2011-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தோற்றதற்கு மிகப்பெரிய காரணம் மின்வெட்டு என்பது உலகம் அறிந்த செய்தி. ஆனால், அதற்கு பிறகு அரியணை ஏறி கடந்த பத்தாண்டுகளாக தமிழ்நாட்டை ஆண்ட அ.தி.மு.க-வின் ஆட்சியில் மின்வெட்டு இல்லை. அதை, மிகப் பெருமையாக அ.தி.மு.க-வினர் பேசிக்கொண்டார்கள். ஆனால், அதற்கு விலையாக ரூ.13,000 கோடி மக்களின் வரிப்பணம் சூறையாடப்பட்டிருக்கிறது என்கிற அதிர்ச்சித் தகவல் இப்போது வெளியாகியிருக்கிறது.
தவறான நிர்வாகம் காரணமாக, தமிழ்நாடு மின்சார வாரியம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதாக கடந்த பல ஆண்டுகளாகப் பேசப்பட்டுவந்தது. தொழிற்சங்கத்தினர், நேர்மையான ஓய்வுபெற்ற அதிகாரிகள் எனப் பலரும் இது குறித்து கவலையுடன் பேசிவந்தனர். தனியார்மயத்தில் மின்வாரியம் தள்ளிவிடப்பட்டதன் காரணமாக, மோசமான விளைவுகள் ஏற்பட்டன. அதிக விலை கொடுத்து தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதில் ஆட்சியாளர்கள் அதீத ஆர்வம் காட்டினார்கள். பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதற்கு அதுதான் முக்கியக் காரணம். 2018-19 ஆண்டின் நிலவரப்படி, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இழப்பு ரூ.13,176 கோடி என இந்திய கணக்காயர் தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதற்கு நீண்ட கால ஒப்பந்தங்களை தமிழ்நாடு மின் வாரியம் போட்டது. நீண்ட கால ஒப்பந்தம் என்பது ஆட்சியாளர்களுக்கும் தனியார் மின்சார நிறுவனங்களுக்கும் பொன்முட்டையிடும் வாத்து போன்றது. ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 12 .77 என விலை கொடுத்து தனியாரிடமிருந்து வாங்கியிருக்கிறார்கள். அப்போது, சந்தையில் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை ரூ.3.39 என்றும்,. அதிகபட்ச விலையாக ரூ. 5.42 என்றும் இருந்தது. ஆனால், ரூ.9 கூடுதலாகக் கொடுத்து ஒரு யூனிட் மின்சாரத்தை தனியாரிடமிருந்து வாங்கியிருக்கிறார்கள். இதை கொள்ளை என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது?
இதுகுறித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சி.ஐ.டி.யு) பொதுச்செயலாளர் ராஜேந்திரனிடம் பேசினோம்.
“அரசால் தொடங்கப்பட்ட மின் உற்பத்தித் திட்டங்களை முந்தைய அ.தி.மு.க அரசு நிறுத்தியது. கிட்டத்தட்ட ரூ. 3,000 கோடி அளவுக்கு செலவு செய்யப்பட்ட பிறகு, எண்ணூர் அனல்மின் நிலையம், உப்பூர் அனல்மின் நிலையம் பணிகளை வேண்டாம் என்று நிறுத்தினார்கள். எதற்கெடுத்தாலும் தனியார் தனியார் என்று தனியாரை நோக்கியே ஓடினார்கள்.
அரசின் மின் உற்பத்தி நிலையங்களில் ஒரு யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய ரூ.6.93 செலவாகிறது என்றும், வெளிச்சந்தையில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 4 .50 என்ற விலையில் கிடைப்பதாகவும் முந்தைய மின்வாரியத் தலைவர் பங்கஜ் குமார் பன்சால் கூறினார். அதானி நிறுவனத்திடமிருந்து ஒரு யூனிட் மின்சாரம் ரூ.7-க்கு வாங்குவதற்கு 2028-ம் வரை ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு மின் வாரியத்துக்கு ஒரு லட்சத்து 31 ஆயிரம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது. கிட்டத்தட்ட அதே அளவுக்கு தமிழ்நாடு முழுவதும் மின் வாரியத்துக்கு சொத்துகள் இருக்கின்றன. ஆனால், புக் வேல்யூ அடிப்படையில் சொத்து மதிப்பை சொல்கிறார்கள். உண்மையில், தமிழ்நாடு மின்வாரியத்தின் சொத்து மதிப்பு இதைவிட பல மடங்கு அதிகம். எப்படியென்றால், ஒரு டிரான்ஸ்பார்மரின் மதிப்பு பல கோடி. அது காலாவதியான பிறகு அதன் மதிப்பு ஜீரோவாகக் கணக்கிடப்படுகிறது. ஆனால், அந்த டிரான்ஸ்பார்மரைப் பிரித்து அதிலுள்ள பொருள்களை விற்றால் இரண்டு கோடி ரூபாய் கிடைக்கும். இப்படி ஒவ்வொன்றையும் கணக்கிட்டால் எங்கள் சொத்து மதிப்பு அதிகம். ஒரு லட்சத்து 31 ஆயிரம் கோடி கடன் இருக்கிறது. கடனுக்கு காரணம். ஊழியர்கள் கிடையாது. மின்வாரியத்தில் 42,000 காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் இருக்க வேண்டிய இடத்தில், வெறும் 72,000 பேர் தான் இருக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் 300 பேர் ஓய்வுபெற்று செல்கிறார்கள். இந்தச் சூழலில், ஊழியர்கள் கடுமையாகவும் கூடுதலாகவும் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. இப்போது ஓய்வுபெறும் வயதை 58-லிருந்து 60 வயது என மாற்றப்பட்டுள்ளது. மின் கம்பத்தில் ஏறுவது போன்ற கடினமான களப்பணிகளை 58 வயதில் செய்ய முடியாது. எனவே, அவர்களுக்கு பதவி உயர்வு கொடுத்து, கீழ் வேலைகளுக்கு புதிதாக ஆள் எடுக்க வேண்டும்.
தனியார்மயத்துக்குப் போகாதீர்கள் என்று அ.தி.மு.க அரசிடம் எவ்வளவோ சொல்லிப்பார்த்தோம். அவர்கள் கேட்கவில்லை. மின்பாதைகள் பராமரிப்பை தனியாரிடம் விட்டார்கள். துணைமின்நிலையங்களையும்கூட தனியாரிடம் கொடுப்பதற்கு துணிந்தார்கள். இதெல்லாம் மிகவும் ஆபத்தான போக்கு. எனவே, தமிழ்நாடு முழுவதும் ஒட்டுமொத்த மின்வாரிய பணியாளர்களும் வேலைநிறுத்தத்தில் இறங்கினோம். அதன் பிறகுதான், துணைமின் நிலையங்களைத் தனியாரிடம் கொடுக்கும் ஒப்பந்தத்தை ரத்துசெய்தார்கள். கடந்த பல மாதங்களாக பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை. பருவமழை தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக களத்தில் பராமரிப்பு பணிகளை ஆரம்பித்துவிடுவோம். சென்னை போன்ற பெருநகரங்களில் கேபிள், பில்லர் பாக்ஸ் சரியாக இருக்கின்றனவா என்று சோதித்துப் பார்த்து சரிசெய்வோம். சென்னைக்கு வெளியே மற்ற பகுதிகளில் சாய்ந்துள்ள மின் கம்பங்களைச் சரிசெய்து, மின் கம்பியில் சாயும் மரக்கிளைகளை வெட்டுவது போன்ற பணிகளை ஒரு மாத காலம் முழுவதும் மேற்கொள்வோம்.
போதுமான பணியாளர்கள் இருந்தால்தான் இந்தப் பணியை முழுமையாக செய்ய முடியும். எனவேதான், காலியாக இருக்கும் 23,000 பதவிகளை நிரப்புங்கள் என்று சொன்னோம். ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தப்படுத்துங்கள் என்று சொன்னோம். முந்தைய ஆட்சியாளர்கள் எதையும் கண்டுகொள்ளவே இல்லை. அதனால் நிறைய சிரமங்கள் ஏற்பட்டன. எங்களுடைய பல போராட்டங்களுக்குப் பிறகு, தேர்தலுக்கு சற்று முன்பாக 9,613 கேங்மேன்களை பணிநியமனம் செய்தார்கள்.
தனியாரிடம் மின்சாரம் வாங்குவதில்தான் பல கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படுகிறது. அரசின் அனல் மின் நிலையங்களில் முழு வீச்சில் இயக்கினாலே தமிழ்நாட்டின் மின் தேவையை ஓரளவு பூர்த்தி செய்ய முடியும். அதுபோக, மத்தியிலிருந்து நமக்கு மின்சாரம் கிடைக்கிறது. நீண்ட கால அடிப்படையில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் வாங்கப்படும் மின்சாரம் இருக்கிறது. இதை வைத்து நம்முடைய மின் தேவையை சமாளிக்க முடியும்.
ஆனால், அரசின் அனல் மின் நிலையங்களில் தனியாருக்கு கான்ட்ராக்ட் அடிப்படையில் பணிகளைக் கொடுத்து அதில் ஏராளமான சீர்கேடுகள் நடக்கின்றன. புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, அனல் மின் நிலையங்களை முழுவீச்சில் இயக்குவதாகச் சொல்லியிருக்கிறார்கள். இதில், மின் வாரியத்தின் புதிய தலைவர் ஆர்வம் காட்டுகிறார். தொழிற்சங்கங்களிடம் அவர் ஆலோசனைகளைக் கேட்கிறார். இது ஒரு நல்ல மாற்றமாகவும் நல்ல தொடக்கமாகவும் தெரிகிறது. மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மின் வாரியத்தின் பிரச்னைகளை முழுமையாக ஆய்வுசெய்து அறிந்துகொண்டு பிரச்னைகளை சரிசெய்வதில் முழு கவனம் செலுத்தினால், மக்களுக்கு சிறப்பான மின் சேவையை வழங்க முடியும்” என்றார் ராஜேந்திரன்.
Also Read: `தி ஃபேமிலிமேன்-2 தொடரை நீக்குக!’ - லண்டன் அமேஸான் அலுவலகத்தில் ஒலித்த புலம்பெயர் தமிழர்களின் குரல்
தி.மு.க-வாக இருந்தாலும், அ.தி.மு.க-வாக இருந்தாலும் ஆட்சிக்கு வருபவர்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாடு மின்சார வாரியம் அல்லது டேன்ஜெட்கோ என்பது லாபம் சம்பாதிக்கும் ஒரு நிறுவனம் அல்ல. அடிப்படையில், இது ஒரு சேவைத்துறை. இங்கு வந்து கமிஷன் அடிக்க வேண்டும், ஊழல் செய்ய வேண்டும் என்று நினைத்தால், மக்களுக்கான சேவையை வழங்க முடியாது. 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தோற்கடிக்கப்பட்டதற்கு மின்வெட்டு மிக முக்கியக் காரணம். அப்போது, மின்துறை அமைச்சராக இருந்த ஆற்காடு வீராசாமிதான், ‘பவர் பர்சேஸ்’ என்று சொல்லிக்கொண்டு மின்சாரம் வாங்குவதற்கு தனியாரிடம் ஓடினார். ஆற்காட்டார் அன்று கோடு போட்டார்... பிறகு வந்த தங்கமணிகள் அதில் ரோடு போட்டுவிட்டார்கள். அதன் விளைவாக, இன்றைக்கு ஒரு லட்சத்துக்கு மேல் கடன் சுமையில் தத்தளிக்கிறது மின் வாரியம். இந்த ஒரு லட்சத்து 136 கோடி ரூபாய் இழப்புக்கு யார் பொறுப்பு?
கொரோனாவைக் கட்டுப்படுத்தியது எங்கள் ஆட்சிதான் என்று எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள்களுக்கு முன்பு சட்டமன்றத்தில் மார்தட்டினாரே. மின்வாரியத்தில் ஏற்பட்ட இழப்புக்கு யார் காரணம்... எப்படி இழப்பு ஏற்பட்டது... ஒரு லட்சத்து 136 கோடி ரூபாய் யாருடைய பாக்கெட்டுக்குள் போனது... என்ற கேள்விகளுக்கும் அதே ஆவேசத்துடன் எடப்பாடியாரும் தங்கமணியாரும் பதில்களை அளித்தால் சிறப்பாக இருக்கும்.
கஜா புயலோ, தானே புயலோ, ஓகி புயலோ... எந்தவொரு இயற்கை சீற்றம் என்றாலும் ஓடோடிச் சென்று குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நூற்றுக்கணக்கான மின் கம்பங்களை நட்டு, கம்பிகளை இழுத்துக்கட்டி மின் சேவையை சீர்செய்திருக்கிறார்கள் மின் வாரியத் தொழிலாளர்கள். மிகப்பெரிய சாதனையாக இதை மக்கள் பார்க்கிறார்கள். அடிப்படையில் மின் வாரியத்துக்கு வலுவான கட்டமைப்பு இருப்பதால்தான் இது முடிகிறது. அன்றைக்கு ஆற்காட்டார் போட்டது தவறான பாதை என்பதை செந்தில்பாலாஜி புரிந்துகொள்வார் என்று மின்வாரிய பணியாளர்கள் நம்புகிறார்கள். மேலும், மின் வாரியத்தின் நிர்வாகத்தில் சிக்கல் என்ன, நிதி நிலைமை எப்படி இருக்கிறது என ஒட்டுமொத்தப் பிரச்னைகளையும் அலசி ஆராய்ந்து மின் வாரியம் தொடர்பான ஒரு வெள்ளை அறிக்கை அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட வேண்டும். தவறுகள் எப்படி சரிசெய்யப்படும் என்பதையும் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/rs-13000-crore-loss-to-tneb-why-it-happens-and-how-dmk-will-rectify-this-issue
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக