Ad

சனி, 30 ஜனவரி, 2021

குமரி: `தேர்தலில் வெற்றி பெற்றது போல் பேசுகிறார் ஸ்டாலின்!' - சரத்குமார்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடந்த சமத்துவ மக்கள் கட்சியின் தென் மண்டல பொறுப்பாளர் கூட்டத்தில் சரத்குமார் கலந்துகொண்டு நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த சரத்குமார், "கூட்டணியில் பெரிய கட்சிகளின் சின்னத்தில் போட்டியிடும்போது நமது கட்சியின் தனித்துவம் இல்லாமல் போய்விடுகிறது. சில கருத்து வேறுபாடுகள் வரும்போதும், சில திட்டங்களைத் செயல்படுத்தும் போதும், நாம் கருத்து சொல்ல உரிமை இல்லாமல் போய்விடுகிறது.

தனி சின்னத்தில் போட்டியிட்டால் தான் சுதந்திரமாக செயல்பட முடியும். ஸ்டாலின் தேர்தலில் வெற்றி பெற்றது போல் பேசுகிறார். 100 நாள்களில் பொதுமக்கள் பிரச்னைகளையும் தீர்ப்பேன் என்று அவர் கூறுகிறார். அது எப்படி சாத்தியமாகும் இது வெறும் தேர்தல் வாக்குறுதி மட்டும்தான்.

நாகர்கோவிலில் பேட்டி அளித்த சரத்குமார்

டெல்லியில் வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராடி வருகின்றனர். வேளாண் சட்டம் குறித்து புரிதல் ஏற்படுத்த வேண்டும். எந்த ஒரு சட்டத்தையும் மறுபரிசீலனை செய்யலாம் என்பதுதான் என் கருத்து. தேர்தலில் விகிதாச்சார அடிப்படையில் ஆட்சி அமைக்கப் பட வேண்டும் என்பதுதான் என் கருத்து. தேர்தலில் நிரந்தர சின்னம் என்பது இருக்கக்கூடாது. ஒரே சின்னம் அளிப்பதால் மக்கள் அந்த சின்னத்திற்கு ஓட்டுபோடுகிறார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு சின்னம் கொடுக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் இது போன்று ஒரு சட்டம் கொண்டு வருவதற்காக மக்கள் முயன்றால் அது சாத்தியமாகும்.

தமிழக அரசியலில் கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத வெற்றிடம் இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணிகள் மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன. இனி வரும் தேர்தலில்  கூட்டணிகள் மாறாமல் இருப்பதற்காக புதிய முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்" என்றார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட ச.ம.க நிர்வாகிகள்

இந்த கூட்டத்தில் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட 350 வழக்குகளில் இன்னும் 84 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனால் அவர்கள் அரசு வேலை மற்றும், வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிலை இருப்பதால் அந்த வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்றும், பனை மற்றும் தென்னை தொழிலாளர்களுக்கு அரசு சிறப்பு ஒதுக்கீட்டில் தனி வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



source https://www.vikatan.com/news/politics/sarathkumar-press-meet-in-nagercoil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக