Ad

சனி, 30 ஜனவரி, 2021

அடிலெய்டை வீழ்த்திய கேட்ச் டிராப்கள்....பிரிஸ்பேன் ஹீட்ஸ் வெற்றியின் சூப்பர் ஸ்பெஷல் தருணங்கள்! #BBL

பிக்பேஷ் லீக் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. பிளே ஆஃப் சுற்றின் முதல் எலிமினேட்டர் போட்டி நேற்று நடந்து முடிந்திருக்கிறது. பிரிஸ்பேன் ஹீட்ஸுக்கும் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்ற இந்த போட்டியில் பிரிஸ்பேன் ஹீட்ஸ் அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த போட்டி குறித்து விரிவாக பார்க்கும் முன் பிக்பேஷ் லீகின் #BBL ப்ளே ஆஃப் சுற்றின் ஃபார்மேட் குறித்து பார்த்துவிடுவோம். பொதுவாக புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள்தான் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். ஆனால், பிக்பேஷ் லீகில் முதல் 5 இடங்களை பிடித்த அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கின்றனர். ஐந்தாவது மற்றும் நான்காவது இடத்தை பிடித்த அணிகளுக்கு இடையே முதலில் எலிமினேட்டர் சுற்று நடைபெறும். இதில் தோற்கும் அணி சீசனை விட்டு வெளியேறிவிடும். வெற்றி பெற்ற அணி நாக் அவுட் சுற்றில் புள்ளிப்பட்டியலில் 3 வது இடத்தை பிடித்த அணியோடு மோதும். இதில் தோற்கும் அணி வெளியேறிவிடும். வெற்றிபெறும் அணி சேலஞ்சர் சுற்றில் முதல் இரண்டு அணிகள் மோதிய குவாலிஃபையர் சுற்றில் தோற்ற அணியோடு மோதும். இதில் வெற்றிபெறும் அணியும் குவாலிஃபயரில் வெற்றி பெற்ற அணியும் இறுதிப்போட்டியில் மோதும்.

நேற்று எலிமினேட்டர் சுற்று நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தை பிடித்த அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸும் 4-வது இடத்தை பிடித்த பிரிஸ்பேன் ஹீட்ஸ் அணியும் மோதின.

பேட் ஃபிளிப் முறையில் வென்ற அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் கேப்டன் ட்ராவிஸ் ஹெட் பேட்டிங்கை தேர்வு செய்தார். அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் சார்பாக ஓப்பனர்களாக வெதரால்டும் அலெக்ஸ் கேரியும் களமிறங்கினர். பிரிஸ்பேன் ஹீட்ஸ் அணியின் சார்பில் பார்ட்லெட் முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரில் வெதாரல்டு மிட்விக்கெட் மேல் ஒரு பவுண்டரி அடித்தார். பார்ட்லெட் இந்த ஓவரில் இரண்டு வைடுகளையும் வீச முதல் ஓவரில் 9 ரன்கள் வந்தது. இத்தோடு பார்ட்லெட் ஓரங்கப்பட்டுவிட்டார். அவருக்கு அடுத்து இன்னொரு ஓவர் கொடுக்கப்படவில்லை. ஸ்டெக்கிட்டீ வீசிய அடுத்த ஓவரிலும் வெதரால்டு ஒரு சிக்சர் அடித்தார். இந்த ஓவரிலும் 9 ரன்கள் வந்தது. இதற்கு மேல் இந்த ஓப்பனிங் கூட்டணி பெரிதாக பேட்டை வீசவே இல்லை.

முதல் 4 ஓவர் பவர்ப்ளேயில் பிரிஸ்பேன் அணி 24 ரன்கள் மட்டுமே எடுத்தது. 3 முதல் 7 வது ஓவர் வரைக்குமான 5 ஓவர்களில் இந்த ஓப்பனிங் கூட்டணி ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. ஓடி ஓடியே 22 ரன்களை மட்டுமே எடுத்தது. ஸ்வெப்சன் மற்றும் லாஃப்லின் ஆகியோர் இந்த ஓவர்களை சிறப்பாக வீசியிருந்தனர். ப்ரஷர் அதிகரித்ததால் ஸ்வெப்சன் வீசிய 8-வது ஓவரில் பேட்டை வீசத் தொடங்கினார் அலெக்ஸ் கேரி. ஒரு பவுண்டரி அடித்து விட்டு மீண்டும் பெரிய ஷாட்டுக்கு முயன்று லாங் ஆனில் கேட்ச் ஆகி 13 ரன்களில் வெளியேறினார். 22 பந்துகளை சந்தித்து அநியாயத்துக்கு கட்டையை போட்டு ஏமாற்றி வெளியேறினார் கேரி. இதன்பிறகு கேப்டன் ட்ராவிஸ் ஹெட் உள்ளே வந்தார். அவர் கேரிக்கு ஒருபடி மேல் சென்று கட்டையை போட்டு கடுப்பேற்றினார். முதல் 10 ஓவர்களில் பிரிஸ்பேன் அணி 53 ரன்களை மட்டும் எடுத்திருந்தது.

#BBL

10 ஓவர் முடிந்ததுமே இரு அணிகளும் X Factor-ஐ பயன்படுத்தினர். பிரிஸ்பேன் அணி சார்பில் ஒரு ஓவர் மட்டுமே வீசியிருந்த பார்ட்லெட்டை வெளியேற்றிவிட்டு மோர்னே மோர்கலை உள்ளே கொண்டு வந்தனர். அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி பேட்டிங்கில் சொதப்பியதால் வொராலை வெளியே வைத்துவிட்டு வெல்ஸை சேர்த்துக்கொண்டது.

11-வது ஓவரிலேயே அடிலெய்டு அணி பவர்சர்ஜை எடுத்தது. ஆனால், இந்த பவர் சர்ஜிலும் அந்த அணி பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. ஒரே ஒரு பவுண்டரியுடன் 16 ரன்கள் மட்டுமே எடுத்தது. நீண்ட நேரம் நின்று செட்டில் ஆகியிருந்த வெதரால்டு 32 ரன்னில் லபுஷேனால் ரன் அவுட் செய்யப்பட்டார். இந்த கடைசி 10 ஓவரில் பிரிஸ்பேன் அணிக்காக லாபுஷேன் அட்டகாசமாக பந்துவீசினார். ஃப்ளைட்டட் டெலிவரிக்களாக இவர் வீசிய பந்துகளில் அடிலெய்டு பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை தூக்கி கொடுத்துவிட்டு சென்றனர். இவர் வீசிய 18-வது ஓவரில் ஃபிலிப் சால்ட்டும், நெசரும் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதில் நெசர் அடித்த ஒரு பந்தை லாங் ஆனிலிருந்து நீண்ட தூரம் ஓடி லாஃப்லின் ஒரு கையில் அசத்தலான கேட்ச்சை பிடித்தார்.

அடிலெய்டு அணிக்காக X-Factor ஆக உள்ளே வந்த வெல்ஸ் மட்டுமே கடைசி நேரத்தில் ஒரு சில பவுண்டரிக்களை அடித்து ரன் கணக்கை உயர்த்தினார். இறுதியில், அடிலெய்டு அணி 20 ஓவர்களில் 130 ரன்களை எடுத்தது. பிரிஸ்பேன் அணி சார்பில் லாபுஷேன் 3 ஓவர்களில் 13 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒரு அட்டகாசமான ரன் அவுட்டையும் நிகழ்த்தி பட்டையை கிளப்பியிருந்தார்.

#BBL

131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பிரிஸ்பேன் அணி களமிறங்கியது. எளிதான ஸ்கோராக இருந்தாலும் பிரிஸ்பேன் அணியின் கடைசிக்கட்ட பேட்ஸ்மேன்கள் சீக்கிரமே வெளியேறி அந்த அணிக்கு அதிர்ச்சி கொடுத்தனர். ஓப்பனரான கேப்டன் லின், நெசர் வீசிய முதல் ஓவரில் ஒரு பவுண்டரி மட்டும் அடித்துவிட்டு ஒரு அவுட் ஸ்விங்கரில் போல்டானார். வெஸ் அகர் வீசிய இரண்டாவது ஓவரில் முக்கிய பேட்ஸ்மேனான லாபுஷேன் மிட் ஆன் ஃபீல்டரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். லெக் ஸ்டம்பை முழுவதுமாக காண்பித்து நின்ற லாபுஷேன் ஒரு ஃபுல் லென்த் பந்தை தட்டுத்தடுமாறி தொட்டு கேட்ச் ஆனார். பீட்டர் சிடில் வீசிய 4-வது ஓவரில் ஒரு ஃபுல் லென்த் பந்தில் எல்பிடள்யு ஆகி ஹெசல்லட் 4 ரன்களில் வெளியேறினார்.

முதல் 4 ஓவர்கள் முடிவில் பிரிஸ்பேன் 3 விக்கெட்டுகளை இழந்து 24 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பிரிஸ்பேன் ஹீட்ஸின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் சீக்கிரமே வெளியேறியதால் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு வெற்றி நம்பிக்கை உண்டானது. ஆனால், 4 வது விக்கெட்டுக்கு கூட்டணி போட்ட பியர்சனும் டென்லியும் ஆட்டத்தை மாற்றத் தொடங்கினர். டாப்-3 பேட்ஸ்மேன்கள் அவுட் ஆகிவிட்டதால் இவர்கள் கொஞ்ச நேரம் பார்த்து ஆடுவார்கள். அதனால் ரன்ரேட் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த கூட்டணி அந்த ப்ரஷரை ஏற்படவிடாமல் செய்வதைத்தான் முதல் வேலையாக பார்த்தது.

டாட் பால்கள் இல்லாமல் தொடர்ந்து ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து ஏதுவான பந்துகளில் மட்டும் பவுண்டரியை அடித்து ஸ்கோரை உயர்த்தி சென்றது இந்த கூட்டணி. இந்த கூட்டணி 14 வது ஓவர் வரை நீடித்தது. பிரிக்ஸ் வீசிய 14-வது ஓவரில் 41 ரன்களில் டென்லி லாங் ஆஃபில் தூக்கியடித்து கேட்ச் ஆனார். டென்லி-பியர்சன் கூட்டணி 69 ரன்களை எடுத்தது. இந்த 69 ரன்கள் பார்ட்னர்ஷிப்தான் ஆட்டத்தை அடிலெய்டு அணியின் கையிலிருந்து பறித்தது. 19 ஓவரில் அகர் வீசிய ஓவரில் 2 பவுண்டரிகளை அடித்து பியர்சன் அணியை வெற்றி பெறச் செய்தார். பியர்சன் 47 ரன்களை எடுத்து நாட் அவுட் ஆக இருந்தார்.

அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாகத் தொடங்கியது. ஆனால், பியர்சன்-டென்லி கூட்டணியை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. பியர்சன் ஆரம்பத்திலேயே ஒரு கேட்ச்சை கொடுக்க அதை நெசர் டிராப் செய்திருப்பார். இதை சரியாக கேட்ச் ஆக்கியிருந்தாலே ஆட்டம் மாறியிருக்கும். மேலும், கடைசிக்கட்டத்தில் பர்ன்ஸுக்கு இரண்டு கேட்ச்சுகளை டிராப் செய்திருந்தனர். இதை பிடித்திருந்தால் கூட கடைசி ஓவர் வரை ஆட்டத்தை கொண்டு சென்று ப்ரஷர் கொடுத்திருக்க முடியும். அடிலெய்டு டிராப் செய்த இந்த கேட்ச்கள்தான் ஆட்டத்தை அவர்களிடமிருந்து பறித்துவிட்டது.

எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்றிருக்கும் பிரிஸ்பேன் அணி நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெற்றிருக்கிறது.



source https://sports.vikatan.com/cricket/brisbane-heats-beats-adelaide-strikers-in-big-bash-league-eliminator

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக