ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 420 கிலோ கஞ்சா மற்றும் 29.5 லட்சம் பணத்தினையும் ராமநாதபுரம் போலீஸார் கைபற்றியுள்ளனர். இது தொடர்பாக ராமேஸ்வரம் தி.மு.க பொறுப்பாளரின் சகோதரர் உட்பட 19 பேரை கைது செய்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கடந்த சில மாதங்களாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் சமையல் மஞ்சள் ஆகியன கடத்தி செல்வதும், இதற்கு மாற்றாக இலங்கையில் இருந்து தங்க கட்டிகள் கடத்தி வருவதும் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த வாரத்தில் மதுரை மாநகர தீவிர குற்ற தடுப்பு பிரிவினர் மற்றும் எஸ்.எஸ் காலனி போலீஸார் உசிலம்பட்டியை சேர்ந்த செல்லத்துரை என்பவரை கஞ்சாவுடன் கைது செய்தனர். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து ராமநாதபுரம் நேரு நகரை சேர்ந்த நவாஸ்கான் வீட்டில் ராமநாதபுரம் போலீஸார் சோதனை நடத்தி 260 கிலோ கஞ்சா மற்றும் பணத்தினை கைபற்றினர். இதையடுத்து நவாஸ்கான் மற்றும் அவரது மகன் வாசிம்கானை போலீஸார் கைது செய்தனர்.
இவர்கள் இருவரும் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவினை வாங்கி வந்து, சிலரது உதவியுடன் பலமுறை இலங்கைக்கு கடத்தி சென்றது விசாரணையில் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ராமேஸ்வரத்தை சேர்ந்த தினேஷ், ராஜேஷ், ரமேஷ் ஆகியோர் கஞ்சாவை வாங்கி, இலங்கைக்கு கடத்தி வருவதும் தெரியவந்தது.
மேலும் ராமேஸ்வரம் தி.மு.க பொறுப்பாளரின் சகோதரர் நூர்முகம்மது மற்றும் கட்டி முகம்மது ஆகியோருடன் சேர்ந்து சென்னையில் இருந்து ஐஸ் எனப்படும் மெத்தாமிட்டமைன், கேட்டமைன் போன்ற போதை பொருட்களை வாங்கி வந்து இலங்கைக்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது.
இவ்வாறு கடத்தி செல்லும் போதைப் பொருட்களூக்கான தொகையினை ஹவாலா பரிவர்த்தனை மூலம் வாசிம்கான் பெற்று வந்ததை அறிந்த போலீஸார், மதுரையை சேர்ந்த ராஜ்குமார் மற்றும் செந்தில்குமார் ஆகியோரிடம் இருந்து ரூ.25 லட்சம் ஹவாலா பணத்தையும், வாசிம்கான் உள்ளிட்டவர்களிடம் இருந்து ரூ 4.5 லட்சத்தையும் கைபற்றினர். இதே போல் தனுஷ்கோடி கடலில் மிதந்த 178 கிலோ கஞ்சா பார்சல்கள் மீட்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய படகோட்டிகள் அந்தோணிசாமி, அந்தோணி தன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
Also Read: ராமநாதபுரம்:`பானை இங்கே... கரண்டி எங்கே?’- பா.ஜ.க-வின் பொங்கல் விழாவில் பெண்கள் கேள்வி!
மேலும் வாசிம்கான் கொடுத்த தகவ்லின் படி மகேந்திரா வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 160 கிலோ கஞ்சாவை கைபற்றிய ராமநாதபுரம் போலீஸார், இது தொடர்பாக மதுரையை சேர்ந்த விஜயகுமார், பிரசாந்த், செந்தில்குமார், காக்கணன் ஆகிய நால்வரை கைது செய்தனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ராமநாதபுரம் போலீஸார் மேற்கொண்ட சோதனைகளில், கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 19 பேர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து 420 கிலொ கஞ்சா, 29.5 லட்சம் பணம், 3 படகுகள், 3 வாகனங்கள், 15 செல்போன்கள் மற்றும் ஜி.பி.எஸ். கருவி, எடைமிஷின்கள் ஆகியன கைபற்றப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகள் வழியாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை, இலங்கைக்கு கடத்தி வந்த போதைபொருள் கடத்தல் கும்பலை கண்டறிந்து கைது செய்த தீவிர குற்றத்தடுப்பு போலீஸார் மற்றும் ராமநாதபுரம் உட்கோட்ட போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் பாராட்டியுள்ளார். ஒரே வாரத்தில் பிடிபட்ட 420 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சாவிற்காக பயன்படுத்திய 29.5 லட்சம் பணம் ஆகியவற்றுடன் கடத்தல் கும்பலை சேர்ந்த 19 பேர்கள் பிடிபட்டிருப்பது மாவட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/government-and-politics/crime/420-kg-of-cannabis-seized-in-one-week-19-arrested-in-ramanathapuram
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக