Ad

ஞாயிறு, 27 ஜூன், 2021

சென்னை: தொழிலதிபரைக் கடத்தி சித்ரவதை! -போலீஸ் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு

சென்னை அயப்பாக்கம். 5-வது தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ். தொழிலதிபர். இவர் தேனாம்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேசன், அப்போதைய திருமங்கலம் உதவி கமிஷனர் சிவகுமார், இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் உள்பட 10 பேர் மீது டிஜிபி, சென்னை போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோருக்கு சில மாதங்களுக்கு முன் புகாரை அனுப்பியிருந்தார். இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் சிபிசிஐடி உதவி கமிஷனர் கண்ணன் தலைமையிலான போலீஸார் விசாரித்தனர்.

டிஜிபி அலுவலகம்

விசாரணையின் அறிக்கையை டிஜிபி-யிடம் சிபிசிஐடி போலீஸார் சமர்பித்தனர். டிஜிபி-யின் உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது ஆள்கடத்தல் கொலை மிரட்டல் சொதுக்களை அபகரித்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அடுத்தக்கட்டமாக துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: சிசிடிவி-யில் சிக்கிய சென்னைப் பெண் போலீஸ்! - கடை உரிமையாளருக்கு அடி, உதை #Shame

இதுகுறித்து சிபிசிஐடி போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``புகாரளித்த ராஜேஷிக்கும் குற்றம் சுமத்தப்பட்ட வெங்கடேசனுக்கும் தொழில், பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது. வெங்கடேசன் தரப்பு கொடுத்த புகாரின்அடிப்படையில் அப்போதைய திருமங்கலம் உதவி கமிஷனர் சிவகுமார், இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் உள்பட சிலர் ராஜேஷ் அவரின் குடும்பத்தினரை சட்டவிரோதமாக பண்ணை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்திருக்கின்றனர். பின்னர் ராஜேஷின் பெயரில் இருந்த சொத்துக்களை மிரட்டி அவர்கள் எழுதி வாங்கியிருக்கின்றனர்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம்

சொத்துக்கள் கைமாறிய விவரங்கள், கடத்தப்பட்ட போது பதிவான சிசிடிவி கேமரா பதிவுகள், செல்போன் அழைப்புகள் உள்ளிட்டவைகளை ஆதாரமாக டிஜிபிக்கு ராஜேஷ் அனுப்பி வைத்தார். அதன்பிறகுதான் இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்தபோது ராஜேஷ் கூறிய புகாரில் முகாந்திரம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையைச் சேர்ந்தவர்கள் உள்பட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறோம். சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளோம். இந்தச் சம்பவத்தில் ராஜேஷின் வருங்கால மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் குற்றச்சாட்டப்பட்டிருக்கிறது. ராஜேஷ் அவரின் குடும்பத்தினர் சென்னையை விட்டு கொங்கு மண்டலத்துக்கு குடிபெயர்ந்திருக்கின்றனர்" என்றார்.

தமிழக காவல்துறையினர் குற்றசாட்டுக்களில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது.



source https://www.vikatan.com/news/crime/cbcid-police-filed-case-against-police-assistant-commissioner-team-in-chennai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக