இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறையின் முன்னாள் மாநில செயலாளர் வி.வி.செந்தில்நாதன் பா.ஜ.கவில் இணைந்திருப்பது, கரூர் மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஒதுக்கியதால், வி.வி.செந்தில்நாதன் பா.ஜ.க-வுக்குத் தாவியதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்
அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டவர் வி.வி.செந்தில்நாதன். அதோடு, ஜெயலலிதா இருந்த காலத்தில், இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறையின் மாநிலச் செயலாளர் ஆக்கப்பட்டவர். தொடர்ந்து, அந்தப் பதவி பறிக்கப்பட்டு, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் கரூர் மாவட்டச் செயலாளராக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு, இவரது அந்த மாவட்டப் பொறுப்பும் பறிக்கப்பட்டது.
Also Read: `சொன்னது மண்பானை உணவகம்; புதுக்கோட்டை டீம் படுரகசியம்!’ - `குக் ராகுல்’ ரகசியம் பகிரும் ஜோதிமணி
இதன் பின்னணியில், கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருந்ததாகக் கூறப்பட்டது. காரணம், எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிபாரிசின்றி இரண்டு முறை அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு, அ.தி.மு.க தலைமையிடம் இருந்து எம்.எல்.ஏ சீட் பெற்றவர் செந்தில்நாதன். அந்த அளவுக்கு தலைமையோடு நேரடித் தொடர்பில் இருந்தார். இதனால், எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குப் போட்டியாக, கரூர் மாவட்ட அரசியலில் வி.வி.செந்தில்நாதன் வளர்ந்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில்தான், செந்தில்நாதன் வகித்து வந்த மாவட்டச் செயலாளர் பறிக்கப்பட்டதின் பின்னணியில், எம்.ஆர்.விஜயபாஸ்கரின் பெயர் அடிபட்டது. இதனால், கடந்த நான்கு மாதங்களாக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்த்து வந்தார் செந்தில்நாதன். `காங்கிரஸ் கட்சிக்குத் தனது ஆதரவாளர்களோடு செல்ல இருக்கிறார்' என்ற பேச்சு முதலில் அடிப்பட்டது. ஆனால், அதை மறுத்து வந்த வி.வி.செந்தில்நாதன், சென்னை கமலாலயத்தில், பா.ஜ.க மாநிலத் தலைவர் முருகன் மற்றும் பா.ஜ.க தேசியச் செயலாளரும் தமிழகப் பொறுப்பாளருமான சி.டி.ரவி தலைமையில் அக்கட்சியில் இணைந்திருக்கிறார். அ.தி.மு.க-வின் முக்கிய பிரமுகரான செந்தில்நாதன் பா.ஜ.க-வில் இணைந்தது, கரூர் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, கரூர் மாவட்ட அ.தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தோம். ``வி.வி. செந்தில்நாதன் பா.ஜ.க-வில் இணைந்ததன் பின்னணியில், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியும், பா.ஜ.க துணைத் தலைவருமான அண்ணாமலை இருப்பதாக சொல்கிறார்கள். இவர், கரூர் மாவட்டத்தில் பா.ஜ.க-வை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாகவே, அவர் செந்தில்நாதனை பா.ஜ.க பக்கம் இழுத்ததாகத் தெரிகிறது. பா.ஜ.க-வை தமிழகத்தில் வளர்க்க வலுவான ஆளுமை கொண்ட தலைவர்களை உருவாக்கி, வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலை சந்திப்பதே பா.ஜ.க-வின் தேர்தல் வியூகம். இதனடிப்படையில், செந்தில்நாதன் பா.ஜ.க-வுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அவர் ஏற்கெனவே போட்டியிட்ட அரவக்குறிச்சி தொகுதியில், வரும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் வேட்பாளராகக் களமிறக்கப்படலாம்னு சொல்றாங்க. வரும் தேர்தலில் கரூர் தொகுதியில் தி.மு.க சார்பில் செந்தில் பாலாஜியும், அ.தி.மு.க சார்பில் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் போட்டியிட இருக்கிறார்கள். ஆனால், இருவரில் யாராவது ஒருவர் நிச்சயம் தோல்வி அடைவதை, அவர்கள் இருவரும் சார்ந்த சமூகத் தலைவர்கள் விரும்பவில்லை.
இந்த சிக்கலைத் தவிர்ப்பதற்காகவே செந்தில்நாதன் பா.ஜ.க-வுக்கு இழுக்கப்பட்டிருக்கிறார் என்று ஒருதரப்பு சொல்கிறது. அதாவது, கரூரை கூட்டணி கட்சியான பா.ஜ.க-வுக்கு ஒதுக்கினால், கரூரில் செந்தில்பாலாஜியை எதிர்த்து செந்தில்நாதனை போட்டியிட வைக்கலாம். எம்.ஆர்.விஜயபாஸ்கர், அரவக்குறிச்சி தொகுதிக்கு ஜாகை மாறலாம் என்ற யோசனைதான் அது. ஆனால், செந்தில்நாதன் தரப்போ வேறு ஒரு மனக் கணக்கில் உள்ளது. அ.தி.மு.க-வில் இருந்தால், வரும் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் தனக்கு சீட் கிடைக்காமல் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளடி வேலைகள் செய்துவிடுவார் என்று நினைத்துதான், பா.ஜ.க-வுக்கு செந்தில்நாதன் தாவியிருக்கிறார்.
இப்போது, கூட்டணி சார்பில் அரவக்குறிச்சி தொகுதியைக் கேட்டு வாங்கி, அதில் தான் வேட்பாளராக களம் இறங்கலாம் என்று நினைக்கிறார். வரும் சட்டமன்றத் தேர்தலில் அப்படி சீட் கிடைக்காவிட்டாலும், அதனைத் தொடர்ந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் நியமன உறுப்பினர் பதவியை வாங்கிவிடலாம் என்று நினைக்கிறார். ஆனால், அ.தி.மு.க-விலிருந்து வி.வி.செந்தில்நாதன் பா.ஜ.க-வுக்குத் தாவியது யாருக்கு லாபமோ இல்லையோ, எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குத் தான் லாபம் என அமைச்சர் ஆதரவாளர்கள் உள்ளுக்குள் சந்தோஷத்தில் மிதக்கிறார்கள்" என்றார்கள்.
இதுகுறித்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பில் பேசினோம். ``அண்ணன், கரூர் மாவட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். சாதாரண தொண்டர்களைக்கூட அரவணைத்துச் செல்கிறார். ஆனால், செந்தில்நாதன் கட்சிக்குள் பிளவை உண்டாக்கப் பார்த்தார். அதோடு எங்கண்ணனைப் பற்றி, `அமைச்சரிடம் கான்ட்ராக்டர்கள் மட்டுமே பேச முடியும். மற்றவர்கள் யாரும் பேசமுடியாது'னு சொன்னார்.
கட்சித் தலைமை, செந்தில்நாதன் பற்றி கேள்விப்பட்டு அவரை மாவட்டப் பொறுப்பில் இருந்து எடுத்தது. அதற்கும், அமைச்சருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் கட்சி மாறியது, கரூர் மாவட்ட அ.தி.மு.க வளர்ச்சிக்கு நல்லதுதான்" என்றார்கள்.
கட்சி மாறியது தொடர்பாக, வி.வி.செந்தில்நாதனிடம் பேசினோம். ``அ.தி.மு.கவில் 20 வருடங்களாக உறுப்பினராக இருந்தேன். 12 வருடங்களாகப் பதவிகளில் இருந்தேன். இரண்டு தேர்தல்களில் அரவக்குறிச்சியில் போட்டியிட்டேன். கட்சிக்காக சொந்த[ பணம் பலகோடிகள் செலவு பண்ணியிருக்கேன். ஆனால், அம்மா இருந்தவரை எனக்கு உரிய அங்கீகாரமும், மரியாதையும் இருந்துச்சு. அவர் மறைந்ததும், கட்சியில் ஒரு பிடிப்பு இல்லாம போச்சு. அதோடு, என்னைத் தூக்கிவிடவும் ஆள் இல்லை. அங்கு மரியாதையும் இல்லை.
அதனால், தேசியக் கட்சியான பா.ஜ.க-வில் இணைஞ்சுருக்கேன். அந்த கட்சியில், எனக்குரிய மரியாதை தர்றாங்க. சிறப்பான ஆட்சியை வழங்கிக் கொண்டிருக்கும் மோடியின் கட்சியில் இணைந்திருப்பது புது உற்சாகத்தை தந்திருக்கு" என்றார்.
source https://www.vikatan.com/news/politics/karur-admks-vvsenthilnathan-joins-bjp
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக