Ad

புதன், 30 ஜூன், 2021

`அண்ணனைக் கோத்துவிட்டார்கள்!’ - கரூரில் விதிமுறைகளை மீறி கடைகள் திறப்பு சர்ச்சை

கொரோனா பரவல் அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் கரூர் மாவட்டமும் உள்ளது. இந்த நிலையில், அங்கு 3000 சதுர அடிக்கு மேல் உள்ள நகை, ஜவுளி மற்றும் பாத்திரக்கடைகளை திறக்க கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட கடைகளை இயங்க செந்தில் பாலாஜி வாய்மொழியாக உத்தரவிட்டதாக சொல்லப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தலைமைச் செயலாளர் வரை விவகாரம் வரை விவகாரம் செல்ல, அவர் தலையிட்ட பிறகு, வருவாய் கோட்டாட்சியர் இருபதுக்கும் மேற்பட்ட கடைகளுக்கு ரூ. 5000 அபராதம் விதித்துள்ளார்.

கரூர்

Also Read: `திமுக ஆட்சியில் அணில்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதா?’ செந்தில் பாலாஜியை விமர்சிக்கும் அண்ணாமலை

கொரோனா வைரஸ் பரவும் தன்மையைக் கொண்டு மாவட்டங்களை மூன்று வகையாக பிரித்து ஊரடங்கை தளர்த்தியுள்ளது தமிழக அரசு. முதல் வகையில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்கள் முதல் வகையில் உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து இரண்டாம் வகையில் உள்ள 23 மாவட்டங்களில் நகை மற்றும் ஜவுளிக்கடை திறக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனை தொடர்ந்து, அந்த மாவட்டங்களில் மட்டும் நகை, ஜவுளி கடை திறக்க அனுமதிக்கப்பட்டது. அதேவேளையில், முதல் வகையில் உள்ள மாவட்டங்களில் நகை மற்றும் ஜவுளிக்கடை திறப்பதற்கு அனுமதியளிக்கவில்லை தமிழக அரசு. கரூரையைவிட குறைவான நிலையில் கொரோனா வைரஸ் பரவல் உள்ள தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள வணிகர்கள் கடைகளை திறக்க அனுமதி கேட்டும், அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அனுமதி வழங்க மறுத்துவிட்டன.

அபராதம் விதித்தபோது...

இந்த நிலையில் தான், கரூரில் உள்ள முக்கிய வணிக பகுதியான ஜவஹர் பஜாரில் நேற்று காலை (30 - ஆம் தேதி) திடீரென 50 க்கும் மேற்பட்ட நகை, ஜவுளி மற்றும் பாத்திரக் கடைகளை திறந்து வைத்து வியாபாரம் பார்த்தனர். இதனை அறிந்த கரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்ரமணியம், விதிமுறைகளை மீறி இயங்கிய 20 க்கும் மேற்பட்ட கடைகளுக்கு தலா ரூ. 5000 அபராதம் விதித்தார். தன்னைச் சந்தித்த கரூர் வணிகர்கள் சிலர் வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி மறைமுகமாக கடைகளை திறக்க வாய்மொழியாக உத்தரவிட்டதாக பரவலாக பேசப்படுகிறது.

இதுகுறித்து, நம்மிடம் பேசிய சமூக ஆர்வலரான சண்முகம்,

"கரூர் பரப்பளவில் சிறிய மாவட்டம். ஆனால், கொரோனா பரவலில் முன்னணியில் உள்ளது. அதற்கு காரணம், இரண்டாம் அலை வந்து தமிழக அரசு லாக்டெளனை அறிவித்தபோது, தொடர்ந்து இங்குள்ள டெக்ஸ்டைல்ஸ் கம்பெனிகள் இயங்கி வந்தன. அதனாலேயே அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் மூலம் கரூர் மாவட்ட குக்கிராமங்கள் வரை கொரோனா தொற்று அதிகரித்தது. அதன்பிறகு, சமூக ஆர்வலர்கள் கடுமையாக எதிர்த்தபிறகே, டெக்ஸ்டைல்ஸ் கம்பெனி நிர்வாகங்கள் தங்கள் கம்பெனிகளை மூடின. அதனாலேயே, இப்போது கரூரில் அதிகம் கொரோனா தொற்று பரவல் உள்ளது. இந்த நிலையில், கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு வரும் 5 ம் தேதி வரை லாக்டெளன் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இங்குள்ள சில வணிகர்கள் செந்தில் பாலாஜியை சந்தித்து தங்கள் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளதாக புலம்பியிருக்கின்றனர். அதனைத்தொடர்ந்து அவர் கடைகளை மதியம் 2 மணி வரை திறக்க வாய்மொழியாக உத்தரவிட்டதாக சொல்றாங்க. கரூர் மாவட்ட கலெக்டரிடமும் இதை வலியுறுத்திருக்கிறார். ஆனால், இதுதான் சான்ஸ் என்று நினைத்து 50 க்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்கள் கடைகளை திறந்து, கூட்டத்தை கூட்டிவிட்டார்கள்.

சண்முகம் (சமூக ஆர்வலர்)

இதை அறிந்ததும் சமூக ஆர்வலர்கள் எல்லாம் போய், கடைகளை மூடச் சொன்னோம். ஆனா அவங்க மறுத்துட்டாங்க. உடனே, இதுபற்றி போட்டோ, வீடியோ ஆதாரங்களோடு சமூக ஆர்வலர்கள் தலைமைச் செயலாளர் இறையன்புக்கு புகார் அனுப்பினாங்க. அவர் கரூர் ஆட்சியரிடம், 'லாக்டெளன் அமலில் இருக்கும்போது, எப்படி கடைகளை திறக்க அனுமதிக்கலாம்?. உடனே, கடையை மூடச் சொல்லுங்க'னு என்று கடுகடுத்துள்ளார். அப்படியும், 20 க்கும் மேற்பட்ட கடை உரிமையாளர்கள் கதவுகளை பாதி அளவு சாத்தி வைத்துக்கொண்டு பெருங்கூட்டத்தை உள்ளே அனுப்பி வியாபாரம் பார்த்தாங்க. மதியம் இரண்டு மணியைக் கடந்தும் வியாபாரம் நடந்துச்சு. அதை அறிந்த தலைமைச் செயலாளர் அதிகாரிகளை எச்சரிக்க, அதன்பிறகே கரூர் கோட்டாட்சியர் பாலசுப்ரமணியம் திறந்திருந்த 20 கடைகளுக்கு தலா ரூ. 5000 அபராதம் விதித்ததோடு, எச்சரிக்கையும் செய்தார்" என்றார்.

இதுகுறித்து, செந்தில் பாலாஜி தரப்பில் பேசிய சிலர், "ஒருசிலர் வந்து அண்ணனிடம் கடைகளை திறக்க கோரிக்கை வைத்தது வாஸ்தவம் தான். ஆனால், கரூரின் நிலைமையை எடுத்துக் கூறி, அதற்கு அவர் அனுமதி மறுத்துவிட்டார். ஆனால், அவர்களாகவே கடைகளை திறந்து வியாபாரம் பார்த்துவிட்டு, அண்ணனைக் கோத்துவிட்டார்கள்" என்றார்கள்.

செந்தில் பாலாஜி

ஏற்கனவே, மின்வெட்டு என்று சர்ச்சை சுழலில் சிக்கியிருக்கும் செந்தில் பாலாஜி, அடுத்த சர்ச்சையில் சிக்கியிருப்பது கரூர் மாவட்ட அரசியல் மட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/controversy/senthil-balaji-faced-controversy-in-shop-opening-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக