Ad

சனி, 30 ஜனவரி, 2021

`சொன்னது மண்பானை உணவகம்; புதுக்கோட்டை டீம் படுரகசியம்!’ - `குக் ராகுல்’ ரகசியம் பகிரும் ஜோதிமணி

மூன்று நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்த ராகுல் காந்தி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் என்று ஐந்து மாவட்டங்களில், பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சித்தார். அந்த செய்திகள் எல்லா மீடியாவிலும் வந்தன. ஆனால், அப்போது அதுகுறித்த எதுவும் வைரலாகவோ, டிரெண்டிங்காகவோ இல்லை. ஆனால், அவர் கிராமத்து இளைஞர்களின் சமையலை, ஒரு கை பார்த்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

சமைக்கும் ராகுல்

கரூர் எம்.பி ஜோதிமணி சத்தமில்லாமல், அத்தனை மீடியாவுக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு, ராகுலை மையமாக வைத்து, கடந்த 25 ஆம் தேதி இந்த வைரல் வீடிவோவுக்காக கன்ட்ன்டை தயாரிக்க வைத்து, இப்போது வைரலாக்கிவிட்டிருக்கிறார். 'வெங்காயம், தயிருருரு... கல்லு உப்பு' என்று ராகுல் காந்தி உரக்கச் சொல்லும் பாணியே அலாதியாக இருக்கிறது.

'எப்படி நடந்தது இந்த திட்டம்?' என்று ஜோதிமணியிடம் கேட்டோம்.

"ஒரு தம்பி மூலமாகதான், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பெரியவர் பெரியதம்பி, சுப்ரமணியன், முருகேசன், அய்யனார், தமிழ்செல்வன், முத்துமாணிக்கம் உள்ளிட்ட ஆறு பேரைப் பத்தி தெரிய வந்துச்சு. அறந்தாங்கி தாலுக்காவில் உள்ள சின்னவீரமங்கலம்ங்கிற சாதாரண குக்குராமத்தில் இருந்து ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிச்சு, உணவு தயாரிக்கிற வீடியோக்களை அதுல பதிஞ்சு, 70 லட்சத்துக்கும் மேற்பட்ட சப்ஸ்க்ரைபர்களை வச்சுருக்காங்கிறது சாதாரண விசயமில்லை. அதனால், அந்த பெரியவரையும், மத்த அஞ்சு தம்பிகளையும் பாராட்டணும்னு, ஒரு மாசத்துக்கு முன்னாடி சின்னவீரமங்கலத்துக்கே போனேன். அவங்க இத்தனை சப்ஸ்க்ரைபர்களை பெற்றிருந்தாலும், அவ்வளவு எளிமையா இருந்தாங்க. எல்லாத்துக்கும் மேலாக, அவங்க அங்கே சமைக்கிறதை வீடியோ எடுத்தவுடன் அனாதை, முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் சாப்பிட கொடுப்பதை பார்த்து, அசந்துபோயிட்டேன். யூடியூப் மூலம் புகழ், அதன்மூலம் நல்ல வருமானம் என பல விசயங்கள் இருந்தாலும், அவங்ககிட்ட ஒரு பகட்டுத்தனம் இல்லை.

ஜோதிமணி

அதை வச்சு ஏழைங்களுக்கு உதவணும்னுங்கிற அவங்களோட உயரந்த எண்ணம் என்னை கவர்ந்துச்சு. ''உங்க வெற்றிக்கு என்ன காரணம்'னு ஒவ்வொருத்தருகிட்டயும் கேட்டேன். அவங்க ஒவ்வொருவரும், 'நாங்க செய்ற ரெசிபிதான்'னு சொல்வாங்கன்னு நினைச்சேன். ஆனா, ஆறு பேரும், 'எங்க ஒற்றுமைதான் இந்த வெற்றிக்கு காரணம்'னு சொல்லி, என்னை அசரடிச்சாங்க. ஆனால், எனக்கு ஒரு விசயம் நெருடலா இருந்துச்சு. என்னதான் 70 லட்சம் பேரு அவங்க யூடியூப்புக்கு சப்ஸ்க்ரைபராக இருந்தாலும், இன்னும் கவனிக்கப்படாமல் இருந்தாங்க.

Also Read: கரூர்: மண்பானைச் சமையல்... குழந்தைகளுடன் செல்ஃபி! - ராகுல் காந்தியின் ஒரு நாள் விசிட்

ஒரு எம்.பியாக புதுக்கோட்டை மாவட்டம் வரை அடிக்கடி போய் வர எனக்கே, இவங்களை பத்தி இன்னொரு தம்பி சொல்லிதான் தெரியவந்துச்சு. அதனால், அவங்க மீது இன்னும் கூடுதல் கவனம் விழவும், அவங்களுக்கு இன்னும் அதீத அங்கீகாரமும் கிடைக்கணும்னு நினைச்சேன். 'நீங்க ராகுல் காந்தியை சந்திக்கிறாப்புல இருக்கும். விரைவில் அதுபத்தி முழுவிபரமும் சொல்றேன்'ன்னுட்டு வந்தேன். ஆனா, அவங்க அதை நம்பலை. இந்த நிலையில், தமிழகத்துக்கு கடந்த 23, 24 மற்றும் 25 ஆகிய மூன்று தேதிகளில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் வர்றது முடிவாச்சு. அதனால், கடந்த பத்து நாளைக்கு முன்னாடி, அந்த பசங்களுக்கு போன் பண்ணினேன்.

சமைக்கும் ராகுல்

'25 ம் தேதி ராகுல் கரூர் வர்றார். ராகுல் நல்லா சமைப்பார். அதனால், உங்க டீமும், உங்க 'வில்லேஜ் குக்கிங் சேனலும்' ராகுலோடு, அரை மணி நேரம் செலவிடுற மாதிரி இருக்கும்'னு சொன்னேன். அப்பவும் அவங்க நம்பலை. 24 ஆம் தேதியே அவங்களுக்கு தகவல் கொடுத்து, கரூர் வரவழைச்சாச்சு. இன்னொருபக்கம், கரூர் டு மதுரை பைபாஸில் உள்ள மலைக்கோவிலூர் அருகில் இயங்கி வரும் ஸ்ரீ முருக விலாஸ் மண்பானை உணவகத்திலும், ராகுல் காந்திக்காக மதிய உணவு தயாரிக்கப்பட்டிருந்துச்சு.

ராகுல் காந்தி கரூர் சுற்றுபயண விபரத்தில், 'மதியம் மண்பானை உணவகத்தில் உணவு சாப்பிடுகிறார்' என்று மட்டும் சொல்லியிருந்தோம். புதுக்கோட்டை டீமை பற்றிய தகவலை படுரகசியமாக வச்சிருந்தோம். அங்கிருந்து உள்ளடங்கி இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தளவாபாளையத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பரின் முருங்கை தோட்டத்தில், அந்த டீமை அனுப்பி, அவங்களுக்கு விருப்பபட்ட ரெசிபியை பண்ண சொன்னோம். அவங்க காளாண் பிரியாணியை தயார் செஞ்சாங்க. ஸ்ரீ முருக விலாஸ் மண்பானை உணவகத்திலும், மட்டன் பிரியாணி, காளான் பிரியாணி, மட்டன் சுக்கா, நாட்டுக்கோழி உப்புக்கறி, நாட்டுக்கோழி தண்ணிக் குழம்புனு பல ரெசிபிகளை பண்ணியிருந்தாங்க. வாங்கல்ல மதியம் விவசாயிகளை சந்திச்சு முடிச்சதும், மூணு மணி போல் மண்பானை உணவகத்துக்கு ராகுலை அழைச்சுக்கிட்டு வந்தோம்.

இளைஞர்களோடு உரையாடும் ராகுல்

அங்கே மீடியாவும், காங்கிரஸ் தொண்டர்களும் கூட்டமாக இருந்ததால், ராகுலை கேரவனுக்குள் அனுப்பினோம். அந்த நேரத்தில், மண்பானை உணவகத்துக்கு பின்னே பத்திரிகை, மீடியா நண்பர்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் சாப்பாடு பரிமாறப்பட்டது. அதனால், அவங்க எல்லாரும் பின்னாடி போனாங்க. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கிட்டு, ஒரே ஒரு கார்ல ராகுலை அழைச்சுக்கிட்டு, கருப்பசாமி தோட்டத்துக்குப் போனோம். ராகுலை பார்த்த அந்த தம்பிகள், நம்பாம திகைச்சுப் போய் நின்னாங்க. பேச்சே வராம நின்னாங்க. ஆனா, ராகுல் வழக்கம்போல் இயல்பாக பேசி, அந்த பசங்களையும், பெரியவரையும் இயல்பாக்கினார்.

அதன்பிறகு, அவங்க, 'யாரும் உள்ளே வந்து டிஸ்டர்ப் பண்ணக்கூடாது'னு சொன்னதால், தோட்டத்து கேட்டை இழுத்துப் பூட்டச் சொன்னோம். ராகுல் அந்த இளைஞர்களை வெகுவாகப் பாராட்டினார். 'காளான் பிரியாணியில் செம வாசனை வருது'னு ஆங்கிலத்தில் சொன்னார். அப்படி சொன்னதும் அந்த பசங்க இன்னும் ஆர்வமாயிட்டாங்க. வெங்காய பச்சடி செய்ய, ஒரு பாத்திரத்தில் ராகுலை விட்டு, வெங்காயம், தயிர், கல்லு உப்புனு ஒவ்வொண்ணா போடச் சொன்னாங்க. அதோடு, அவங்க பாணியில உரக்கச் சொல்ல சொல்லி, போட வச்சாங்க. மூன்றையும் கிளறி, அதை டேஸ்ட் பார்த்த ராகுல், 'வெரி டேஸ்ட்'னு சொன்னார்.

சமைக்கும் ராகுல்

அதுக்கு அவங்க, 'நீங்க பண்ணுனது நல்லாதான் இருக்கும்'னு சொல்லி, ராகுலை மகிழ்ச்சியில் ஆழ்த்தினாங்க. அதோடு, சம்மணம் போட்டு தரையில் அமர்ந்து இளைஞர்களோடு சேர்ந்து சாப்பிட்டார். 'நல்லாருக்கு, ரெம்ப நல்லாயிருக்கு'னு தமிழில் சொல்லி, இளைஞர்களை உற்சாகப்படுத்தினார். கூடவே, 'அடுத்த தடவை நாம் சந்திக்கும்போது, எனக்கு ஈசல் சமைச்சு கொடுங்க'னு சொன்னார். தொடர்ந்து, 'உங்களின் ஆசை என்ன?'னு கேட்டார் ராகுல். அதுக்கு அவங்க, 'வெளிநாடுகள்ல போய் சமைக்கணும்'னு சொன்னாங்க. 'நல்ல திட்டம். எந்த நாட்டுக்கு முதல்ல போகணும்னு நினைக்கிறீங்க?'னு கேட்டார்.

அதுக்கு அவங்க, 'யு.எஸ்.ஏவுக்கு போகணும்'னு சொன்னாங்க. 'யு.எஸ்.ஏவுல எங்கே போய் சமைக்கணும்'னு கேட்டதுக்கு, 'எங்கே வேண்டுமானாலும் போக தயார்'னு சொன்னாங்க. உடனே ராகுல், இந்தியாவில் தொலைதொடர்பு சம்பந்தப்பட்ட விசயம் அமைய விதைபோட்டவரும், தனது நண்பருமான சிக்காகோவைச் சேர்ந்த சாம் பிட்ரோடாவுக்கு போன் போட்டு, இளைஞர்களின் ஆசையை சொன்னார். அவரும் அதற்கு உதவுவதாக சொல்ல, இளைஞர்கள் ராகுலுக்கு நன்றி சொன்னாங்க. அதோடு, மத்த மாநிலங்களுக்கும் வந்து சமைக்கும்படி ராகுல் கேட்டுக்கொண்டார். இனி, இளைஞர்களையும், சாம் பிட்ரோடாவையும் இணைச்சு, இளைஞர்கள் யூ.எஸ்.ஏ சென்று சமைக்க வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு.

இளைஞர்களோடு ராகுல்

ஏழ்மை நிலைமையை பின்புலமாக கொண்ட இந்த இளைஞர்கள் சொந்த முயற்சியில் யூடியூப் மூலம் இப்போது சம்பாதித்து, நல்ல நிலைமையில் இருப்பதையும், ஆதரவற்றவர்களுக்கு சாப்பாடு வழங்குவதைப் பற்றியும் சொன்னதும், ராகுல் ஆர்வமாக அவர்களை சந்திக்க ஒத்துக்கிட்டார். நேரில் வந்து அவர்களை உற்சாகப்படுத்தினார். மோடி போல், 5 பணக்காரர்களை மட்டும் சந்திக்கும் நபரல்ல ராகுல். அவர் அடித்தட்டு மக்களையும், இளைஞர்களையும் அதிகம் நேசிக்கிறார். அதற்காகதான், இளைஞர்களை சந்தித்தார். மத்தபடி, இதை வீடியோ எடுத்தது, வெளியிட்டது எல்லாம் அவங்கதான். ஆனா, இது இவ்வளவு வைரலாகும்னு நினைக்கலை. அது, அந்த இளைஞர்களின் உழைப்புக்கும், ராகுலின் எளிமைக்கும் கிடைத்த பரிசு" என்றார்.



source https://www.vikatan.com/news/politics/mp-jothimani-shares-the-stories-behind-the-rahul-cooking-viral-video

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக