சென்னை புழல், புனித அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முகமதுரபீக் (28). இவர் பங்குச் சந்தை பிசினஸில் ஈடுபட்டு வருகிறார். இவரின் நீண்ட கால நண்பர் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த முகமது காசிம் (31). இவர் குடிநீர் கேன் பிசினஸ் செய்து வருகிறார். பங்குச் சந்தை பிசினஸ் மூலம் முகமது ரபீக்கிற்கு நல்ல வருமானம் கிடைத்து வந்தது. நண்பன் முகமது ரபீக்கிடமிருந்து பணத்தைப் பறிக்க முகமது காசிம் திட்டமிட்டார். அதற்காக வியாசர்பாடியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரை முகமதுரபீக்கிற்கு முகமது காசிம் அறிமுகப்படுத்தி வைத்தார். விஜயகுமாரும் ஷேர்மார்க்கெட் பிசினஸ் செய்து வந்ததால் முகமது ரபீக்கும் விஜயகுமாரும் குறுகிய காலக்கட்டத்திலேயே நண்பர்களாகினர்.
இந்தநிலையில் கடந்த 27-ம் தேதி முகமது ரபீக்கிற்கு போன் செய்த விஜயகுமார், என்னுடைய வீட்டில் யாருமில்லை. ஒன்றாக சேர்ந்து மது அருந்தலாம் என்று கூறினார். அதனால் முகமது ரபீக்கும் விஜயகுமார் வீட்டிற்கு வந்தார். பின்னர் இருவரும் சேர்ந்து மது அருந்தினர். இந்தச் சமயத்தில் விஜயகுமார் வீட்டுக்குள் சிலர் உள்ளே நுழைந்தனர். அவர்கள் தங்களை போலீஸ் எனக்கூறி விசாரணைக்காக முகமது ரபீக்கை அழைத்துச் செல்வதாக விஜயகுமாரிடம் பந்தாவாகக் கூறினர். அதன்பிறகு முகமது ரபீக்கை அந்தக் கும்பல் காரில் அழைத்துச் சென்றது. இரவு முழுவதும் முகமது ரபீக்கை காரிலேயே வைத்துக் கொண்டு அந்தக் கும்பல் சுற்றியது. அப்போது முகமது ரபீக்கிடம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடு இல்லையென்றால் ஆளைக் காலி செய்துவிடுவோம் என அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் மிரட்டினர். மேலும் காருக்குள்ளேயே வைத்து முகமது ரபீக்கை அந்தக் கும்பல் தாக்கியதாகக் கூறப்படுகிறது. உயிர் பயத்தால் முகமது ரபீக்கும் பணம் தருவதாக கூறினார்.
Also Read: சென்னை: `போலி கால் சென்டர் தம்பதி; போனில் மனைவி பேசுவார்!’ - போலீஸ் வளையத்தில் தி.மு.க பிரமுகர்
முகமது ரபீக்கின் ஏடிஎம் கார்டு மூலம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை எடுத்தவர்கள் அவரை 28-ம் தேதி அதிகாலை 2 மணியளவில் மாதவரம் ரவுண்டானா பகுதியில் இறக்கி விட்டு தப்பிச் சென்றுவிட்டார்கள். அங்கிருந்து எம்.கே.பி.நகர் காவல் நிலையத்துக்குச் சென்ற முகமது ரபீக், நடந்த விவரத்தைக் கூறி புகாரளித்தார். இதுகுறித்து புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணாவுக்கு எம்.கே.பி.நகர் போலீஸார் தகவல் தெரிவித்தனர். உடனடியாக கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க ராஜேஷ் கண்ணா உத்தரவிட்டார். அதன்பேரில் உதவி கமிஷனர் கோ.அரிக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், மனோன்மணி மற்றும் தனிப்படை போலீஸார் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைத் தேடினர்.
செல்போன் சிக்னல் மற்றும் சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கண்டறிந்தனர். அவர்களைப் பிடித்து விசாரித்தபோதுதான் நண்பனிடமே பணத்தைப் பறிக்க முகமது காசிம் போட்ட திட்டம் வெளியில் தெரியவந்தது. அதற்கு விஜயகுமாரும் உடந்தை என்பதை போலீஸார் கண்டறிந்தனர். இதையடுத்து இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக வியாசர்பாடியைச் சேர்ந்த விஜயகுமார் (27), பெரம்பூரைச் சேர்ந்த முகமது காசிம் (31), அம்பத்தூரைச் சேர்ந்த ராஜா (34), ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் விக்ரம் (34), சூளைமேடு பகுதியைச் சேர்ந்த மோகன் (33), புதுப்பேட்டையைச் சேர்ந்த தினேஷ் (27), காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்கிற முனியா (29), ஆகிய 8 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1,62,000 ரூபாய், கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு கார் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து எம்.கே.பி.நகர் போலீஸார் கூறுகையில், ``முகமது ரபீக்கின் 10 ஆண்டுகால நண்பர் முகமது காசிம். பிசினஸில் லட்சங்களைச் சம்பாதித்த முகமது ரபீக் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தார். அது, முகமது காசிமிக்கு பொறாமையை ஏற்படுத்தியது. அதனால் நண்பன் முகமது ரபீக்கிடமிருந்து பணத்தைப் பறிக்க திட்டமிட்ட முகமது காசிம், தன்னுடைய கூட்டாளிகள் மூலம் முகமது ரபீக்கை காரில் கடத்தினார். ஏற்கெனவே முகமது ரபீக் குறித்து முழு விவரம் தெரிந்த முகமது காசிமே, போலீஸ் என்று கூறி அவரைக் கடத்த திட்டம் போட்டு கொடுத்தார் முகமது காசிம். அதனால் விஜயகுமார் வீட்டுக்கு வந்த கும்பல், முகமது ரபீக்கை காரில் கடத்தி பணத்தை பறித்தனர்.
அந்தப் பணத்தை கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட 9 பேரும் பங்கு போட்டுக்கொண்டனர். முகமது ரபீக் அளித்த புகாரின் பேரில் விசாரித்தபோதுதான் அவருடன் மது அருந்திய விஜயகுமார் மீது எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரித்தபோதுதான் முகமது காசிம்தான் கடத்தல் மற்றும் பணம் பறிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. தற்போது 8 பேரைக் கைது செய்திருக்கிறோம். ஒருவர் மட்டும் தலைமறைவாக இருக்கிறார். அவரையும் விரைவில் பிடித்துவிடுவோம். பணத்துக்காக நண்பனே தன்னைக் கடத்திய தகவலையறிந்த முகமது ரபீக் மனவேதனையடைந்தார். ஏன் நண்பா இப்படி செய்தாய் என்று முகமது காசிமிடம் முகமது ரபீக் கேட்டபோது அவரால் பதில் சொல்ல முடியவில்லை" என்றனர்.
கார் வந்த கதை!
இந்த வழக்கில் கைதாகியிருக்கும் அம்பத்தூரைச் சேர்ந்த ராஜா, தனக்கு திருமணம் என்றும் அதற்கான அழைப்பிதழ்களைக் கொடுக்க வேண்டும் என அண்ணாநகரைச் சேர்ந்த நண்பன் ஒருவரிடம் சொகுசு காரை வாங்கியிருக்கிறார். அந்தக் காரைத்தான் கடத்தல் சம்பவத்துக்கு இந்தக் கும்பல் பயன்படுத்தியிருக்கிறது. ராஜாவை நம்பி காரைக் கொடுத்தவரும் தற்போது காவல் நிலையம் படியேறியிருக்கிறார்.
புகார் கொடுத்த 24 மணி நேரத்தில் போலீஸ் எனக்கூறி கடத்தல், பணம் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை கூண்டோடு உதவி கமிஷனர் அரிக்குமார் தலைமையிலான போலீஸ் டீம் பிடித்திருக்கிறது. போலீஸாரின் இந்தப் பணியை சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டியிருக்கிறார்.
நட்பைப் பயன்படுத்தி இந்தக் கும்பல் கடத்தல், பணம் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது நட்பு வட்டாரத்தை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-8-youths-in-cheating-case
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக