Ad

திங்கள், 28 ஜூன், 2021

`ஜெய் ஹிந்த்' விவகாரம்: எம்.எல்.ஏ ஈஸ்வரனின் சட்டமன்றப் பேச்சும்... சர்ச்சையும்!

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிந்து ஒருவாரம் கடந்தும், தற்போதுவரை அது தொடர்பான பேச்சுகள், விவாதங்கள் குறைந்ததாகத் தெரியவில்லை. அந்த அளவிற்குச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் சுவாரஸ்யம் நிறைந்ததாக நடந்து முடிந்திருக்கிறது. இந்தமுறை ஆளுநர் உரையைவிட அதிகம் விவாதத்திற்கு உள்ளாகியிருப்பது கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் ‘‘கடந்தாண்டு ஆளுநர் உரையின் முடிவில், ‘நன்றி, வணக்கம், ஜெய்ஹிந்த்’ என முடிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது ஆளுநர் உரையின் முடிவில், ‘நன்றி, வணக்கம்’ மட்டுமே இருந்தது. 'ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தை இல்லை. தமிழகம் தலைநிமிரத் தொடங்கிவிட்டது” எனப் பேசியதை பா.ஜ.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

ஈ.ஆர்.ஈஸ்வரன்

“தேசிய ஒற்றுமை சார்ந்தோ, உணர்வு சார்ந்தோ நான் குறிப்பிடவில்லை. ‘ஜெய்ஹிந்த்’ என்பது இந்தி. அதைத் தவிர்த்து ’வாழ்க பாரதம்’ என்று பயன்படுத்தினால் நல்லது. இந்தி மொழி தவிர்க்கப்பட்டிருப்பதைத்தான் நான் பேசினேன்” என ஈஸ்வரன் விளக்கம் அளித்திருந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘ஜெய்ஹிந்த்’ என்ற வார்த்தையைப் பதிவிட்டு, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி மூன்று முறை ஜெய்ஹிந்த் என்று கூறும் வீடியோவையும் பதிவிட்டுள்ளனர்.

Also Read: 'ஒன்றிய அரசு முதல் பெரியார் வரை...' ஆளுநர் உரையில் பாஜக-வைச் சீண்டியதா ஸ்டாலின் அரசு?

தமிழக பா.ஜ.க மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜனிடம் இந்த சர்ச்சை குறித்துக் கேட்டோம்:

“ஜெய்ஹிந்த் என்று பயன்படுத்தியதற்காக 'வாழ்க பாரதம்' என்று பயன்படுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என ஈஸ்வரன் சட்டமன்றத்திலேயே செல்லியிருந்தால் அந்த விளக்கத்தை நாம் ஏற்றுக்கொள்ளலாம். ‘ஆளுநர் உரையில் 'ஜெய்ஹிந்த்' இல்லை என்பது மகிழ்ச்சியாக இருந்தது’ என்று சொன்னால் அதற்கும் மொழி உணர்வுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? பாரதப் பிரதமர் நேற்றைக்குக்கூட 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் தமிழ் மொழியைப் பற்றியும் அதன் கலாசாரம் குறித்தும் எவ்வளவு பெருமையாகப் பேசியிருக்கிறார்!

‘இந்தியா வெல்லட்டும், நாடு வாழ்க’ என்று சொல்லும் வார்த்தை உங்களின் சுயமரியாதைக்குக் குறைவானதா?

கரு.நாகராஜன்

இப்போதாவது ‘நான் சொன்னதை மக்கள் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். நான் பேசியதை நீக்கிவிடுங்கள்’ என்று சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கச் சொல்லுங்கள் அவரது விளக்கத்தை ஏற்றுக்கொள்ளலாம். எதற்காக, யாரைத் திருப்திப்படுத்த 'ஜெய்ஹிந்த்' என்ற சொல் தொடர்பாகப் பேசினார் எனத் தெரியவில்லை. ஆனால், பலரது மனம் புண்பட்டிருக்கிறது” என்றவர்...

“மகாத்மா காந்தி ராணி எலிசபெத்-க்கு பரிசளித்த சால்வையில் 'ஜெய்ஹிந்த்' எனத் தன் கையால் நூல் நூற்றுக் கொடுத்தார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வெற்றி முழக்கமாக இருந்தது 'ஜெய்ஹிந்த்' என்ற சொல்தான். இந்த அளவிற்கு பாரம்பர்யமிக்க, தேசப்பற்றை வளர்க்கக்கூடிய ஒரு சொல்லைச் சாதாரணமாக உதாசீனப்படுத்திவிட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. இப்படி மொழிப் பிரச்னையை உருவாக்கிக்கொண்டே இருந்தால் நமக்குள் எப்படி ஒற்றுமையை உருவாக்கமுடியும்?

மோடி

இப்படிச் சின்னச் சின்னப் பிரச்னைகளைக் கொண்டுவந்து மக்களை வேதனைக்குள்ளாக்க வேண்டாம். அவைக் குறிப்பிலிருந்து ஈஸ்வரன் பேச்சு நீக்கப்பட வேண்டும் என்பதுதான் எல்லோருடைய கோரிக்கையும், அதற்கு முன் ஈஸ்வரனே சபாநாயகரிடம் சொல்லி தன்னுடைய பேச்சை நீக்கச் சொன்னால் நல்லது” எனவும் ஆவேசமாகப் பதிலளித்தார்.

Also Read: `தமிழ் மொழியின் மிகப்பெரிய அபிமானி நான்!' - மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை

விமர்சனங்கள் குறித்து கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரனிடம் கேட்டோம்:

“21-ஆம் தேதி நடந்த ஆளுநர் உரை மீது 22-ஆம் தேதிதான் நான் பேசினேன். அப்போது காங்கிரஸ் கட்சியின் 17 மற்றும் பா.ஜ.க-வின் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். நான் பேசியது தவறு என்றால் அப்போதே அவர்கள் எதிர்த்திருக்க மாட்டார்களா? சரி என்று தெரிந்ததால்தான் அவர்கள் அமைதியாக இருந்தார்கள். நிறைய பேர் என்னுடைய பேச்சைப் பாராட்டிப் பேசினார்கள். நான் பேசி இரண்டு நாட்கள் வரை எந்த விமர்சனங்களும் எழவில்லை. அண்ணாமலை நான் பேசியதில் குறிப்பிட்ட ஒரு பகுதியை மட்டும் வெட்டி ட்விட்டரில் பதிவிட்ட பின்னர்தான் இது சர்ச்சைக்கு உள்ளானது. அப்போது கூட பேரவையிலிருந்த உறுப்பினர்கள் ஏன் என்னுடைய பேச்சு குறித்து ஏதும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்ற கேள்வி எழுப்பினார்களா என்று தெரியவில்லை. அண்ணாமலை இதை சர்ச்சையாக்கும் வரை பா.ஜ.க-வினர் எல்லாம் எங்கே இருந்தார்கள் எனத் தெரியவில்லை.

‘கொங்கு’ ஈஸ்வரன்

'ஜெய்ஹிந்த்' என்ற சொல் குறித்துப் பேசியது மொழி குறித்துத்தான் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். இது குறித்து என்னிடம் கேட்டிருந்தாலே நான் விளக்கம் அளித்திருப்பேன். அடுத்த கூட்டத்தொடரின் போது கேட்டாலும் விளக்கம் அளிக்கத் தயாராகவே இருக்கிறேன். சட்டப்பேரவையில் பேசியது குறித்து ஒரு தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்றபோதே கருத்து தெரிவித்துவிட்டேன். கடந்த ஆட்சியில் பா.ஜ.க-வின் கட்டுப்பாட்டில் அ.தி.மு.க இருந்தது என்ற விமர்சனம் இருந்தது. இப்போது அது நடக்காது என்ற ரீதியில்தான் பேசியிருக்கிறேன்.

இரண்டு அரசை ஒப்பிட்டு தி.மு.க அரசு பொறுப்பேற்றதும் தமிழகம் தலை நிமிர்ந்துவிட்டது என்று சொன்னேன். மொழியை மையமிட்டுத்தான் நான் பேசியிருக்கிறேன். அது தவறு என்று எனக்குத் தெரியவில்லை.

நான் 'ஜெய்ஹிந்த்' என்ற முழக்கத்திற்கு எதிரானவன் கிடையாது. சுதந்திரப் போராட்ட வீரர்களை வணங்கிவிட்டுத்தான் என்னுடைய உரையையே தொடங்கினேன்.

Also Read: எகிறிய சுகாதாரத்துறை அமைச்சர் முதல் கமலாலயத்தில் பதவி ரேஸ் வரை கழுகார் அப்டேட்ஸ்...

எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின்

என்னுடைய கட்சியின் கொள்கையே ‘ வெல்க பாரத நாடு, வளர்க தமிழ்நாடு, மலர்க கொங்குநாடு’ என்பதுதான். இந்தப் பாதையில்தான் நாம் பயணித்துக்கொண்டிருக்கிறோம். பிரதமர் முதல் தேசிய தலைவர்கள்வரை நான் பழகியவன்தான். என்னுடைய தேசப்பற்று குறித்து பா.ஜ.க தலைவர்கள் அனைவருக்கும் தெரியும். தற்போது கட்சிக்குள் வந்துள்ள முருகன், அண்ணாமலை போன்றவர்களுக்கெல்லாம் என்னைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை” என விளக்கமளித்தார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/kmkd-party-leader-and-mla-eswaran-speech-about-jai-hind-in-tn-assembly-criticised-by-bjp-leaders

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக