Ad

புதன், 30 ஜூன், 2021

காவிரி நீர் : கடைமடைப் பகுதியான பூம்புகாரை வந்தடைந்தது; மலர் தூவி வழிபட்டு வரவேற்ற மக்கள்!

காவிரி வங்கக் கடலோடு கலக்குமிடமான பூம்புகாரில், காவிரியின் கடைசி அணையான சட்ரஸ் பகுதிக்குக் கடந்த திங்கட்கிழமை (28.06.2021) காவிரி நீர் வந்தடைந்தது. காவிரி நீரை விவசாயிகளும் அதிகாரிகளும் மலர்தூவி வரவேற்றனர்.

காவிரி நீர்

கர்நாடக மாநிலம், குடகு மலையில் கிளம்பும் காவிரி, தமிழகத்தின் தருமபுரி, சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை எனப் பல மாவட்டங்களுக்கு விவசாயம் செழிக்க நீர்வளம் தந்து, இறுதியாக மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் (காவிரிபூம்பட்டினம்) பகுதியில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. கடந்த 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து டெல்டா  பாசனத்துக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அணையைத் திறந்துவைத்தார். இந்தத் தண்ணீர் பல மாவட்டங்களைக் கடந்து, கடந்த திங்கட்கிழமை அதிகாலை காவிரி கடலோடு கலக்குமிடமான பூம்புகார் பகுதியை வந்தடைந்தது.

இதையொட்டி சட்ரஸ் பகுதியில் அமைந்துள்ள காவிரியின் கடைசிக் கதவணையில் காவிரி நீருக்கு பால், பன்னீர், மஞ்சள் ஆகியவற்றைக் கொண்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து மயிலாடுதுறை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெட்சிணாமுர்த்தி, சீர்காழி ஒன்றிய கழகத் தலைவர் கமல ஜோதிதேவேந்திரன்,முன்னோடி விவசாயி தனமூர்த்தி உள்ளிட்ட பலர் மலர்தூவி காவிரி நீரை வரவேற்றனர்.

காவிரி

முதற்கட்டமாக  பல கிராம விவசாயிகளுக்கு நீர்பாசனம் அளிக்கும் சுமார் 800 ஏக்கர் பரப்பிலான பெருந்தோட்டம் மற்றும் சுமார் 700 ஏக்கர் பரப்பிலான திருவாலி ஏரிகளை நிரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடைமடைப் பகுதிக்கு இவ்வளவு விரைவாக காவிரி நீர் வந்தது, அந்தப் பகுதி மக்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/tamilnadu/cauvery-river-water-arrived-at-poombukar-people-excited-and-worship-it

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக