ஞாயிறு என்பதால் இரவு 9 மணியைக் கடந்தும், மக்கள் கூட்டம் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது.
'பிளாஸ்டிக்' பாட்டில் ஒன்றை முன்னும் பின்னுமாக இழுத்துப் போட்டு விளையாடிக் கொண்டிருந்தன கடல் அலைகள். அடித்து வரப்பட்ட நண்டு ஒன்று, முழு பலத்துடன் கரையைக் கடக்க முயற்சி செய்துகொண்டிருந்தது. நிலவொளியில் வெள்ளி காசுகளைப் போல, கரையெங்கும் கூழாங்கற்கள் மின்னிக் கொண்டிருந்தன.
'காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில்...
காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில்...'
- தள்ளுவண்டியில் இளையராஜாவின் பாடல், கடலோசை விடவும் ரம்மியமாக ஒலித்துத் கொண்டிருந்தது.
கரையோரம் இருந்த படகுகள், ஒன்றை ஒன்று பார்த்தபடி இருந்தன. அதில் உடைந்து போன படகின் ஒரு பகுதி மட்டும் மண்ணுக்கடியில் புதைந்து இருந்தது. உடைந்த அந்த படகின் ஒரு ஓரமாக, மல்லாந்து படுத்தபடி கடல் காற்றை அனுபவித்துக் கொண்டிருந்தான் அவன். அவன் தோளில் இருந்த பையில், காலி பாட்டில்கள் பல சேகரிக்கப் பட்டிருந்தன.
பஞ்சுமிட்டாயுடன் அவனருகில் வந்த ஒரு சிறுமி, 'வேண்டுமா?' என கேட்பதைப்போல கை நீட்டினாள். தலை சொரிந்தபடி அதை வாங்கிய அவன் முகம் முழுக்க தாடி பரவியிருந்ததால், அவன் சிரிப்பதை அவள் பார்த்திருக்க வாய்ப்பில்லை. திடீரென அங்கு வந்த ஒருவர், அவன் கையிலிருந்த பஞ்சுமிட்டாயைப் பிடுங்கினார். கண்ணத்தில் ஓங்கி ஒரு அறை!
அவன் சார்பாக அழுத அந்த சிறுமியை தூக்கிக் கொண்டு புறப்பட்டார் அவர். நேற்றுப் பறித்த ரோஜாவைப் போல அவனது முகம் வாடியது. சிறிது நேரம் அமைதியாக இருந்தான். பொறியில் அகப்பட்ட எலி ஒன்று, 'கீச் கீச்...' என கத்துவதைப் போன்ற சத்தம் அவனது அமைதியைக் கலைத்தது.
திருமணநாள் இரவுக்காக, முன்பே ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தனர் இருவர். அதைக் கண்டதும், வாடிப்போன அவன் முகம் மீண்டும் மலர்ந்தது. தனக்குத் தானே வெட்கச் சிரிப்பை உதிர்த்தான்.
பையை தூக்கிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்ட அவனுக்கு,'சுண்டல், சுண்டல்...' என்று கூவிய சிறுவனின் வார்த்தை காதில் விழுந்தது. கிழிந்து தொங்கிய மேல்சட்டை பாக்கெட்டில் கையை விட்டபோது, ஐந்து ரூபாய் நாணயம் ஒன்று சிக்கியது. அதைக்கொண்டு ஒரு சுண்டல் பொட்டலத்தை வாங்கிக் கொண்டான் அழன். எல்லாம் விற்று சூடாறிப்போய் மீதமிருந்த சுண்டல் அது. இரவு உணவாக அதில் கொஞ்சத்தை உண்டுவிட்டு, கீழே ஏதாவது பாட்டில்கள் கிடக்கிறாதா என தேடியபடி நடக்கத் துவங்கினான் அவன்.
மணி பத்தைக் கடந்திருந்தது.
சிறிது தூரம் நடந்த அவன் கண்ணுக்கு அவள் தென்பட்டாள். சிவப்பு நிற ரவிக்கையில் கோல்டன் கலர் பார்டர் வைத்து தைத்த அவளது புடவை, அந்த மின்கம்பத்திலிருந்து விழுந்த மஞ்சள் கலர் ஒளி பட்டு அவள் அழகை அப்பட்டமாகக் காட்டியது. இருளிலும் அவளது மூக்குத்தி, வண்ணத்துப் பூச்சியைப் போல மின்னியது. அவள் வைத்திருந்த மல்லிகை பூவின் மணம், கடற்கரை காற்றுடன் இணைந்து கவிதை பாடிக் கொண்டிருந்தது. கைபேசியை அடிக்கடி பார்த்தபடி, யாருக்காகவோ எதற்காகவோ காத்துக் கொண்டிருந்தாள் அவள். அவளையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்த அவன், திடீரென கை கால்களை ஆட்டியபடி கத்தினான். தன் வயிற்றை பெரிதாக காண்பித்து, மீசையை முறுக்கினான்.
அவளுக்குப் புரிந்து விட்டது. அருகில் கடலோர காவல் படை. இங்கு நிற்பது ஆபத்து.
அவனைப் பார்த்து, 'பிளைன் கிஸ்' ஒன்றை கொடுத்தபடி, தலையில் ஹெல்மட்டுடன் KZ வண்டியில் வந்த ஒருவனிடத்தில் ஏறிக்கொண்டாள் அவள். வெகுளியாக அதைப் பார்த்து சிரித்துக் கொண்ட அவன், மஞ்சள் ஒளியில் அவள் மறையும் வரை கையசைத்தான்.
அதற்குள் மணி பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. காலி பாட்டில்களை எல்லாம் ஒரு பெரிய சாக்குப்பையில் மூட்டை கட்டிய அவன், வழக்கமாக தான் உறங்கச் செல்லும் கலங்கரை விளக்கத்தை அடைந்தான். அவனைப்போலவே அங்கு பலர் இருந்தனர்.
உண்டு மீதம் வைத்திருந்த சுண்டல் பொட்டலம், அவன் தொடையை அரித்தது. எப்போதும் அவன் அருகிலேயே உறங்கும் நாய் ஒன்று, அவனைப் பார்த்ததும் வால் ஆட்டியபடி ஓடிவந்தது. சுண்டல் பொட்டலத்தை அதற்கு போட்டு விட்டு, அந்நாளை மகிழ்வோடு கடத்திய உணர்வோடு படுத்ததும் உறங்கிப் போனான் அவன்.
- சரத்
source https://cinema.vikatan.com/literature/short-story-marina
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக