ஈரோடு, திண்டல் லட்சுமி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவரின் மகள் நித்யா (37). இவருக்கும் சென்னை மாங்காட்டைச் சேர்ந்த பாஸ்கர் (40) என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகியிருக்கிறது. இவர்களுக்கு மகதி (11), யாதவ்கிருஷ்ணா (6) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். பாஸ்கர் பிரபலமான சூப்பர் மார்க்கெட் ஒன்றில் சீனியர் மேனேஜராகப் பணியாற்றி, நல்ல சம்பளத்துடன் மனைவி, குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்துள்ளார்.
எதிர்பாராதவிதமாக மே 2-ம் தேதி பாஸ்கருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு நடந்த பரிசோதனைகளில் பாஸ்கருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. உடனே தனியார் மருத்துவமனையில் அனுமதித்து, தீவிர சிகிச்சை கொடுத்திருக்கின்றனர். சிகிச்சை பலனின்றி மே 9-ம் தேதி பாஸ்கர் உயிரிழந்தார். பாஸ்கர் உயிரிழந்ததைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அவருடைய மனைவி நித்யா உடைந்துபோய் கதறி அழுதிருக்கிறார். சென்னையில் உறவினர்கள் என யாரும் இல்லாததால், கணவருடைய சடலத்தை ஆம்புலன்ஸில் எடுத்துக்கொண்டு அடக்கம் செய்வதற்காக பெற்றோர்கள் வசித்துவந்த ஈரோட்டுக்கு வந்திருக்கிறார். ஈரோடு மின் மயானத்தில் தகனம் செய்ய இடம் கிடைக்காததால், எடப்பாடிக்குச் சென்று தகனம் செய்து வந்திருக்கின்றனர். கணவர் இறந்ததை தாங்கிக்கொள்ள முடியாமலும், கணவர் சடலத்துடன் பயணித்ததும் நித்யாவுக்கு மனரீதியாக கடும் அழுத்தத்தைக் கொடுத்திருக்கிறது. மனநிலை மாற்றத்துக்காக இர்ண்டு குழந்தைகளுடன் ஈரோடு திண்டலிலுள்ள பெற்றோர் வீட்டிலேயே நித்யா தங்கியிருக்கிறார்.
இருந்தபோதிலும், கணவர் இறந்த துக்கத்திலிருந்து மீள முடியாமல், சரியாகச் சாப்பிடாமலும், யாரிடமும் பேசாமலும் நித்யா இருந்திருக்கிறார். இந்தநிலையில் 24-ம் தேதி மதியம் சுமார் 2 மணியளவில் குழந்தைகள் இருவரையும் தனி அறைக்குள் அழைத்துச் சென்ற நித்யா, கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டார். நீண்ட நேரமாகியும் நித்யா அறையின் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவைத் தட்டியுள்ளனர். ஆனால், கதவு திறக்கப்படவேயில்லை. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நித்யா மற்றும் குழந்தைகள் இருவரும் மயங்கியநிலையில் கிடந்திருக்கின்றனர். உடனே அவர்களை மீட்டு, ஈரோட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை கொடுத்திருக்கின்றனர். இருந்தும் சிகிச்சை பலனின்றி ஒவ்வொருவராக வரிசையாக உயிரிழந்துள்ளனர். ஈரோடு தாலுகா போலீஸார் நடத்திய விசாரணையில் பூச்சி மருந்தை நித்யா குழந்தைகளுக்குக் கொடுத்தும், அவரும் அதைச் சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்திருக்கிறது. கணவர் இறந்த துக்கம் தாளாமல் மனைவியும் குழந்தைகளும் விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஈரோட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/government-and-politics/death/in-erode-woman-suicide-with-her-two-childrens-after-her-husband-died-due-to-covid
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக