Euro 2020 கால்பந்து தொடர் தற்போது பரபரப்பான நாக்அவுட் கட்டத்தை எட்டியுள்ளது. எப்படியேனும் கோப்பையை வென்றுவிட வேண்டுமென்று ஐரோப்பாவின் டாப் அணிகள் அனைத்தும் முட்டி மோதிக்கொண்டிருக்க மைதானத்திற்கு வெளியேயும் சுவாரஸ்ய சம்பவங்களுக்கு பஞ்சமில்லை. இதில் மிக முக்கியமான ஒன்று, கால்பந்து உலகின் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கோலா சர்ச்சை.
பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் தனக்கு முன்னே வைக்கப்பட்டிருந்த கோக-கோலா பாட்டில்களை அகற்றிவிட்டு அதற்குபதில் தண்ணீர் பாட்டிலை வைத்து, ''தண்ணீர் குடியுங்கள்'' என்றார் ரொனால்டோ. அவரின் இச்செய்கையால் கோககோலாவின் பங்குச் சந்தை மதிப்பே சரிந்தது.
இப்போதல்ல ஏற்கெனவே பலமுறை கோலா பானங்களைக் குடிக்கக்கூடாது, உடலுக்கு நல்லதல்ல எனப் பேசியிருக்கிறார் ரொனால்டோ. கோலாவைத் தவிர்க்கும் ரொனால்டோவின் உணவுப் பழக்கம் என்ன, 36 வயதிலும் செம ஃபிட்டாக இருப்பது எப்படி?!
“பெரும்பாலும் சிக்கன், பிரொக்கோலி மற்றும் புரத உணவுகளையே அதிகம் எடுத்துக்கொள்வார் ரொனால்டோ. சோடா அடங்கிய குளிர்பானங்களை முற்றிலுமாக தவிர்க்கும் அவர் அதிக அளவில் தண்ணீர் குடித்து தன் உடலின் நீர் அளவினை சரியான அளவில் வைத்துக்கொள்வார் ” என்கிறார் தற்போது ரொனால்டோ விளையாடிடிவரும் கிளப் அணியான யுவன்டஸ் அணியின் சக வீரர் Daudas Peeters.
உண்மையில் ரொனால்டோ கடைபிடிக்கும் உணவு முறைகள் நமக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளன. 2003-ம் ஆண்டு மான்செஸ்டர் யுனைடட் அணிக்காக அறிமுகமானபோது மிகவும் ஒல்லியான தோற்றத்தை கொண்ட பதின்பருவ இளைஞனாக இருந்தார் ரொனால்டோ. ஆனால், இன்று உலகின் மிகவும் ஃபிட்டான அத்லெட்களுள் ஒருவராக வலம் வருவதற்கு அவரின் உணவு முறைகள் மிக முக்கிய காரணம்.
‘’ஒரு சிறந்த வீரரின் வொர்க் அவுட் என்பது நல்ல உணவுடன் இணைந்ததே” என்று கூறும் ரொனால்டோ அதிக அளவில் புரத சத்து நிறைந்த உணவுகளையே உட்கொள்கிறார். முழு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய அவரது உணவில் சர்க்கரை என்பது அறவே கிடையாது. மேலும் ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு மணி நேர இடைவெளியில் ஆறு வேளை உணவு உண்டு சராசரியாக 3,200 கலோரிகள் எடுத்துக்கொள்ளும் ரொனால்டோவுக்கு பிடித்த உணவு மீன். மயில் மீன்(Swordfish), கொடுவா (Sea Bass), விலை மீன் (Sea Bream) என இந்த மூன்றுவகை மீன்களைத்தான் அதிகம் உண்பாராம். அதேப்போல் எப்போதுமே பதப்படுத்தப்பட்ட உணவுகள் பக்கமே போவதில்லை. ஃப்ரெஷ்ஷான காய்கறிகள், பழங்கள், இறைச்சிகள் மட்டுமே!
மது அருந்தும் பழக்கம் ரொனால்டோவுக்கு இல்லை. அவரது தந்தை மதுவுக்கு அடிமையாக இருந்து உயிரிழந்ததால் மதுவைத்தான் வெறுப்பதாக பேட்டியளித்திருக்கிறார் ரொனால்டோ.
உணவுக்கு அடுத்தபடியாக தனது மன வலிமையை பேணுவதில் அதிக கவனம் செலுத்தும் ரொனால்டோ அதுவே ஒரு தனிமனிதன் தன் இலக்குகளை அடைய மிகப்பெரிய சக்தி என தீர்க்கமாக நம்புபவர். மேலும் தனது மனநிலையை ஆரோக்கியமாக வைத்துகொள்ள நாம் அனைவரும் கடைபிடித்து வரும் எட்டு மணி நேர தூக்க முறையை விடுத்து நாள் ஒன்றுக்கு ஐந்து முறை 90 நிமிட குட்டி தூக்கம் போடுவாராம் ரொனால்டோ.
என்னதான் பயிற்சி மற்றும் உடல் அமர்வுகள் மிக முக்கியமானவை என்றாலும் நிதானமான வாழ்க்கை முறையை வாழ்வது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஒரு மனிதன் சிறந்தவராக இருக்க உதவுகிறது எனும், ரொனால்டோ தனது ஓய்வு நேரத்தை குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் செலவிடுவதை தவறவிடுவதில்லை.
source https://sports.vikatan.com/sports-news/footballer-cristiano-ronaldos-fitness-and-diet-plan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக