ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகேயுள்ள கே.ஜி.வலசு சேனாங்காட்டு தோட்டத்தை சேர்ந்த விவசாயி கருப்பண கவுண்டர் (வயது 75). இவர் மனைவி மல்லிகா (வயது 55) மற்றும் மகள் தீபாவுடன் (வயது 30) வசித்து வந்தார். கடந்த சனிக்கிழமையன்று (ஜூன் 26)) காலை சுமார் 8 மணியளவில் இவர்களது தோட்டத்திற்கு 25 வயதுடைய இளைஞர் ஒருவர் வந்துள்ளார். தான் கொரோனா சோதனை செய்ய வந்திருப்பதாகவும், சோதனைக்கு முன்பாக நான் கொடுக்கின்ற மாத்திரையை சாப்பிட வேண்டுமெனச் சொல்லி மாத்திரை ஒன்றை கொடுத்திருக்கிறார். உண்மையிலேயே கொரோனா சோதனை செய்ய வந்திருக்கிறார்கள் என நம்பி கருப்பண கவுண்டர், அவருடைய மனைவி மல்லிகா, மகள் தீபா மற்றும் தோட்டத்தில் வேலை செய்து வந்த குப்பம்மாள் (வயது 65) ஆகிய நால்வரும் அந்த மாத்திரையை வாங்கி சாப்பிட்டிருக்கின்றனர். நால்வரும் மாத்திரயை சாப்பிட்ட பிறகு, கொரோனா பரிசோதனை செய்வதைப் போல பாவ்லா காட்டிய அந்த மர்ம நபர் ‘உங்களுக்கு கொரோனா தொற்று இல்லை’ எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார்.
அவர் சென்ற சில நிமிடங்களிலேயே மாத்திரையை சாப்பிட்ட நால்வருக்கும் வாந்தி மற்றும் மயக்கம் வந்துள்ளது. உடனே உறவினர்கள் நால்வரையும் சென்னிமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே மல்லிகா பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் மீதமிருந்த மூவரையும் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைகள் கொடுக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கருப்பண கவுண்டர் மற்றும் அவருடைய மகள் தீபா ஆகிய இருவரையும் கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையிலும், குப்பம்மாளை சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தும் தீவிர சிகிச்சைகள் கொடுத்து வந்தனர். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி தீபா மற்றும் குப்பம்மாள் இறந்துபோக, கருப்பண கவுண்டர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவம் ஏதேனும் முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா அல்லது வேறு எதாவது காரணமா என்ற கோணத்தில் சென்னிமலை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது கல்யாணசுந்தரம் என்னும் பக்கத்து தோட்டத்து விவசாயி போலீஸாரிடம், ‘அந்த மர்மநபர் கருப்பண கவுண்டர் வீட்டிற்கு வந்திருந்தபோது, நானும் அங்குதான் இருந்தேன். அந்த மர்மநபர் என்னிடமும் மாத்திரையைக் கொடுத்து சாப்பிடச் சொன்னார். நான் ஏற்கனவே கொரோனா சோதனை செய்துவிட்டேன் எனச் சொல்லி மாத்திரையைச் சாப்பிட மறுத்துவிட்டேன். அதன்பிறகு ஊருக்கு வெளியே என்னை விட்டுவர முடியுமா என அவர் கேட்க, என்னுடைய பைக்கில் அழைத்துச் சென்று நான் தான் விட்டுவிட்டு வந்தேன்’ எனக் கூறியிருக்கிறார். இதுபோலீஸாருக்கு உறுத்தவே, கல்யாணசுந்தரத்தை துருவியெடுத்திருக்கின்றனர். போலீஸாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் பதறிப்போன கல்யாணசுந்தரம் ஒருகட்டத்தில் நடந்த உண்மையைச் சொல்லியிருக்கிறார்.
‘நான் கருப்பண கவுண்டரிடம் 7 லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்தேன். அது வட்டியோடு சேர்த்து 10 லட்ச ரூபாய்க்கு மேலாகிவிட்டது. கருப்பண கவுண்டர் அடிக்கடி என்னிடம் கொடுத்த கடனைக் கேட்டு தொந்தரவு செய்து வந்தார். கருப்பண கவுண்டர் மற்றும் அவருடைய குடும்பத்தை தீர்த்துவிட்டால், கடன் பிரச்னை ஒழிந்துவிடுமென நினைத்தேன். அதன்படி சபரி என்னும் இளைஞரை வைத்து, கொரோனா சோதனை என்ற பெயரில் மரத்திற்கு வைக்கக்கூடிய சல்பாஸ் மாத்திரையை கருப்பண கவுண்டர் மற்றும் அவருடைய வீட்டிலிருந்த மூவருக்கும் கொடுக்க வைத்தேன். அவர்களும் கொரோனா டெஸ்ட் என நம்பி அந்த மாத்திரையை சாப்பிட்டனர்’ என கல்யாணசுந்தரம் நடந்த சம்பவத்தைக் கூறியிருக்கிறார். அதனையடுத்து கல்யாணசுந்தரம் மற்றும் சபரி (எ) போத்தீஸ்குமார் (21) ஆகிய இருவரையும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
source https://www.vikatan.com/social-affairs/crime/three-persons-killed-using-poison-by-debt-issue
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக