Ad

சனி, 26 ஜூன், 2021

`ஒன்றிய அரசு' சொல்லாடல்: மலிவான அரசியலா... அழுத்தமான செய்தியா?

தி.மு.க ஆட்சிக்கு வந்தது முதல் பா.ஜ.க-வுடன் பல்வேறு கருத்துகளுடன் மோதல் போக்கையே கடைப்பிடித்துவருகிறது. எதிர்க்கட்சியாக இருந்த காலம் முதலே பா.ஜ.க அரசு கொண்டுவந்த மருத்துவத்துக்கான நீட் தேர்வு, வேளாண் சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், குடியுரிமைச் சட்டம் தொடங்கி பலவற்றை தி.மு.க எதிர்த்துவந்தது. ஆட்சிக்கு வந்ததும், தொடர்ந்து தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்துவரும் தி.மு.க கருத்தியல்ரீதியிலும் மோதல் போக்கையே கடைப்பிடித்துவருகிறது. குறிப்பாக, மத்திய அரசை `ஒன்றிய அரசு’ என அழைப்பது தொடர்ந்து பேசுபொருளாகிவந்திருக்கிறது. முதல்வராகப் பொறுப்பேற்றதும், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் `ஒன்றிய அரசு’ எனக் குறிப்பிட்டு எழுதியிருந்தார். மத்திய அரசை ஒன்றிய அரசு என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தொடர்ந்து கூறிவந்தாலும், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டதற்குப் பின் பெரிய அளவில் கவனம் பெற்றுவிட்டது. தி.மு.க அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரை மத்திய அரசு என்று சொல்வதா, ஒன்றிய அரசு எனச் சொல்வதா என்ற விவாதம் தொடர்கிறது. சட்டப்பேரவையில் பேசிய பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் ``இந்தியாவிலிருந்து பிரிந்ததுதான் மாநிலங்கள்” எனத் தொடங்கிய விவாதம் தொடங்க, ``இந்தியாவிலிருந்து மாநிலங்கள் பிரியவில்லை; எல்லா மாநிலங்களும் ஒன்றிணைந்து உருவாக்கியதுதான் இந்தியா” என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்தார்.

ஸ்டாலின், மோடி

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒருபடி மேலே சென்று ``ஒன்றியம் என்ற சொல் தவறான சொல் அல்ல. மாநிலங்கள் எல்லாம் சேர்ந்தது என்பதுதான் அதன் பொருள். ஒன்றியம் என்ற வார்த்தையைப் பார்த்து யாரும் மிரளத் தேவையில்லை அந்த ஒரு வார்த்தையில் கூட்டாட்சித் தத்துவம் அடங்கியிருக்கிறது; அதற்காகத்தான் அதை நாங்கள் பயன்படுத்துகிறோம். பயன்படுத்துவோம். பயன்படுத்திக்கொண்டே இருப்போம்” என அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.

Also Read: `தமிழ்நாடு' என்று அழைப்பதே நமது அடையாளம் - விளக்கும் ஆழி செந்தில்நாதன்

‘ஒன்றிய அரசு' என்று தி.மு.க சொல்வதற்குப் பின்னால் இருக்கும் அரசியல் என்ன என்ற கேள்வியை பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் முன்வைத்தோம். ``தி.மு.க அரசால் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தெரியவில்லை. இப்படிப் பல்வேறு பிரச்னைகளைச் சமாளிக்கத் தெரியாமல் ‘ஒன்றியம்’ என்ற ஒற்றை வார்த்தையை வைத்து மலிவான அரசியல் செய்துவருகிறார்கள்.

உதாரணமாக `Take your Seat’ என்று ஒருவர் சொல்லும்போது ‘உங்கள் நாற்காலியில் அமருங்கள்’ என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். அதைவிட்டுவிட்டு, `உங்கள் நாற்காலியை எடுத்துக்கொண்டு செல்லுங்கள்’ என்று சொல்வதாகப் பொருள் எடுத்துக்கொண்டால் அது அபத்தமாகத்தான் முடியும். இந்திய ரூபாய் நோட்டுகளில் `Guaranteed By The Central Government’ அதாவது, மத்திய அரசு என்று தெளிவாகப் போட்டிருக்கிறார்கள். அப்போ இனி ரூபாய்த் தாள்களையெல்லாம் பயன்படுத்த மாட்டோம் என்று ஒதுக்கிவிடுவார்களா? மாநிலங்களால் ஆனதுதான் இந்தியா என்று ஸ்டாலின் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

நாராயணன் திருப்பதி

நிர்வாக வசதிக்காக இந்தியாதான் மாநிலங்களைப் பிரித்திருக்கிறது என்றுதான் அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. இந்தியா எப்போது வேண்டுமானாலும், எத்தனை மாநிலங்களாகவும் பிரித்துக்கொள்ளவும் அரசியலமைப்புச் சட்டம் அனுமதி அளிக்கிறது. பொருளாதாரம் குறித்து ஆலோசனை வழங்கக் குழு அமைத்திருப்பதுபோல அரசியலமைப்புச் சட்டத்தைப் புரிந்துகொள்ள வழக்கறிஞர் குழு ஒன்றையும் அமைத்துத் தெளிவு பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது” என பதிலளித்தார்.

`ஒன்றிய அரசு’, `மத்திய அரசு’... எது சரி, ஏன் எனச் சமூகச் செயற்பாட்டாளரும், மொழியுரிமைக் களப் போராளியுமான ஆழி செந்தில்நாதனிடம் கேட்டோம்: ``இந்திய அரசியல் சாசனத்தின்படி இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம். இந்தியாவில் சட்டப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிய அரசு, மாநில அரசு என இரண்டு இருக்கின்றன. அதிகாரங்கள் இவை இரண்டுக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. அதிகாரங்களெல்லாம் ஒன்றிய அரசிடம்தான் இருக்க வேண்டும் அந்த ஒன்றிய அரசும், மத்திய அரசாகத்தான் இருக்க வேண்டும் எனத் திட்டமிட்டு மாநில அரசு என்ற முறையே வேண்டாம் என பா.ஜ.க.-வினர் நினைக்கிறார்கள்.

யூனியன் என்றால் ஒன்றியம் என நேரடியாகத்தான் பொருள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆழி செந்தில்நாதன்

ஒன்றியம் என்று சொன்னால் சென்ட்ரல் எனப் பொருள் எடுத்துக்கொள்ள வேண்டும் என பா.ஜ.க-வினர் விருப்பப்படுகிறார்கள். ஆனால், யூனியன் என்றால் ஒன்றியம் என்றுதான் பொருள்கொள்ள வேண்டும். அதுதான் சரி. அதற்காகத்தான் தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஒன்றியம் என்ற சொல்லை வலியுறுத்திவருகிறார். யூனியன் என்று சொன்னால் `சங்கம்’ எனவும், `ஒன்றியம்’ எனவும் பொருள் கொள்ளப்பட வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்திலேயே Union of India என ஆங்கிலத்திலும், `ராஜ்ஜியங்களின் சங்கம்’ என இந்தியிலும் எழுதியிருக்கிறார்கள்” என விளக்கியவர்...

Also Read: 'திராவிடம்... ஒன்றியம்...' - ஸ்டாலின் தொடங்கும் தனித்துவ அரசியல்!

``இந்தியாவை நாம் `மத்திய அரசு’ என்று சொல்லிச் சொல்லி நமக்கு உள்ள அதிகாரம் அனைத்தையும் அங்கே தாரைவார்த்துக் கொடுத்துவிட்டோம். ஆனால், முதல்வர் ஸ்டாலின், டெல்லி என்பது ஒருவருக்கு மட்டும் சொந்தமில்லை. இந்திய ஒன்றியத்தின் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான ஒன்று என உணர்த்துகிறார். ஸ்டாலின் ஒரு கடிதத்தில் இயல்பாக `ஒன்றிய அர’சு என எழுதினார். அதைப் பிரச்னையாக மாற்றியது யார்? தி.மு.க-வா... பா.ஜ.க-வா? இப்போதுகூட இதை ஒரு பெரிய பிரச்னையாகச் சட்டப்பேரவையில் எழுப்பியவர் பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன்தானே? ஓர் அரசாங்கம் இயல்பாக சட்டப்படி ஒரு செயலைச் செய்கிறது. ஒன்றிய அரசுக்கு ஒரு கடிதம் எழுதுகிறது. அதில் ஒன்றியம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது. தி.மு.க ஒன்றும் `இன்று முதல் நாங்கள் மத்திய அரசை ஒன்றிய அரசு என்றுதான் அழைப்போம்’ எனத் தீர்மானம் ஏதும் நிறைவேற்றிவிடவில்லையே... பா.ஜ.க-வே யூனியன் மினிஸ்டர், யூனியன் கவர்மென்ட், யூனியன் கேபினெட் என்றுதானே டெல்லியில் சொல்லிவருகிறது... அதை ஸ்டாலின் சொன்னால் மட்டும் தவறா? பா.ஜ.க ஆங்கிலத்தில் சொல்வதை இங்கே தமிழில் ஸ்டாலின் சொல்கிறார்.

ஒன்றிய அரசை பா.ஜ.க விரும்பவில்லை. ஒற்றை ஆட்சியை நோக்கிய அவர்கள் பயணத்தில் இது பெரிய தடையாக இருக்கும் என்பதால்தான் இவ்வளவு பதற்றப்படுகிறார்கள்.

பா.ஜ.க - தி.மு.க

ஒற்றை நிர்வாகம் என்பது பா.ஜ.க கொள்கை. சர்வாதிகார அரசாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். சர்வாதிகாரத்தை மனதில் சுமந்து திரிபவர்களுக்கு ஒன்றியம் என்ற சொல் பயத்தை, பதற்றத்தை உருவாக்கத்தான் செய்யும். இதன் மூலம் மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தை மீண்டும் ஒரு முறை தி.மு.க உரக்க உணர்த்தியிருக்கிறது” என்றார் அழுத்தமாக!



source https://www.vikatan.com/government-and-politics/politics/what-is-the-dmks-agenda-behind-union-government-politics

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக