Ad

செவ்வாய், 29 ஜூன், 2021

திருப்பூர்: பிரசவத்துக்குச் சென்ற பெண்ணுக்கு கொரோனா! - அச்சத்தில் பழங்குடி கிராமம்

கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்துவந்தாலும், பல இடங்களில் அதன் தாக்கம் இப்போதும் இருக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்டு ஏராளமான பழங்குடி கிராமங்கள் உள்ளன. அவற்றில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த, பழங்குடிப் பெண் ஒருவர், தனது மூன்றாவது பிரசவத்துக்காக உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

கொரோனா

Also Read: 11 பழங்குடி குடும்பங்களுக்குத் தடுப்பூசி; 10 கி.மீ காட்டில் நடந்த சுகாதாரத்துறையினர்!

அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டது. ஆனால், அவருக்கு கொரோனா வைரஸுக்கான எந்த அறிகுறியும் இல்லை.

இதனால், நல்லபடியாக குழந்தையைப் பிரசவித்துவிட்டார். இந்தநிலையில், அந்தப் பெண்ணின் கிராமத்தில் சுமார் 20 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாள்களாகவே அங்கு சிலர் காய்ச்சல், சளி, இருமல், உடல்வலி போன்ற அறிகுறிகளுடன் தவித்துவருகின்றனர்.

பழங்குடிகள்

இதையடுத்து, அவர்களுக்கும் கொரோனா வைரஸ் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. அந்த கிராமத்தில் சுமார் 600 பேர் வசித்துவருகின்றனர். ஆனாலும், சாலை, மின்சாரம், மருத்துவம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் அங்கு இல்லை.

ஏற்கெனவே, அங்கு சிலருக்கு கொரோனா அறிகுறி இருந்து சரியாகியிருக்கிறது. அதேபோல மீண்டும் சிலருக்கு அறிகுறி இருப்பதால், அவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. ஆம்புலன்ஸ் போன்றவை அந்த கிராமத்துக்குச் செல்ல சில மணி நேரமாகும். அதேபோல, மக்கள் வெளியில் வரவே வனப்பகுதியிலிருந்து 11 கி.மீ பயணம் செய்ய வேண்டும்.

இதனால், அரசுத் தரப்பில் மருத்துவக்குழுவை அனுப்பி பரிசோதனை செய்ய வேண்டும் என்று பழங்குடி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதில் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகளும் உறுதியளித்துள்ளனர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/tribe-woman-tested-positive-for-corona-in-thirupur

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக