திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் கடந்த 26-ம் தேதி அவிநாசி தாலுகாவுக்கு உட்பட்ட கானாங்குளம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாட்டிறைச்சி விற்பனை செய்யும் வேலுச்சாமி என்பவரிடம், ‘இந்த பகுதியில் மாடுகளை வதை செய்வதாக எனக்கு புகார் வந்துருக்கு. இனி இந்த ஏரியாவுல யாரும் மாட்டிறைச்சி போடக் கூடாது’ என வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் உத்தரவு பிறப்பித்தார். இந்த வீடியோ, சமூகவளைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாட்டுக்கறி விற்பனையைத் தடுக்கும் அதிகாரத்தை வட்டாட்சியருக்கு கொடுத்தது யார்?... என பலரும் ஆவேசக் குரல்களை எழுப்பினர்.
அதனையடுத்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஆதித்தமிழர் பேரவை, தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் உட்பட சுமார் 20 அமைப்புகள் ஒருங்கிணைந்து ‘மாட்டுக்கறி உணவு பாதுகாப்பு கூட்டியக்கம்' என்ற பெயரில் வட்டாட்சியரைச் சந்தித்து விளக்கம் கேட்டனர். மேலும், வட்டாட்சியரின் உத்தரவைக் கண்டித்து அவிநாசி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்தோடு திருப்பூர் கலெக்டரைச் சந்தித்தும் புகார் மனு கொடுத்தனர். சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சொல்லியிருந்த நிலையில், சர்ச்சையை உண்டாக்கிய அவிநாசி வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் நேற்று ஊத்துக்குளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த விவகாரம் குறித்து மாட்டுக்கறி உணவு பாதுகாப்பு கூட்டியக்கம் ஒருங்கிணைப்பாளர் விடுதலைச்செல்வன் நம்மிடம் பேசுகையில், “மாட்டிறைச்சியை விற்னை செய்யக்கூடாதென யார் புகார் கொடுத்தது. மாட்டிறைச்சி விற்பனை செய்யக்கூடாதென அரசு ஏதேனும் சட்டம் போட்டிருக்கிறதா’ என நடந்த சம்பவம் குறித்து வட்டாட்சியர் இதுவரை விளக்கம் கொடுக்கவில்லை. மாட்டிறைச்சி குறித்தான அரசியல் இந்தியா முழுக்க நடந்துகொண்டிருக்கிறது. அதனால், திருப்பூரில் அதனை லேசாக கடந்துவிட முடியாது. சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினுடைய சேவா சங்கம் சார்பில் கொரோனா மருத்துவ மையத்தை திருப்பூர் கலெக்டர் முன்னிலை வகித்து திறந்து வைத்தார். இதயெல்லாம் பார்க்கையில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினுடைய தூண்டுதல்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் அடிப்படையில் அதிகாரிகள் செயல்படுகிறார்களோ என சந்தேகம் ஏற்படுகிறது. அதிகாரி என்பவர் அனைத்து மக்களுக்கும் பொதுவானவராகத் தான் இருக்க வேண்டுமே ஒழிய, எளியவர்களுக்கு எதிரானவர்களாக நடந்து கொள்ளக்கூடாது” என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/controversy/avinashi-beef-shop-issue-officer-transferred
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக