Ad

சனி, 30 ஜனவரி, 2021

'கோமாளி' புகழின் 'என்னை மன்னிக்கணும்' மொமன்ட்ஸ்... 'சூப்பர் சிங்கர்' முதல் ஷோ சுவாரஸ்யங்கள்!

தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் இசை ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமான ஷோவான சூப்பர் சிங்கர் எட்டாவது சீசனை எட்டியிருக்கிறது. 2006-ல் ஆரம்பித்த இந்த ஷோவால் பிரபலமடைந்த பலரையும் நமக்குத் தெரியும். சின்மயி தொகுப்பாளராக இருந்த முதல் ஷோவில் வெற்றி பெற்ற நிகில் மேத்யூ அதன்பிறகு 'பீமா' படத்தின் ‘எனதுயிரே எனதுயிரே’வில் ஆரம்பித்து தெலுங்கு, மலையாளம் என்று பல பாடல்கள் பாடிவருகிறார். அடுத்த சீசன்களின் வெற்றியாளர்களான அஜீஷ், சாய்சரண், திவாகர், ஆனந்த் அரவிந்தாக்‌ஷன், செந்தில் கணேஷ், மூக்குத்தி முருகன் உள்ளிட்ட பலரும் பிரபலமாகிவிட்டார்கள்.

போட்டியாளர்கள் தேர்வில் நடக்கும் உள்விவகார விமர்சனங்களைத் தாண்டி, இந்த ஷோவின் வெற்றிக்குக் காரணம் இதற்கு அமைந்திருக்கும் குழு. மணி & Band ஒவ்வொரு பாடலின் இசையையும் அவ்வளவு நேர்த்தியாகப் பிரதியெடுத்து இசையமைப்பார்கள். கலந்து கொள்ளும் பாடகர்களை தங்கள் நேர்மையான விமர்சனங்கள் மூலம் நெறிப்படுத்துவார்கள் நடுவர்கள். இன்னொரு பக்கம் தொகுப்பாளர்களாக சின்மயியும் சிவகார்த்திகேயனுக்கெல்லாம் அடுத்து 2011-ல் இருந்து மாகாபா ஆனந்தும், 2015-ல் அவருடன் இணைந்து பிரியங்காவும் நிகழ்ச்சியை அவ்வளவு கலகலப்புடன் கொண்டு செல்கின்றனர்.

கடந்த ஞாயிறன்று கிட்டத்தட்ட 9 மணிநேரம் நடந்த இந்த ‘சூப்பர் சிங்கர் கிராண்ட் லான்ச்’-சின் சில முக்கியத் தருணங்களைப் பார்ப்போம்.

செட் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருக்க மாகாபா ஆனந்த் அட்டகாச ஆட்டத்துடன் களத்தில் இறங்கினார். பல்வேறு கட்டத்தில் இருந்து வடிகட்டப்பட்டு இருபது போட்டியாளர்களுடன் இந்த எட்டாவது சீசன் தொடங்கியது. தன் டிரேட் மார்க் சிரிப்போடு எங்கிருந்தாவது என்ட்ரி ஆவார் பிரியங்கா என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மணிமேகலை, ஜாக்குலின், ஷிவாங்கி, ‘ஈரமான ரோஜாவே’ பவித்ரா என்று நால்வரை மேடைக்கு அழைத்த மாகாபா, “இன்னைக்கு நீங்க நாலுபேரும் மாத்தி மாத்தி ஆங்கரிங் பண்ணணும்” என்றார். மொத்த ஷோவையும் ஒற்றை ஆளாகத் தாங்கி, தொகுத்து வழங்கிய மாகாபா... நீ கிரேட்யா! தொகுப்பாளினிகளில் மணிமேகலைக்கு முதல் ரேங்க்கும், ஷிவாங்கிக்கு இரண்டாவது ரேங்க்கும் கொடுக்கலாம். சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த சீனியர் தொகுப்பாளினி டிடி ஒருசில முக்கிய மொமன்ட்களைத் தாங்கிக் கொண்டு அசால்ட் காட்டினார்.

மணிமேகலைக்கு இயல்பாகவே செம டைமிங் சென்ஸ் இருக்கிறது. ஷிவாங்கியிடம், ஷிவாங்கி குரலிலேயே பேசிய இடத்தில் நம்மையும் அறியாமல் கைதட்ட வைத்துவிட்டார். சூப்பர் சிங்கரில் புகழ் பெற்று, குக்கு வித் கோமாளியில் டபுள் ப்ரமோஷன் வாங்கிய ஷிவாங்கியும் சளைக்காமல் தொகுத்து வழங்கினார். கொஞ்சம் பயம், கொஞ்சம் பதற்றம் என்று அவர் நடந்து கொண்ட விதம் ரசிக்கவே வைத்தது.

* உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயாள், கல்பனா ஆகியோர் நடுவர்கள். கல்பனா, சென்ற சூப்பர் சிங்கர் ஜூனியருக்குப் பிறகு சீனியர் நிகழ்ச்சிக்கு (தமிழில்) முதல்முறையாக நடுவராக இருக்கிறார். அனுராதா ஸ்ரீராம் கருத்துகளை வாரி வழங்கத் தயாராக வந்திருந்தார். உன்னி, அவரது டிரேட் மார்க் டான்ஸை வழங்க... பென்னி ஸ்பெஷல் பர்ஃபாமென்ஸில் கலக்கினார்.

* எஸ்பிபி சரண், விஜய் ஏசுதாஸ், விஜய் பிரகாஷ், கார்த்திக், பிரதீப் குமார், சக்தி ஸ்ரீ கோபாலன், சைந்தவி, சாஷா திருப்பதி, சித் - ஆஆஆஆ... ஆஆஆ - ஸ்ரீராம், கானா பாலா, சின்னப் பொண்ணு, அந்தோணி தாசன், கருணாஸ், கிரேஸ் கருணாஸ் என்று இசைக்கலைஞர்கள் சங்கமமாகவே இருந்தது. எந்தப் பக்கம் கேமரா திரும்பினாலும் ஏதோ ஒரு விஐபி ஃப்ரேமில் தெரிந்தார். வாய்ஸ் அனலிஸ்ட் அனந்த் வைத்தியநாதனை ஏனோ காணவில்லை.

* சிறப்பு விருந்தினர்களாக ஹரிஹரனும், சங்கர் மகாதேவனும் கலந்து கொண்டனர். ஹரிஹரன் பாடியதோடு அங்கங்கே ஆடுவதும், மாகாபாவோடு சேர்ந்து கலாய்ப்பதுமாய் இருந்தார். சூப்பர் சிங்கர் செட்டுக்கு ஏற்கெனவே பழக்கமான சங்கர் மகாதேவனும் புதிய போட்டியாளர்களுக்கு உற்சாக டிப்ஸ் வழங்கினார். ஹரிஹரனும், சங்கர் மகாதேவனும் இணைந்து கொடுத்த கடைசி ஜூகல் பந்தி... ஸ்பெஷல் விருந்து என்றால், அவர்களோடு இணைந்து இசைத்த ஸ்டீஃபன் தேவஸியின் பர்ஃபாமென்ஸ் ஐஸ்க்ரீமில் செர்ரி!

* மணி & Band வழக்கம்போலவே மிகச் சிறப்பாக இசையமைத்தனர். கார்த்திக் கீபோர்டில் மாயாஜாலங்கள் நிகழ்த்தினார். சாமி, மணி உள்ளிட்ட ஆஸ்தான கலைஞர்களின் நேர்த்தி நிகழ்ச்சியை வெகுவாக ரசிக்க வைத்தது.

* அடுத்து விஜய் டிவி ஸ்டார்ஸ். ரக்‌ஷன், புகழ், பாலா, சரத், ராமர், தங்கதுரை, சுனிதா என்று நிகழ்ச்சிக்கு சுவைகூட்ட “ஏறுங்க வண்டில இடமிருக்கு’ என்று இவர்களையும் கூட்டிக்கொண்டு வந்திருந்தார்கள். புகழ் தன் டைமிங் சென்ஸாலும், பாடி லேங்வேஜிலும் கலக்க, பாலா பாடிய ஒரு ராப் பாடலுக்கு அத்தனை வரவேற்பு இருந்தது.

* முந்தைய சூப்பர் சிங்கர் பங்கேற்பாளர்கள் பலரும் பங்கேற்றனர். புதிய போட்டியாளர்களுடன், அவர்களும் சேர்ந்து பாடுமாறு நிகழ்ச்சியை வடிவமைத்து, புதியவர்களை ‘ஈஸி’யாக்கிய நிகழ்ச்சியின் இயக்குநர்களுக்கு ஸ்பெஷல் பாராட்டு.

நிகழ்ச்சியில் பல சுவாரஸ்ய தருணங்கள் நடைபெற்றன. அவற்றில் சில...

ப்ரியங்கா (அதான்... மாலை சூடி...ஆஆ.. ஆஆ.. அந்தப் ப்ரியங்காதான்!) லாக் டௌன் நாட்களில் இரவானால் ஒரு ரிடில் சொல்கிறார் என்றார் மாகாபா. ரிடில்னா நெடில் குறில் ரிடில்தானே என்று புகழ் கேட்டார். விடுகதைங்க என்ற ப்ரியங்கா, செட்டில் ஒரு விடுகதை சொன்னார்.

“ஒரு கரப்பான்பூச்சி டீக்கடைக்குப் போய்டுச்சு. அங்க ‘ஆலுமா டோலுமா’ பாட்டு போட்டதும் அந்த கரப்பான்பூச்சி செத்துப் போச்சு.. ஏன்னு சொல்லுங்க” என்றார். ஆளாளுக்கு ஏதேதோ சொல்ல... புகழ் எழுந்தார். தொண்டையை செருமிக் கொண்டு ஆரம்பித்ததும், செட்டே அமைதியானது. மிகவும் ‘கம்மிய’ குரலில் சொன்னார். “எல்லாரும் என்னை மன்னிக்கணும். இத்தனை பேர் கேட்கறப்ப என்னால மறைக்க முடியல.. சொல்லவேண்டாம்னுதான் நெனைச்சேன்... அன்னைக்கு டீ சாப்டப் போன இடத்துல காலால மிதிச்சு அந்தக் கரப்பான்பூச்சியக் கொன்னது நான்தான்” என்றதும் சிரிப்பில் அரங்கமே அதிர்ந்தது. அடுத்தது அதே போல ஒரு விடுகதையை ’பூவையார்’ கேட்டதும் ‘என்னை எல்லாருமே மன்னிக்கணும்’ என்று புகழ் எழுந்ததுமே ஆரவாரம் செய்தது அரங்கம்.

* ஸ்பெஷல் பர்ஃபாமென்ஸ் எல்லாமே வேற லெவல். சரணும் விஜய் ஏசுதாஸும் பாடிக் கொண்டிருந்த பாடலுக்கு நடுவர்களும் மெய்ம்மறந்தனர். விஜய் ஏசுதாஸ் ‘உறவுகள் தொடர்கதை’ பாட ஆரம்பித்ததுமே கல்ப்னாவின் கண்கள் கலங்கியது. சரணின் குரலில் ‘கம்பன் ஏமாந்தான்’ கேட்டதும் எஸ்பிபி நினைவில் அடக்க முடியாமல் - ஆத்திரமாக - தொடையில் அடித்துக் கொண்டார் மாகாபா. பாடி முடித்ததும் எஸ்பிபி, ஏசுதாஸ் இருவரைப் பற்றியும் அனுராதா ஸ்ரீராம் பேச, எஸ்பிபியின் நினைவுகள் அரங்கத்தில் இருந்தவர்களையும் பார்க்கும் நம்மையும் பற்ற்க்கொண்டது. கல்பனா கண்ணீரோடு சரணைக் கட்டிக்கொண்டார்.

விஜய் ஏசுதாஸ் ``அவர் லைஃபையே ஒரு கொண்டாட்டமா வாழ்ந்தவர். நிச்சயம் அவரோட நினைவுகளும் நமக்கு கொண்டாட்டம்தான்” என்றதை சரணும் ஆமோதித்தர். “அப்பாவோட ஃபேவரிட் நிகழ்ச்சி இது. அவர் உங்களைப் பார்த்து, வாழ்த்திட்டுதான் இருப்பார்” என்றார் சரண். அந்த சில நிமிடங்கள் நெகிழ்ச்சியின் உச்சமாக இருந்தது.

* சாஷா திருப்தி ‘வான் வருவான்’ பாடலை மிக உயரத்தில் நின்று கொண்டு 3D Mapping உடை அணிந்துகொண்டு பாடினார். இசைக்கு ஏற்ப அவரது உடையில் வண்ணங்கள் மாறின. அத்தனை உயரத்தில் நின்று கொண்டு ஸ்ருதி மாறாமல் பாடியதை, பலரும் பாராட்டிக் குறிப்பிட்டனர். கார்த்திக் ‘ஏ... சினாமிகா’ பாடலைப் பாடினார். அந்தப் பாடலில் ‘நீ என்னை நீங்காதே’ என்று கிட்டத்தட்ட பெண்குரலில் வரும் (falsetto என்பார்கள் இதை) வரிகளையும் பாடியது கார்த்திக்தான் என்று அன்றுதான் எனக்குத் தெரிந்தது. பிரதீப் குமார் பாட, அவரின் பெரும் ரசிகனான ஷாம் விஷால் சிலை போல அமர்ந்தபடி ரசித்தார். சைந்தவி ``எள்ளுவய பூக்கலையே'' பாடும்போதும் அத்தனை நெகிழ்வாக இருந்தது அரங்கம்.

* சித் ஸ்ரீராமும், பிரதீப் குமாரும் போட்டியாளர்கள் பலரின் ஃபேவரிட் பாடகர்கள் என்பது அவர்கள் கொடுத்த ரியாக்‌ஷனில் தெரிந்தது. எல்லா பாடல்களையும் ஒரு இடத்தில் நிற்காமல், அவர் இஷ்டத்துக்கு இம்ப்ரவைஸ் செய்து பாடிய சித் ஸ்ரீராம், ’ஒன்ன நெனைச்சு நெனைச்சு உருகிப் போனேன் தனியா’ பாடலை உட்கார்ந்த இடத்தில் இருந்து ஆடாமல் அசையாமல் ஒரு வரி மாற்றாமல் அசத்தலாகப் பாடினார்.

* கிரேஸ் கருணாஸும், கருணாஸும் பாடிய நாட்டுப்புறப் பாடலுக்கு (வந்தா வராண்டி மருத சுண்ணாம்பு தாண்டி போனாப் போறாண்டி புதுக்கோட்டை போயிலதாண்டி) செட்டில் இருந்த ஒருத்தர் விடாமல் மேடைக்கு வந்து ஆடினார்கள்.

* உன்னி கிருஷ்ணன், தன் மகள் உத்ராவுடன் ‘நறுமுகையே நறுமுகையே’ பாடினார். அனுராதா ஸ்ரீராம், கல்பனா, பென்னி தயாள் என்று நடுவர்களும் பெர்ஃபார்மென்ஸ்களில் அப்ளாஸ் அள்ளினர். கானா பாலாவின் ‘ஆத்தங்கர ஓரத்தில் நின்னாளே ‘ பாடலும் அரங்கில் எனர்ஜியை ஏற்றியது.

* போட்டியாளர்களில் கானா சுதாகர் (இவர்தான் ’என் மைமா பேருதாண்டா அஞ்சல’ பாடலை எழுதிப் பாடியவர்), தாராவியில் இருந்து வந்த அய்யனார் இருவரும் கவனிக்க வைத்தனர். எல்லாரையும் விட அதிகம் கவர்ந்தவர் முத்துச்சிற்பி. தென்மாவட்டங்களில் பல்வேறு நாடகங்களில் பங்கெடுத்துப் பாடிய இவரது காணொளிகளை, சில வருடங்களாக யூ ட்யூபில் பார்த்து, கேட்டிருப்போம். உச்சஸ்தாயியில் அப்படி, அநாயாசமாகப் பாடுவார். லாஞ்ச் ஷோவில் நாரதர் வேடத்தில் இவர் பாடியபோது இவர் குரல் எட்டும் உச்சம் கண்டு ஹரிஹரனும், சங்கர் மகாதேவனும் ஆச்சர்யப்பட்டுக் கொண்டே இருந்தனர். அனைத்து நடுவர்களும், பிரபலங்களும் மேடைக்கு வந்து முத்துச் சிற்பியைப் பாராட்டும்போது பேசிய பேச்சில் அத்தனை வெள்ளந்தித்தனம் இருந்தது. நேற்றைக்கு விஜய் டிவியால் வெளியிடப்பட்ட வரும் வார ப்ரமோவில் ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ பாடலைப் பாடுகிறார் முத்துச்சிற்பி. வெறித்தன வெயிட்டிங்!

* அய்யனார் தன் குழுவினரோடு பாடிய, “வேணாம் நாங்க வேறமாதிரி.... எங்க முகவரி மும்பை சிட்டி தாராவி... ஆமா வேணாம் இனி வேற மாறி இனி சென்னை சிட்டியோட எங்க கச்சேரி’ பாடலுக்குப் பிறகு பாலாவுக்கு சவால் விட்டார் மாகாபா. ஆனந்த அதிர்ச்சியாக பாலா, புகழ், சரத் களத்தில் இறங்கினர். பாலா எழுதிப் பாடிய ‘‘செந்தில் ராஜலச்சுமி... தைரியம் இருந்தா டச்சு மீ!’ என்ற வரிகளுடன் அமைந்த ராப் அவ்வளவு ப்ரொஃபஷனலாக இருந்தது.

* நிகழ்ச்சியின் ஆகச்சிறந்த மொமன்ட் உன்னி கிருஷ்ணனுக்கு நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்த கௌரவம். 15 வருடங்களாக சூப்பர் சிங்கருடன் பயணிக்கும் உன்னி கிருஷ்ணனை கௌரவிக்கும் விதமாக ஒரு அசத்தலான ஆடியோ விஷுவல் ஒளிபரப்பப்பட்டது. உன்னி கிருஷ்ணனே இதை எதிர்பார்க்கவில்லை என்பது அவரது உடல்மொழியில் தெரிந்தது. ஆடியோ விஷுவல் முடிந்ததும் அனைவரும் அவரைப் பாராட்ட நெளிந்து கொண்டே நின்று கொண்டிருந்தார். ‘`இவரு கோவப்பட்டு நான் பார்த்ததே இல்லை’' என்பதையே பலரும் பல்வேறு விதமாகச் சொல்லிக் கொண்டிருந்தனர். `‘யாருமே இப்படியெல்லாம் சொன்னதே இல்லப்பா... ரொம்ப ஓவர் இதெல்லாம்'’ என்றார் உன்னிகிருஷ்ணன். அவருக்கு 'Stalwart of Super Singer' விருது கொடுத்தனர். அதேப்போல முதல் சீசன் வின்னரான நிகில் மேத்யூவுக்கு ‘ஐகான் ஆஃப் சூப்பர் சிங்கர்’ விருது கொடுக்கப்பட்டது.

இருபது போட்டியாளர்களில் இருந்து ஆரம்பித்த இந்த ஷோ... டாப் டென்... டாப் ஃபைவ்.. டாப் த்ரீ என்று அடுத்தடுத்த கட்டங்களுக்கு வரும் நாட்களில் நகரும்.

நாளைக்கு வரப்போகும் நம்பர் ஒன் யாராகவும் இருக்கலாம்... இருபதில் ஒருவர் என்பதே மிகப்பெரிய இடம்தான்.

எனவே... இந்த இருபது பேருக்கும்... வாழ்த்துகள் மக்கா... கலக்குங்க!



source https://cinema.vikatan.com/television/super-singer-grand-launch-special-moments

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக