Ad

வியாழன், 24 ஜூன், 2021

ஆர்டர் செய்த உணவில் கரப்பான் பூச்சி; இன்ஸ்டாவில் கொந்தளித்த நிவேதா பெத்துராஜ்! - நடந்தது என்ன?

ஆன்லைன் வாயிலாக உணவுகளை ஆர்டர் செய்பவர்கள் மற்றும் நேரடியாக உணவகங்களை நாடிச்செல்வோரின் எண்ணிக்கை சமீப காலங்களில் உயர்ந்துவருகின்றன. இதுபோன்ற தருணங்களில், சில உணவகங்களில் கவனக்குறைவாகவும் சுகாதாரமற்ற முறையிலும் உணவுகளைத் தயாரிப்பதாகக் குற்றச்சாட்டுகளும் அவ்வப்போது முன்வைக்கப்படுகின்றன. அப்படியொரு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார் நடிகை நிவேதா பெத்துராஜ்.

நிவேதா பெத்துராஜ்

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ள கருத்து, பேசுபொருளாக மாறியுள்ளது. ``என்னுடைய உணவில் ஒரு கரப்பான் பூச்சியைப் பார்த்தேன். அதுவும் இதுபோல இரண்டாவது முறையாக நடக்கிறது. இது மாதிரியான உணவங்களைத் தொடர்ந்து கண்காணித்து அவர்களின் தரத்தை உறுதிசெய்ய வேண்டும். அதை மீறும்பட்சத்தில் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும். இந்த உணவகத்தின்மீது புகார் செய்ய வேண்டும். அவர்கள் தரமாக உணவுகளைத் தயாரித்து டெலிவரி செய்கிறார்களா என்பதையும் சோதனை செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டிருப்பதுடன், சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் இயங்கும் அந்த உணவகத்தின் பெயரையும் குறிப்பிட்டு, அங்கிருந்து தனக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருப்பதையும் புகைப்படம் எடுத்துப் பதிவிட்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து, தனக்கு உணவு டெலிவரி செய்த ஸ்விகி நிறுவனத்திடம் புகார் செய்திருக்கிறார் நிவேதா. அவருக்கு வழங்கப்பட்ட உணவுக்கான தொகையைத் திருப்பி அனுப்புவதாக அந்த உணவு டெலிவரி நிறுவனம் பதில் அனுப்பவே, அதை விமர்சிக்கும் வகையிலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார் நிவேதா பெத்துராஜ். இதைத் தொடர்ந்து அவரது பதிவிற்கு ஆதரவாகவும், இதுபோன்று தங்களுக்கு நிகழ்ந்த அனுபவங்களையும் பலரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தனர்.

நிவேதா பெத்துராஜின் இன்ஸ்டாகிராம் பதிவு

இதன் பின்னர், ஸ்விகி நிறுவனத்தில் இருந்து நிவேதாவுக்கு அழைத்துப் பேசியுள்ளனர். அடுத்த 48 மணிநேரத்தில் சம்பந்தப்பட்ட உணவகத்தின்மீது நடவடிக்கை எடுப்பதாக ஸ்விகி நிறுவனம் அவரிடம் உறுதியளித்துள்ளது. இதையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளவர், ``இதுபோன்ற உணவகங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட வேண்டும். விலைக்கு ஏற்ற தரத்தில் உணவுகள் இருக்க வேண்டுமல்லவா! சுவை, பேக்கேஜிங் முறையில் குறைபாடு இருந்தால்கூட பரவாயில்லை. ஆனால், உணவில் கரப்பான் பூச்சி இருப்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாததுதானே. இதுபோன்ற உணவகங்களைக் கண்டறிந்து எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டும்” என்றும் தனது கருத்தை ஆதங்கத்துடனும் அக்கறையுடனும் பதிவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அந்த உணவகக் கிளைக்குத் தற்காலிக தடை விதித்துள்ள உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், குறைகளை நிவர்த்தி செய்து புகைப்பட ஆதாரங்களை மூன்று நாள்களுக்குள் சமர்ப்பிக்கவும் அந்த உணவகத்துக்கு உத்தரவிட்டுள்ளனர்.

Swiggy

Also Read: `அன்று நான் அந்த பார்ட்டிக்கு போயிருக்கக் கூடாது!’ - #MeToo குறித்து நிவேதா பெத்துராஜ்

இந்தச் சம்பவம் குறித்துப் பேசுவதற்காக நிவேதா பெத்துராஜை தொடர்பு கொண்டோம். ஆனால், அவர் அழைப்பை ஏற்கவில்லை. சம்பந்தப்பட்ட உணவகத்தின் விளக்கம் பெற, அந்த உணவகத்தின் சில கிளைகளுக்கு அழைத்துப் பார்த்தோம். அழைப்பை ஏற்று பேசியவர்கள், முறையான பதில் அளிக்கவில்லை. நிவேதா பெத்துராஜ் மற்றும் உணவகத்தின் தரப்பில் இருந்து விளக்கம் கிடைக்கும்பட்சத்தில், பரிசீலனைக்குப் பிறகு அதை வெளியிடவும் தயாராக இருக்கிறோம்.



source https://cinema.vikatan.com/food/nivetha-pethuraj-slams-swiggy-service-as-she-finds-cockroach-in-delivered-food

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக