Ad

திங்கள், 28 ஜூன், 2021

சென்னை: `டி டாக்ஸி என்ற ஒன்று உருவானதா இல்லையா என்றே தெரியாமல் போய்விடும்!' - கலங்கும் ஊழியர்கள்

கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின்போது தமிழ்நாடு அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளுக்கும் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. அப்படி அனைவராலும் வரவேற்கப்பட்ட ஒரு நடவடிக்கைதான் டாக்ஸி ஆம்புலன்ஸ். கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, தனியார் ஆம்புலன்ஸ் கட்டணக் கொள்ளையும் அதிகரித்தது. கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசு பல முறை எச்சரித்தும், எவ்வளவு தூரத்துக்கு, எவ்வளவு வசூலிக்க வேண்டும் என்று கட்டணம் நிர்ணயித்தபோதும் பக்கத்திலிருக்கும் மருத்துவமனைகளுக்குச் செல்வதற்கு 6,000 முதல் 8,000 ரூபாய் வரை கட்டணமாக வசூலித்தனர் தனியார் ஆம்புலன்ஸ் நிர்வாகத்தினர். இறந்தவரின் உடல்களைக் கொண்டு செல்வதற்கு அவர்கள் வசூலித்த தொகையின் அளவு இறப்பின் வலியைவிடக் கொடுமையாக இருந்தது.

ஆம்புலன்ஸ் வாகனங்கள்!

பெருந்தொற்றைக் காரணமாகவைத்து, தங்கள் வியாபாரத்தை வளர்த்துக் கொண்டார்கள் தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனத்தினர். இந்தச் சிக்கலைப் போக்க அரசு கொண்டு வந்த திட்டம்தான் டாக்ஸி ஆம்புலன்ஸ். இதற்காக ‘டி டாக்ஸி’ என்ற கூட்டுறவு சேவை சங்கத்தின் கீழ் பதிவுசெய்த வாகனங்களை மாநகராட்சி பயன்படுத்திக்கொண்டிருக்கிறது.

Also Read: லஞ்சம் கேட்கும் சென்னை மாநகராட்சி! - குமுறும் ஹோட்டல் நிர்வாகம்

வாடகை மற்றும் சொந்த வாகனங்களை இயக்கிவரும் ஓட்டுநர்களை ஒன்றிணைத்து ‘டி டாக்ஸி’ என்ற கூட்டுறவு சேவை சங்கத்தைத் தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்தது. இதில், ரூ.100 கட்டணமாகச் செலுத்தி ஓட்டுநர்களாகப் பதிவு செய்துகொள்வதோடு, மாதந்தோறும் ரூ.3,000 செலுத்த வேண்டும் எனவும், வாகன உரிமையாளர்கள் ரூ.100 செலுத்தி உறுப்பினராவதோடு வருவாயில் 10 சதவிகிதத்தை டி டாக்ஸி கூட்டுறவு சேவை சங்கத்துக்குச் செலுத்த வேண்டும் எனவும் இரண்டு வகையான திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. ஊபர், ஓலா போன்ற தனியார் டாக்ஸி சேவைக்கு வழங்குவதைவிடக் குறைவான சதவிகிதமே டி டாக்ஸியில் செலுத்த வேண்டியிருந்ததால், அதற்கு வாடகை கார் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.

சென்னையில் 160 பேர் உட்பட தமிழ்நாடு முழுவதும் 700 பேர் டி டாக்ஸியில் தங்களை உறுப்பினர்களாகப் பதிவு செய்துகொண்டார்கள். இதற்காக `டி டாக்ஸி’ என்ற செயலியையும் தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ளது. அதைப் பொதுமக்கள் கூகுள்பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த டி டாக்ஸி கூட்டுறவுச் சங்க செயல்பாடுகள் தமிழக அரசின் தொழில் வணிகத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன.

டி டாக்ஸியில், ஆட்டோவில் 1.8 கி.மீ தூரம் பயணிக்கக் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.25, மினி காருக்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.30 என்றரீதியிலும், இது தவிர காத்திருப்பு கட்டணமாக நிமிடத்துக்கு 30 காசுகளும் என அரசு நிர்ணயித்திருந்தது. அனைத்து துறைகளைப்போலவே நலிவடைந்து இருந்தவர்களுக்குத் தமிழ்நாடு அரசின் டாக்ஸி ஆம்புலன்ஸ் திட்டம் மூலம் ஒரு விடிவு கிடைத்திருக்கிறது. அப்படி நம்பித்தான் அவர்களும் அந்தத் திட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டிருக்கிறார்கள். மார்ச் மாதம் தொடங்கிய இந்தத் திட்டத்தில் தொடக்கத்தில் டெம்போ உட்பட 24 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஆம்புலன்ஸ்

ஏப்ரலில் 47, மே மாதம் 190 என வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து தற்போது 166 வாகனங்கள் சென்னை மாநகராட்சியால் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. மார்ச் மாதம் தொடங்கிய டாக்ஸி ஆம்புலன்ஸ் சேவையில் தங்களை இணைத்துக்கொண்டு பணியாற்றும் டி டாக்ஸி அமைப்புக்கு இதுவரை எந்தத் தொகையும் தரவில்லை என டி டாக்ஸி ஊழியர்கள் புகார் எழுப்பிவருகிறார்கள்.

மாநகராட்சி மீதான புகார் தொடர்பாக ஒன்றிணைத்து ‘டி டாக்ஸி’ என்ற கூட்டுறவு சேவை சங்கத் தலைவர் ஜி.பாலாஜியிடம் பேசினோம். ``கொரோனாவில் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருந்த சமயத்தில், மாநகராட்சியின் இந்த ஒப்பந்தம் மூலம் எங்களுக்குப் புதிய நம்பிக்கை கிடைத்தது. கொரோனா பெருந்தொற்றைப் போக்குவதில் அரசுக்கு உதவியதுபோலவும் ஆச்சு, சும்மா இருக்கும் வாகனங்களுக்கு வேலை கிடைத்ததுபோலவும் ஆனது என பொதுநலத்தோடு கொஞ்சம் சுயநலமும் கலந்தே இதில் நாங்கள் ஈடுபட்டோம். முதலில் 3 லட்சம் ரூபாய், அதன் பின் 6 லட்சம் ரூபாய், தற்போது ஒரு 3 லட்சம் என மொத்தம் 12 லட்சம்... அதுவும் டீசல் செலவுக்காக மட்டுமே கொடுத்திருக்கிறார்கள். இது தவிர நானே கிட்டத்தட்ட 19 லட்ச ரூபாய் கடன் வாங்கி டீசல் வாங்கியிருக்கிறேன். மற்றபடி சம்பளமாக இதுவரை யாருக்கும், எதுவும் கொடுக்கவில்லை.

ஜி.பாலாஜி டி டாக்ஸி சங்கத் தலைவர்

மாநகராட்சி சார்பிலிருந்து எங்களுக்கு வர வேண்டிய கிட்டத்தட்ட 1.5 கோடி ரூபாயை நிறுத்திவைத்திருக்கிறார்கள். அது ஏன் என்றும் தெரியவில்லை. ஒரு நாளைக்கு, ஒரு சின்ன வண்டிக்கு 1,400 ரூபாய்தான் கட்டணமாக நிர்ணயித்துள்ளோம். இப்போது விற்பனையாகும் டீசல், பெட்ரோல் விலைக்கு இது மிகக் குறைவான தொகைதான். ஆனால், இதுவே அதிகம் என மாநகராட்சி ஆணையர் சொல்வதாகச் சொல்கிறார்கள். இது தமிழ்நாடு அரசின் தொழில் மற்றும் வணிகத்துறையின் கீழ் இயங்கும் ஒரு கூட்டுறவு அமைப்புதான்.

Also Read: கொரோனா இரண்டாம் அலை... கவனம் போதும்... பயம் வேண்டாம்!

கூகுள் பிளே ஸ்டோரில் ஆப் இருக்கிறது. ஆனாலும் டி டாக்ஸி திட்டம் மற்ற அமைப்புகளைப்போலவே கைவிடப்பட்ட நிலையில்தான் தவித்துக்கொண்டிருக்கிறது. மாநகராட்சி சார்பில் ஆண்டுக்குக் கோடிக்கணக்கான ரூபாய்க்கு வாகனங்களைக் குத்தகைக்கு எடுத்துப் பயன்படுத்துகிறார்கள். இதற்குத் தனியார் நிறுவன வாகனங்களைத்தான் மாநகராட்சி பயன்படுத்துகிறது. அவர்களும் குறிப்பிட்ட நேரம் போக ஓவர் டைம் எல்லாம் போட்டு மிகப்பெரிய தொகையை வசூல் செய்துவிடுகிறார்கள். கமிஷன் இல்லாமல், ஊழல்களுக்கு வாய்ப்பளிக்காமல், டி டாக்ஸி கூட்டுறவு அமைப்பை வலுப்படுத்தினால் தனியார் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய மாற்றாக டி டாக்ஸி உருவெடுக்கும். மக்களுக்கும் குறைந்த கட்டணத்தில் டாக்ஸி சேவை கிடைக்கும். டாஸ்மாக்குக்கு அடுத்து டி டாக்ஸி மூலம் அரசுக்கு மிகப்பெரிய வருமானம் கிடைக்கும். ஆனால், இருக்கும் நிலையைப் பார்த்தால் டி டாக்ஸி என்ற அமைப்பு உருவானதா இல்லையா என்றே தெரியாமல் போய்விடும்போல. இதை மீட்டெடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதோடு எங்களுக்கு வர வேண்டிய நிலுவைத் தொகையையும் உடனடியாக விடுவித்து எங்கள் துயரத்தைப் போக்க வேண்டும். கொரோனா துயரத்தைவிட உழைப்புக்கான ஊதியத்தைப் பெறுவதற்கு அலையும் துயரம் கொடுமையாக இருக்கிறது” என்றார் வேதனையோடு.

சென்னை மாநகராட்சி

புகார் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளைத் தொடர்புகொள்ள முயன்றோம். ஆனால், ஜூனியர் விகடன் தொலைபேசி மூலம் முயன்றோம். அவர்கள் அழைப்பை ஏற்கவில்லை. மாநகராட்சி தரப்பில் விளக்கம் தரும்பட்சத்தில் அதையும் பரிசீலித்து வெளியிட ஜூனியர் விகடன் தயாராக இருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/15-crore-amount-pending-for-special-taxi-will-corporation-take-action

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக