Ad

சனி, 30 ஜனவரி, 2021

கப்பு முக்கியம் தினேஷு... இறுதி வேட்டையில் தமிழ்நாடு கிரிக்கெட்... கோப்பை யாருக்கு?! #SMAT2021

தோல்வியையே தொடாமல், தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருக்கிறது தமிழ்நாடு கிரிக்கெட் அணி. நடைபெற்றுவரும் சையது முஸ்தாக் அலி கோப்பையின் அரை இறுதிப் போட்டியில் நேற்று ராஜஸ்தான் அணியை எளிதாக வென்று, இறுதிப் போட்டியில் பரோடாவை சந்திக்க இருக்கிறது தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணி.

ஒவ்வொரு வருடமும் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான சையத் முஸ்தாக் அலி தொடர் #SMAT2021, இந்த வருடம் ஜனவரி 10-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 38 அணிகளும், 7 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒரு அணி 5 போட்டிகளில் விளையாடி, அதிகப் புள்ளிகளைப் பெறும் அணி, கால் இறுதிக்குத் தகுதி பெறுவதாக போட்டி அட்டவணை அமைக்கப்பட்டிருந்தது.

'பி' பிரிவில், இடம்பெற்றிருந்த தமிழ்நாடு அணி, தாங்கள் விளையாடிய 5 போட்டிகளிலும் அசத்தலான வெற்றி பெற்று, கால் இறுதிக்கு முன்னேறியது. கால் இறுதியில் ஹிமாச்சல் பிரதேஷை எதிர்கொண்ட தமிழ்நாடு அணி, பாபா அப்ரஜித் மற்றும் ஷாருக்கானின் அசத்தல் பேட்டிங்கால், 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரை இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றிருந்தது.

இன்று ராஜஸ்தான் அணியுடன் அரைஇறுதிப் போட்டியில் மோதிய தமிழ்நாடு, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்ய, பரத் ஷர்மா, கர்க்வால் ஓப்பனிங் இறங்கினார்கள். தமிழ்நாடு அணி சார்பாக சாய் கிஷோர், முதல் ஓவரை வீச நான்காவது பந்திலேயே முதல் திருப்புமுனை. பாபா அபராஜித்திடம் கேட்ச் கொடுத்து, அவுட் ஆகிச் சென்றார் பரத் ஷர்மா. இவரை அடுத்து வந்த கேப்டன் அசோக் மெனேரியா கர்க்வாலுடன் ஜோடி சேர்ந்து ஆட ஆரம்பித்தார்கள். 21 பந்துகளில் 29 ரன்களை எடுத்திருந்த கர்க்வால், பாபா அபராஜித் பந்தில் ஏற்கனவே ஒரு சிக்ஸர் அடித்திருந்த நிலையில் மற்றுமொரு சிக்ஸர் அடிக்க முயன்று தனது விக்கெட்டை இழந்தார் .

அடுத்து வந்த அர்ஜித் குப்தா கேப்டன் மெனேரியாவுடன் இணைந்து ஸ்கோரை வேகமாக உயர்த்தினார்கள். அஸ்வின் கிரிஸ்ட் வீசிய 6-ஆவது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் விளாசி, 19 ரன்களை எடுத்தார் ராஜஸ்தான் அணி கேப்டன் அசோக் மெனேரியா. தொடர்ந்து ரன்கள் இருபுறமும் வந்து கொண்டே இருந்தன.

முருகன் அஷ்வின் வீசிய 10-வது ஓவரில், அர்ஜித் குப்தா கொடுத்த எளிதான கேட்சைக் கோட்டை விட்டார் அஸ்வின் கிறிஸ்ட். மீண்டும் 12-ஆவது ஓவரில் சாய் கிஷோர் பந்தில், ராஜஸ்தான் கேப்டன் அசோக் மெனேரியா கொடுத்த கேட்சை கோட்டை விட்டார் அஸ்வின் கிறிஸ்ட். ஏற்கனவே அஸ்வின் கிறிஸ்ட் 2 ஓவரில், 29 ரன்களைக் கொடுத்திருந்த நிலையில், 2 கேட்ச்களையும் கோட்டைவிட்டது தமிழ்நாடு அணிக்கு பெரும் பாதகத்தை எற்படுத்தப்போகிறது என்ற பயத்தை ஏற்படுத்தி விட்டது.

13 ஓவர்களின் முடிவில், 120 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என்ற வலுவான நிலையில் இருந்த ராஜஸ்தான் அணி இதே வேகத்தில் சென்றால் 200 ரன்கள் எடுத்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3-ஆவது விக்கெட் விழுந்தது. இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாகப் பந்துவீசி வரும் சாய் கிஷோர், மீண்டும் ஒருமுறை பார்ட்னர்ஷிப்பை உடைத்தார்.

சாய் கிஷோர் வீசிய பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்று அருண் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து, அவுட் ஆகிச் சென்றார் கேப்டன் அசோக் மெனேரியா. அதற்குப் பிறகு விக்கெட்டுகள் சீட்டுக் கட்டுகளாய்ச் சரியத் தொடங்கின.

முருகன் அஷ்வின், சோனு யாதவ் என நமது பௌலர்கள் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்த விக்கெட் வேட்டை நடத்த வந்தார் முகமது. 15-வது ஓவரில் அதிரடி ஆட்டக்காரர் லோம்ரரை வீழ்த்திய முகமது இறுதி ஓவரில், மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி மொத்தமாகப் போட்டியை தமிழ்நாட்டின் பக்கம் மாற்றிவிட்டார்.

200 ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ராஜஸ்தான் அணி, தமிழ்நாடு அணி பௌலர்களின் சாதுர்யப் பந்துவீச்சால், வெறும் 154 ரன்கள் மட்டுமே எடுத்தது.

155 ரன்களை எளிதாக சேஸ் செய்துவிடலாம் என்று களம் இறங்கிய தமிழ்நாடு அணிக்கு, ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது, 3-வது ஓவரில், ஹரி நிஷாந்த் மற்றும் 4-வது ஓவரில் பாபா அபராஜித் அவுட் ஆகிச் செல்ல, போட்டி மீண்டும் ராஜஸ்தான் அணியின் பக்கம் திரும்பியது.

இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி, 4 அரைச் சதங்கள் எடுத்து 300 ரன்களுக்கு மேல் குவித்துள்ள ஓப்பனர் ஜெகதீசனுடன் அனுபவம் வாய்ந்த அருண் கார்த்திக் இணைந்து அணியை மீட்கும் முயற்சியில் இறங்கினார்கள். ஒரு பக்கம் ஜெகதீசன் பொறுமையாக ஆட, மறுபக்கம் அருண் கார்த்திக் அதிரடியைக் கையிலெடுத்தார். சீரான இடைவெளியில் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் அடித்துக் கொண்டே வந்தார்.

10-வது ஓவரில் 69 ரன்கள் இருந்தபோது ஜெகதீசன் சிக்ஸர் அடிக்க முயன்று மிட்விக்கெட் திசையில் கேட்ச் ஆகி அவுட் ஆனார். 10 ஓவர்களின் முடிவில் 70 ரன்கள் எடுத்திருந்த தமிழ்நாடு, அடுத்த பத்து ஓவரில் 85 ரன்களை எடுக்க வேண்டியிருந்தது.

அருண் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்த தமிழ்நாடு அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் ஆட்டத்தை வெற்றிப் பாதைக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் இறங்கினார்.

ராஜஸ்தான் அணி சிறுவர்கள் விளையாடும் அணி போல், கேட்ச் மேல் கேட்ச்சைக் கோட்டை விட்டு, எளிதாக தமிழ்நாடு அணியை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற வைத்தார்கள். அருண் கார்த்திக்கிற்கு மட்டும் 2 கேட்ச்கள் மற்றும் 1 எளிதான ரன் அவுட் வாய்ப்பைத் தவற விட்டும், தினேஷ் கார்த்திக்கு 1 கேட்ச்சை தவற விட்டும் போட்டியை மொத்தமாக கோட்டை விட்டனர் ராஜஸ்தானியர்கள்.

தொடர்ந்து கேட்ச்களை விட்டதின் பலனாக, அடுத்தடுத்து பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் அடித்து, 19-ஆவது ஓவரில், 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றியைப் பெற்றது தமிழ்நாடு. 54 பந்துகளைச் சந்தித்து, 9 பவுண்டரிகள் மற்றும், 3 சிக்ஸர்கள் அடித்து, 89 ரன்களைக் குவித்த அருண் கார்த்திக் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மறுமுனையில் தினேஷ் கார்த்திக், 26 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

31-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில், தமிழ்நாடு அணி இன்று நடைபெறும் மற்றுமொரு அரையிறுதிப் போட்டியில் வெல்லும் அணியைச் சந்திக்கும்.

போனவருடம் நடந்த இறுதிப்போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் கர்நாடகாவிடம் போராடி தோல்வியுற்ற தமிழ்நாடு அணி, இந்தமுறை கோப்பையைக் கைப்பற்றும் முனைப்பில் களம் இறங்கக் காத்திருக்கிறது.

2007-ம் ஆண்டு, சையது முஸ்தாக் அலி கோப்பையை வென்ற தமிழ்நாடு அணி, அதற்குப் பிறகு கோப்பையை வென்றதே இல்லை... கப்பு முக்கியம் பாய்ஸ்!



source https://sports.vikatan.com/cricket/tamilnadu-enters-into-syed-mushtaq-ali-trophy-final

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக