பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
சிறுவயதில் சலூன் கடையில், பின் மதிய நேரத்தில் தான் முதன்முதலில் ஏ.எம்.ராஜாவின் பாடலை கேட்டேன்.
சலூன் கடைக்காரர் ராஜாவின் தீவிர ரசிகர். என்னை உட்கார வைத்துவிட்டு ஒரு முழு பீடியையும் வாயிலிருந்து எடுக்காமலேயே அப்பாடலை இசைக்கு தகுந்தபடி தலையாட்டி லயித்தது தேன்நிலவு படத்தில் வந்த 'பாட்டு பாடவா' பாடல்தான். ஒப்பனையில்லாத குரல்.. தெளிந்த நீரோடை போல் இசையில் வார்த்தைகள் இனிமையாய் காதில் வந்து விழுந்தன. அந்த இனிய கானத்துக்கு சொந்தக்காரர்தான் ஏமல மன்மத ராஜூ ராஜா எனும் ஏ.எம்.ராஜா.
நடிகர் மோகனின் குரல் பின்னணி பாடகர் சுரேந்தரனின் குரல் என்றால் எப்படி நம்பாமல் இருந்தோமோ அப்படித்தான் ஜெமினி பாடிய பாடலின் குரல் ஏ.எம்.ராஜா என்றால் நம்ப முடியாது. நூறு சதவீதம் பொருந்தக்கூடிய குரல். இன்றளவும் பிரபலமாய் இருக்கக்கூடிய மிஸ்ஸியம்மா படத்தில் வரும் 'வாராயோ வெண்ணிலாவே' பாடலில் மெட்டுக்கேற்ற வார்த்தைகளும் ராஜாவின் குரலும் தெய்வீகமாய் இருக்கும். அதே படத்தில் வரும் பிருந்தாவனமும் நந்தகுமாரனும் பாடல் மெதுவாக நூல் பிடித்தால் போல் ஆரம்பித்து மென்காற்றில் பட்டம் விடுவது போல தன் மாயக்குரலில் ஜாலம் புரிந்திருப்பார்.
இளம் வயதிலேயே தந்தையை இழந்த ராஜா, தாயின் ஊரான ரேணுகாபுரத்தில் குடியேறி வேலூரில் தன் இண்டர்மீடியட் வகுப்பை முடித்தார். அங்குதான் நரசிம்மலு நாயுடுவிடம் முறையாக இசை பயின்றார். மேற்படிப்புக்காக சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் போதே பாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுப்பாடினார். கர்நாடக மற்றும் மேற்கத்திய இசையில் புலமை பெற்ற இவர் அப்படி பாடியபோதுதான் HMV நிறுவனம் பாட வாய்பளித்தது. தெலுங்கில் "ஓ இதயராணி"," எந்த தூரம்"ஆகிய இரு பாடலை இவரே இசையமைத்து பாடினார். கே.வி.மகாதேவனின் உதவியுடன் அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகி இந்த இசைப் பறவை திரை வானில் பறக்க ஆரம்பித்தது.
லியோ காபி விளம்பர இசையை கேட்டு மணிரத்னத்துக்கு ஏ.ஆர் ரகுமானின் இசை ஈர்த்தது போல அன்று ஜெமினி எஸ்.எஸ்.வாசன் இவரின் தெலுங்குப் பாடலை கேட்டு தனது 'சம்சாரம்' படத்தில் பாடும் வாய்ப்பு அளித்தார். பாடல் வரிகளுக்கு உயிர் கொடுப்பது போன்ற இவரின் குரல் அனைவரையும் கவர்ந்ததில் வியப்பேதுமில்லை.1951ல் தனது பாடலுக்கு இசையமைக்க உதவிய கே.வி மகாதேவன் இசையில் குமாரி படத்தில் 'இருளிலிலே நிலவொளியிலே' பாடலை எம்.ஜி.ஆருக்கு தனது வருங்கால மனைவி ஜிக்கியுடன் இணைந்து டூயட் பாடினார்.
#மென்மையே மெல்லிசையாய்
தமிழில் பாடகராக அறிமுகமானபின் லோகநீதி எனும் திரைப்படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். தமிழில் ஜெமினிக்கு பொருந்துவது போல மலையாளத்தில் சத்யன், பிரேம்நசீருக்கும் அழகாய் பொருந்தின. யாருக்காகவும் தன் குரலில் ஏற்ற இறக்கமோ மாற்றிப் பாடுவதோ இல்லையென தீர்மானமாய் இருந்தார். இரைச்சல் இல்லாத, சுதி விலகாத தெய்வீக குரலாய் அறியப்பட்டார்.
தமிழில் ஜெமினி தவிர்த்து எம்.ஜி.ஆருக்கு பாடிய 'மாசிலா உண்மை காதலே' பட்டி தொட்டியெங்கும் ராஜாவை கொண்டு சேர்த்தது. எஸ்.எஸ்.ஆருக்கு மிகவும் பொருந்திய 'தென்றல் உறங்கிய போதும்' பாடல் எப்போது கேட்டாலும் சலிக்காதவை.
மற்றவர்களது இசையில் இவர் பாடிய பாடல்களை விட இவரே இசையமைத்து பாடிய பாடல்கள் அதிகம் பிரபலமானது. கர்நாடக இசையில் உச்சஸ்தானியில் பாடிய பாடல்கள் வந்துக் கொண்டிருந்த காலத்தில் மென்மையான பாடல்களை இவர் பாடிய போது புதிய சுவை ரசிகர்களுக்கு கிடைத்து பலரை முணுமுணுக்க வைத்தது.
*களத்தூர் கண்ணம்மாவில் ஆடாத மனமும் ஆடுதே, கண்களின் வார்த்தைகள் புரியாதோ..
*குலேபகாவலியில் மயக்கும் மாலை பொழுதே நீ போ போ..
*அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில் வரும் மாசிலா உண்மைக் காதலே
*எதிர்பாராதது படத்தில் சிற்பி செதுக்காத பொற்சிலையே
*ரங்கராட்டினம் படத்தில் முத்தாரமே உன் ஊடல் என்னவோ?
*மீண்ட சொர்க்கம் படத்தில் வரும் 'துயிலா..த பெண் ஒன்று கண்டேன்' மற்றும் 'கலையே என் வாழ்க்கையில்' பாடலிலும் தெளிவும் இயல்பும் ஒரு சேர இருக்கும்.
கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம்,சிங்களம் என அனைத்து மொழிகளிலும் பாடியுள்ளார்.தனது ரொமாண்டிக் வாய்ஸின் மூலம் அனைவரையும் ஈர்த்தார்.
#இசையமைப்பாளர்
1958ல் வந்த சோபா எனும் தெலுங்கு படத்தின் மூலம் இசையமைப்பாளரானார். பாடகராகவும் இசையமைப்பாளராகவும் வெற்றிக்கரமாக இரட்டைக் குதிரையில் சவாரி செய்தார். 1959 ஸ்ரீதரின் கல்யாணப்பரிசு மூலம் இசையமைப்பாளராய் தமிழில் அறிமுகமானார்.'துள்ளாத மனமும் துள்ளும்' பாடலில் அனைவரையும் உருக வைத்திருப்பார். அதிலே 'வாடிக்கை மறந்ததும் ஏனோ' பாடலில் மிதிவண்டியின் வேகத்திற்கு ஏற்ப இசையின் வேகமும் செல்லும்படி இருக்கும். இறுதியில் ஒலிக்கும் 'காதலிலே தோல்வியுற்றான்' பாடலில் படத்தின் மொத்த சாரத்தையும் தனது குரலில் தோய்த்துக் கொடுத்திருப்பார்.
அதில் வந்த உன்னை கண்டு நானாட பாடலில் இன்பத்திலும் துன்பத்திலும் கேட்கும்போது பொருத்தமாய் இதமாய் இருக்கும்.
தேன்நிலவு படத்தில் வரும் பாட்டுப்பாடவா பாடல் மிகச்சிறந்த துள்ளலிசை பாடலாக.. இடையில் கிட்டாரில் ஒலிக்கும் போது
துள்ளல் இசையிலும் ஒரு மென்மை இருக்கும்.அதனை வெகுவாக ரசிக்க வைத்தது. 'சின்ன சின்னக் கண்ணிலே மற்றும் காலையும் நீயே மாலையும் நீயே ஒரு தெய்வீக கானமாகவே ஒலித்தது.'நிலவும் மலரும் பாடுது' பாடலில் இசையும் படகில் பயணம் செய்வது போல் இருக்கும்.இதில் ராஜாவின் குரல் மென்மையாகவும் உணர்ச்சிப் பூர்வமாகவும் லயித்து லயித்துப் பாடியிருப்பார். இப்படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் நன்றாய் இருக்கும். முன்கோபம் மிகுந்த ராஜா அவர்கள் இப்படத்தில் இயக்குநருக்கும் அவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் அடுத்த படமான நெஞ்சில் ஓர் ஆலயத்துக்கு இசையமைக்க மாட்டேன் என மறுத்துவிட்டார்.
ஸ்ரீ தர் தவிர மற்ற இயக்குநரின் படங்களிலும் இசையமைத்துள்ளார். கே.சங்கர் இயக்கத்தில் 1962ல் வந்த ஆடிப்பெருக்கு படத்தின் பாடல்களும் இவருக்கு வெற்றியைத் தந்தது. அதில் வரும் தனிமையிலே இனிமை காண முடியுமா பாடல் தத்துவமாகவும் டூயட்டாகவும் கலந்து இருக்கும்.அப்படத்திலேயே சுசிலா பாடும் காவேரி ஓரம் பாடல் அனைவராலும் விரும்பிக் கேட்டவையாகும்.பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு குமார் இசையில் ரங்கராட்டிணம் படத்தில் பாடினார்.1973 வீட்டு மாப்பிள்ளை படம் மூலம் மீண்டும் வந்தார்.
இவைகள் தவிர இந்தி, சிங்களப் பாடல்களையும் பாடி உள்ளார்.
தன்னுடன் பாடிய சக பாடகியான ஜிக்கியை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கு மகள்கள், இரு மகன்கள் என ஆறு குழந்தைகள். இவரது மகன் சந்திரசேகர் இளையராஜா இசையில் ராசாமகன் படத்தில் காத்திருந்தேன் கண்மணி பாடலை பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் தவிர இந்தியில் பாடிய முதல் பாடகராக ராஜாவும்-ஜிக்கியும் இருந்தனர். திரைத்துறையில் ஏற்பட்ட கசப்பு அனுபவம் காரணமாக விலகி இருந்தாலும் பாடகராக மேடை கச்சேரிகளை செய்து கொண்டிருந்தார். 1989ம் ஆண்டு கன்னியாகுமரியில் நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பும்போது வள்ளியூர் ரயில் நிலையத்தில் இறங்கி ஏற முயன்ற போது எதிர்பாராத விதமாக கால்தவறி விழுந்து தன் 59வது வயதில் மனைவியின் கண் முன்னே இறந்தார். காற்று இருக்கும் வரை இவரின் கானம் இருக்கும். தனிமை இருக்கும் வரை இவரின் பாடல்களில் இனிமை கண்டு கொண்டே இருப்போம்.
-மணிகண்டபிரபு
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
source https://www.vikatan.com/oddities/miscellaneous/special-article-about-a-m-raja
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக