வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் நீலகிரியில் பெரும்பாலான வனப்பகுதிகள் தொடர்ந்து துண்டாடப்படுவதால் உணவு, தண்ணீர், இனப்பெருக்கம் போன்றவற்றுக்காக யானை, காட்டுமாடு போன்ற வன விலங்குகள் இடம் விட்டு இடம் பெயர்வதில் கடுமையான சிக்கல் நிலவி வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடியலையும் வன விலங்குகள் குடியிருப்புகளுக்கும், விளை நிலங்களுக்கும் வர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.
அதிலும் குறிப்பாக இயற்கையான வாழிட சூழலை இழந்து தவிக்கும் Indian Gaur எனப்படும் காட்டுமாடுகள் தேயிலை மற்றும் காப்பி தோட்டங்களையே தங்களின் புகலிடமாக மாற்றிக் கொண்டுள்ளன. இதனால் தோட்டங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் இறந்த நிலையில் காட்டுமாடுகளை கண்டெடுப்பது அதிகரித்துள்ளது. நேற்று முந்தினம் ஒரே நாளில் மட்டும் இடுஹட்டி பகுதியில் ஒரு காட்டுமாடும், முட்டிநாடு பகுதியில் ஒரு காட்டுமாடும் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. மேலும் கோத்தகிரி பகுதியில் உள்ள ஒரு தனியார் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை ஒன்றும் சடலமாக மீட்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று முந்தினம் கட்டபெட்டு பகுதியில் உயிரிழந்த காட்டுமாட்டினை கூறாய்வு செய்யாமலேயே வனத்துறையினர் ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியுடன் யாருக்கும் தெரியாமல் புதைத்து மூடி மறைத்துள்ளனர். இந்த முறைகேட்டை கண்டறிந்த சூழலியல் செயற்பாட்டாளர்கள், வனத்துறையின் உயர் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததால் மீண்டும் காட்டுமாட்டின் சடலைத்தை தோண்டியெடுத்து நேற்று கூறாய்வு செய்தனர்.
இந்த முறைகேடு குறித்து நம்மிடம் பேசிய வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையின் நிறுவனர் சாதிக் அலி, "இறந்த வன விலங்குகளின் உடலை கட்டாயம் போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டும். வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்திலேயே இந்த விதி உள்ளது. போஸ்ட்மார்ட்டம் செய்வதன் மூலம் மட்டுமே குறிப்பிட்ட வன விலங்கின் இறப்புக்கான காரணத்தை கண்டறிய முடியும். ஆனால், கட்டபெட்டு பகுதியில் உயிரிழந்த காட்டுமாட்டினை போஸ்ட்மார்ட்டம் செய்யாமலேயே புதைத்துள்ளனர். இந்த தவற்றை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து அறிந்து, உடனடியாக மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவித்தோம். தற்போது அந்த காட்டுமாட்டின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டு போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டுள்ளது" என்றார்.
இந்த விவகாரம் குறித்து ரேஞ்சர் ஒருவரிடம் பேசினோம், "இறந்தது ஒரு ஆண் காட்டுமாடு. கால்நடை மருத்துவர்கள் ராஜன் மற்றும் மனோகரன் தலைமையில் உடற்கூறாய்வு நடைபெற்றது. இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.
எனினும் உடற்கூறாய்வு செய்யாமலேயே காட்டுமாட்டினை புதைத்தது தொடர்பாகவும், மீண்டும் தோண்டியெடுத்து கூறாய்வு செய்யப்பட்டது குறித்தும் நாம் எழுப்பிய எந்த கேள்விக்கும் வனத்துறை அதிகாரிகள் பதில் அளிக்கவில்லை.
source https://www.vikatan.com/news/tamilnadu/indian-gaur-postmortem-controversy-in-nilgiris
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக