Ad

சனி, 30 ஜனவரி, 2021

எழுவர் விடுதலை: விரைவில் அறிவிப்பு... நம்பிக்கை தரும் தமிழக அரசு... காரணத்தை விளக்கும் வழக்கறிஞர்!

ராஜீவ்காந்தி, கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும், பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட ஏழு பேரும் விரைவில் விடுதலை செய்யப்படலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2018, செப்டம்பர் 9-ம் தேதி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்வதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுநருக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், ஆளுநர் அந்த மனு மீது எந்த முடிவும் எடுக்காமல் இருந்தார். அதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார், தண்டனை அனுபவித்து வருபவர்களில் ஒருவரான பேரறிவாளன். ஆளுநர் தாமதம் செய்துவருவது குறித்து உச்சநீதிமன்றமும் கேள்வி எழுப்பியது. தொடர்ந்து, எழுவர் விடுதலை தொடர்பான முழக்கங்கள் தீவிரமடைந்தன.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் கூடுகிறது அமைச்சரவை...!

இந்தநிலையில், கடந்த 21-ம் தேதி, பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ''தமிழக ஆளுநர் அடுத்த மூன்று அல்லது நான்கு நாள்களில் முடிவெடுப்பார்'' என மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். ஆனால், விடுதலை குறித்து தெளிவுபடுத்தக் கூறி பேரறிவாளன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதையடுத்து, 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்க ஒரு வார கால அவகாசம் வழங்கி (ஜன. 29-ம் தேதிக்குள்), வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஓத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்.

தொடர்ந்து, நேற்று மாலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநரைச் சந்தித்து, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி பரிந்துரைக் கடிதம் ஒன்றையும் கொடுத்து வந்தார். இந்தநிலையில், காந்தியின் நினைவு தினமான நேற்று, ஏழு பேரும் விடுதலை செய்யப்படலாம் எனத் தகவல் பரவியது. ஆனால், இன்று விடுதலை செய்யப்படுவதற்கு வாய்ப்பில்லை. திங்கள்கிழமையில் இருந்து புதன்கிழமைக்குள் நிச்சயமாக ஏழு பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என அடித்துச் சொல்கிறது வழக்கறிஞர்கள் வட்டாரம்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய வழக்கறிஞர் புகழேந்தி,

''விரைவில் அறிவிப்பு வரும். நேற்றே எதிர்பார்த்தோம் ஆனால் வரவில்லை. திங்கள்கிழமை அறிவிப்பு வருவதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கின்றன. கவர்னருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பது குறித்து, அரசியலமைப்புச் சட்டத்தில் மிகத் தெளிவாக அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 161-வது பிரிவில், ஆயுள் தண்டனைக் கைதிகளுக்கு, தண்டனையைக் குறைப்பது, மாற்றி அமைப்பது ஆகிய அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், உச்சநீதிமன்ற அமர்வில் இது தொடர்பாக ஒரு வழக்கு, 1980-ம் ஆண்டு கிருஷ்ணய்யர் தலைமையிலான அமர்வுக்கு விசாரணைக்கு வந்தபோது, '161-வது பிரிவில் கவர்னரின் அதிகாரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது மாநில அரசின் அதிகாரம் பற்றியது. அதில், கவர்னருக்குத் தனியாக முடிவெடுக்கும் எந்த அதிகாரமும் இல்லை. கேபினட் முடிவைத்தான் அவர் செயல்படுத்தமுடியும். கேபினட்டின் முடிவுக்கு அவர் கட்டுப்பட்டே ஆகவேண்டும்' என்றுதான் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மேலும் இரண்டு வழக்குகளிலும் இதேபோல் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் புகழேந்தி

ஆக, 161-ம் பிரிவின் அதிகாரம், மாநில அரசின் அதிகாரம்தான் என உச்சநீதிமன்றமே மூன்றுமுறை தெளிவுபடுத்திவிட்டது. கேபினட்டின் முடிவுக்குக் கட்டுப்பட்டவர்தான் கவர்னர் எனவும் தெளிவாகச் சொல்லிவிட்டது. 9.9.2018-ல் தமிழக அமைச்சரவை ஏழு பேரையும் விடுதலை செய்யவேண்டும் என முடிவெடுத்துவிட்டது. அதற்கான தீர்மானமும் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், ஆளுநர் எந்தவொரு முடிவும் எடுக்காமல் காலதாமதம் செய்து வந்தார். இதுவரை எந்தவொரு வழக்கிலும் கேபினட்டின் முடிவை ஆளுநர் இரண்டு ஆண்டுகளாக ஒத்தி வைத்ததாக வரலாறே இல்லை.

இந்தநிலையில், தன்னை விடுதலை செய்யக்கோரி, உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் ஒரு வழக்கு தொடுத்தார். அந்த வழக்கின் விசாரணையின்போது, 'மல்டி மானிட்டரிங் கமிட்டி, அதாவது சர்வதேச அளவில் ஏதாவது சதி நடந்ததா என்று நடக்கும் விசாரணை முடிவுக்காகக் காத்திருப்பதாக கவர்னரின் தரப்பில் சொன்னார்கள். ஆனால், உச்சநீதிமன்றமோ, 'அதற்கும் இதற்கும் சம்மந்தமில்லை, அந்த விசாரணை வேறு. அதைக் காரணம் காட்டி விடுதலை செய்யமாட்டேன் எனச் சொல்லமுடியாது' என தெளிவாகச் சொல்லிவிட்டது. இனிமேல், கவர்னருக்கு விடுதலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை. அதனால்தான், மத்திய அரசின் சி.பி.ஐ வழக்கறிஞரே நீதிமன்றத்தில், கவர்னர் இரண்டு நாள்களில் முடிவெடுப்பார் என்று சொல்லிவிட்டார்.

பேரறிவாளன்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஏழு பேரையும் விடுதலை செய்தே ஆகவேண்டும். உச்சநீதிமன்றமும் அதனால்தான் அழுத்தம் கொடுக்கிறது. முதல்வரும் கவர்னரைச் சந்தித்திருக்கிறார். அனைத்து விஷயங்களையும் வைத்துப் பார்க்கும்போது விடுதலை செய்வதற்கான பிராசஸ் நடந்துவருவதாகத் தெரிகிறது. கண்டிப்பாக திங்கள்கிழமை விடுதலை ஆகிவிடுவார்கள் என்றே தெரிகிறது'' என்கிறார் நம்பிக்கையாக.

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் இதுகுறித்துப் பேசினோம்,

''கனர்னருக்கு முதல்வர் ரிமைன்ட் செய்துவிட்டு வந்திருக்கிறார். சுப்ரீம் கோர்ட் ஆர்டர் குறித்தும் சொல்லிவிட்டு வந்திருக்கிறார். ஒருவாரம் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. கவர்னர்தான் இனி முடிவெடுக்கவேண்டும். நல்ல முடிவாக வரவேண்டும் என்றுதான் நாங்களும் எதிர்பார்க்கிறோம்'' என்றார்.

Also Read: தமிழ்நாடு நாள், எழுவர் விடுதலை, 7.5% இட ஒதுக்கீடு; அ.தி.மு.க-வில் இணையக் காரணம் - கல்யாண சுந்தரம்

தொடர்ந்து, அ.தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர், கோவை செல்வராஜ் இந்த விவகாரம் குறித்துப் பேசும்போது,

''தமிழக மக்களின் வேண்டுகோளை ஏற்று ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என மறைந்த முதல்வர் அம்மா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, விடுதலை செய்வதாகவும் அறிவித்தார். ஆனால், அப்போதைய மத்திய அரசு அதற்குத் தடை வாங்கிவிட்டது. தொடர்ந்து, அம்மா நீதிமன்றத்தில் கடுமையான சட்டப் போராட்டத்தையும் நடத்தி வந்தார்.

கோவை செல்வராஜ்

அம்மாவின் மறைவுக்குப் பிறகு, தமிழக முதல்வரான எடப்பாடி பழனிசாமி, நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பிவைத்தார். ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது கடுமையான விவாதத்துக்கு உள்ளானது. அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக கோரிக்கையை முன்வைத்தன. தொடர்ந்து தமிழக அரசின் சார்பாக நீதிமன்றத்திலும், சட்டப் போராட்டம் நடத்தப்பட்டது. அதன்படி, தற்போது மத்திய அரசின் வழக்கறிஞரும் நீதிமன்றத்தில் ஆளுநர் முடிவெடுப்பார் என்று சொல்லியிருக்கிறார். நீதிமன்றமும் விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பரிந்துரைத்தது. நேற்று முதல்வரும், நீதிமன்ற உத்தரவையும் கோடிட்டுக் காட்டி ஏழு பேரையும் விடுதலை செய்யவேண்டும் என வலியுறுத்திப் பேசி வந்திருக்கிறார். ஆளுநரும் பரிசீலித்து விரைவில் நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதனால், ஏழு பேரும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என அரசும் நம்புகிறது, அ.தி.மு.கவும் நம்புகிறது'' என உறுதியாகச் சொல்கிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/rajiv-gandhi-assassination-case-announcement-coming-soon-government-of-tamil-nadu-gives-hope

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக