Ad

செவ்வாய், 29 ஜூன், 2021

வந்தவாசி: `குழந்தையை விற்றுவிட்டு வேறு பெண்ணுடன் திருமணம்!' - புகாரளித்த காதலியும் சிக்கியது எப்படி?

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த தாழம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்குமார். இருவரும் கடந்த ஏழு ஆண்டுகளாகக் காதலித்ததாகச் சொல்லப்படுகிறது. ராணி, திருப்பூரில் தங்கி, பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்துவந்ததாகக் கூறப்படுகிறது. காதலியுடன் சரத்குமாரும் அதே இடத்தில் தங்கியிருந்திருக்கிறார். திருமணம் செய்துகொள்ளாமலேயே இருவரும் ஒன்றாக வாழ்ந்துள்ளனர். இந்தநிலையில், ராணி கர்ப்பம் தரித்துள்ளார். திருமணத்துக்கு முன் கர்ப்பமாக இருப்பது தெரிந்தால் ஊரிலும், உறவினர்கள் முன்னிலையிலும் தவறாகப் பேசப்படும் என்பதால் ராணியை ஊருக்கு அழைத்துச் செல்லாமல், தன் பெற்றோரின் உதவியோடு செங்கல்பட்டை அடுத்த கிராமம் ஒன்றில், வாடகை வீட்டில் சரத்குமார் தங்கவைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

குழந்தையுடன் பெற்றோர்

இந்தநிலையில், ஜனவரி மாதம் ராணிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. 'திருமணம் ஆகாமல், குழந்தையுடன் ஊர் முன்னால் சென்றால் தவறாகப் பேசக்கூடும். எனவே, குழந்தையை உறவினர் யாரிடமாவது கொடுத்துவிட்டு முறைப்படி நாம் திருமணம் செய்துகொள்வோம்’ என ஆசைவார்த்தை கூறிவிட்டுச் சென்ற காதலர் சரத்குமார், `உறவினரிடம் குழந்தையைக் கொடுக்காமல், எனக்குத் தெரியாமல் வேறொரு நபரிடம் குழந்தையை விற்றுவிட்டார்' என்றும் , 'திருமணம் செய்வதாகக் கூறித் தன்னை ஏமாற்றிவிட்டு, கடந்த மாதம் 13-ம் தேதி வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்' எனவும் வந்தவாசி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் ராணி.

வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், வந்தவாசியைச் சேர்ந்த ஏழுமலை மூலம் சென்னையைச் சேர்ந்த ஜோதி, கலைவாணி, முனியம்மாள் ஆகியோரிடம் குழந்தை 3.6 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டதும், அங்கிருந்து ஈரோடு பகுதியைச் சேர்ந்த நதியா, நந்தினி, ஜானகி ஆகியோரிடம் 5 லட்சம் ரூபாய்க்குக் குழந்தை கைமாற்றி விற்பனை செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது. குழந்தை மீட்கப்பட்டு தாயிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்ட சரத்குமார், ஏழுமலை, நந்தினி, ஜானகி ஆகியோரை முதற்கட்டமாகக் கைதுசெய்தனர் போலீஸார். மேலும், தலைமறைவாக இருந்த் மீதமுள்ள நபர்களை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டையையும் முடுக்கிவிட்டிருந்தனர். இந்தநிலையில், தலைமறைவாக இருப்பவர்கள் சென்னையில் இருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் நேற்று இரவு அங்கு விரைந்த காவல்துறையினர், ஜோதி, கலைவாணி, முனியம்மாள், நதியா உள்ளிட்ட நால்வரையும் கைதுசெய்துள்ளனர். மேற்கொண்டு விசாரணையைத் தொடர்ந்தபோது, ராணியும் சரத்குமாரும் இணைந்தே குழந்தையை விற்பனை செய்ததும், 'தன் காதலன் தன்னை விட்டுவிட்டு மற்றொரு பெண்ணைத் திருமணம் செய்யப்போகிறார்' எனும் ஆதங்கத்தில் ராணி இப்படி வழக்கு பதிவு செய்ததும் தெரியவந்துள்ளது. இந்தநிலையில், குழந்தையை விற்பதற்கு உடந்தையாக இருந்த ராணியையும் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஒன்பது பேரின் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர்.

நேற்று இரவு கைது செய்யப்பட்ட 5 நபர்கள்

இது தொடர்பாக வந்தவாசி மகளிர் காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு பேசினோம். ``ருவரும் காதலித்துவந்துள்ளனர். இவர்களுக்குக் குழந்தை பிறந்துள்ளது. 'தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லிவிட்டு, மற்றொரு பெண்ணைத் திருமணம்செய்துள்ளதாகவும், தனக்குத் தெரியாமல் குழந்தையைக் காதலர் விற்றுவிட்டார்' என்றும் குழந்தையின் தாய் புகார் அளித்திருந்தார். இறுதி விசாரணை முடிவில், குழந்தையை இருவரும் சேர்ந்து விற்றதும், வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ததால் அந்தப் பெண் இவ்வாறாக புகாரைக் கொடுத்ததும் தெரியவந்தது. குழந்தையின் பெற்றோர் உட்பட மொத்தம் ஒன்பது பேரைக் கைது செய்து ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம்" என்றனர்.



source https://www.vikatan.com/social-affairs/crime/vandavasi-police-arrested-9-people-under-baby-trafficking-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக