந்தத் தாக்குதல் ட்ரோன் மூலமாக நடத்தப்பட்டிருக்கிறது என்பதைத்தான். ட்ரோன் மூலமாக இங்கு தாக்குதல் நடத்தப்படுவது இதுவே முதன்முறை.

ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும், சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்பட வேண்டும், இயல்புநிலை திரும்ப வேண்டும் என்ற அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை காதுகொடுத்துக் கேட்பதற்கு மத்திய பா.ஜ.க அரசு முன்வந்திருக்கும் இந்த நேரத்தில், ஜம்முவில் நடந்துள்ள தாக்குதல் பல கேள்விகளை எழுப்புகிறது. இந்தச் சம்பவத்துக்கு லஷ்கர் - இ - தொய்பா, ஜெய்ஷ் - இ - முகமது போன்ற தீவிரவாத அமைப்புகளின் தொடர்புகள் இருக்கலாம் என்று புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்பக் கூடாது என்று விரும்பும் உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளின் நோக்கத்தை அறிந்து எச்சரிக்கையுடன் ஆட்சியாளர்கள் செயல்பட வேண்டும் என்று ஜனநாயகத்தை விரும்புவோர் ஆட்சியாளர்களை எச்சரிக்கிறார்கள். மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும், தேர்தல் நடத்தப்படும் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் அது எப்போது நடக்கும் என்பது தெரியவில்லை. ஆனாலும்கூட, பேச்சுவார்த்தைகள் மூலமாக அரசியல்ரீதியாக முயற்சிகள் தடையின்றி தொடர வேண்டும் என்ற கோரிக்கையைப் பல தரப்பினரும் முன்வைத்துவருகிறார்கள்.

மெஹ்பூபா முப்தி

ஏற்கெனவே, ஜம்மு காஷ்மீர் முழுவதும் பாதுகாப்புப் படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். தற்போதைய தாக்குதலின் விளைவாக, மேலும் கூடுதலாகப் பாதுகாப்புப் படைகள் அந்தப் பிரதேசத்தில் குவிக்கப்படக்கூடும். இந்த நேரத்தில், ``மூச்சு விடுவதற்கான உரிமையை முதலில் மக்களுக்கு வழங்குங்கள். அதன் பிறகு எல்லாம் நடக்கும்” என்று முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹ்பூபா முப்தி கூறியிருக்கும் கருத்துக்கு எதிர்வினைகளும் வந்தபடியுள்ளன. `மத்திய ஆட்சியாளர்களுக்கு மதிப்பளிப்பது அவசியம்’ என்கிற கருத்தும் வந்துள்ளது. தீவிரவாதச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவற்கான நடவடிக்கைகளை சமரசமின்றி மேற்கொள்வதுடன், இழந்துவிட்ட வாழ்வாதாரங்களை மீட்டெடுப்பது, மக்களுக்கான அரசியல் உரிமைகளை வழங்குவது, ஜம்மு காஷ்மீர் மக்களின் விருப்பங்களைப் பூர்த்திசெய்வது ஆகியவையே அந்தப் பிரதேசத்தில் நிஜமான அமைதியைக் கொண்டுவரும்.



source https://www.vikatan.com/news/politics/in-jammu-airforce-place-bomb-blasted-done-by-drone

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக