தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் செவிலியர் பயிற்சிக் கல்லூரியில் படிப்பை முடித்து, கரூரில், தனியார் மருத்துவமனையில் பயிற்சி செவிலியராக பணியாற்றிவந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக, சில மாதங்களுக்கு முன்னர் தனது சொந்த கிராமத்திற்கு வந்த அவர், போடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். தாய்-தந்தை இருவரும் இறந்துவிட்ட சூழலில், தனது தாத்தாவின் அரவணைப்பில், அவருடன் தங்கி, மருத்துவமனைப் பணிக்குச் சென்றுவந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2-ம் தேதி, கடும் வயிற்று வலி ஏற்பட்டதாகக் கூறி, அச்சிறுமியை போடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார் அவரது தாத்தா. சிறுமியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர், 8 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். அன்றைய தினமே அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்தின் போது அச்சிறுமிக்கு கடுமையான இரத்தப் போக்கு ஏற்படவே, தேனி கானாவிலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, மேல் சிகிச்சைக்காக சிறுமியும், குழந்தையும் அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கே குழந்தை உடல் ஆரோக்கியத்துடன் இருந்தபோதும், சிறுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக, சிறுமியின் தாத்தா, போடி ஊரக காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
Also Read: தேனி: முதியவர் மர்ம மரணம்... பிரேத பரிசோதனையால் சிக்கிய இளைஞர்!
சிறுமியின் தாத்தா அளித்தப் புகாரின் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய போலீஸார், சிறுமியின் செல்போனைக் கைப்பற்றி ஆய்வு செய்ததில், மணிகண்டன், கார்த்திக் என்ற இருவரிடம் அடிக்கடி பேசியது தெரியவந்தது. இந்நிலையில், சிறுமியின் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டனைப் பிடித்த போலீஸார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
Also Read: தேனி: கர்ப்பிணி மனைவி கொலை - அ.தி.மு.க பேரூராட்சி முன்னாள் தலைவருக்குத் தூக்கு!
அதனைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் மணிகண்டனை கைது செய்து சிறையிலடைத்தனர். கார்த்திக்கை தேடிவருகின்றனர். சிறுமி உயிரிழந்த சம்பவத்திற்கு காதல் விவகாரம் காரணமா, அல்லது மணிகண்டன், கார்த்திக் இருவரும் சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை ஆளாக்கினார்களா, என்பது போன்ற கோணத்தில் விசாரிப்பதாக கூறும் போலீஸ் தரப்பு, விசாரணையின் முடிவில் தான் உண்மை நிலை தெரியவரும் என்கின்றனர்.
source https://www.vikatan.com/news/crime/girl-gives-birth-to-baby-dies-at-hospital-in-theni
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக