Ad

ஞாயிறு, 31 ஜனவரி, 2021

மீண்டும் 'அண்ணாத்த' ஸ்பாட்டில் ரஜினி, அனல்பறக்கும் ஏப்ரல் ரிலீஸ், சென்னை டெஸ்ட்டில் ரசிகர்கள்?!

ஏப்ரல் ரிலீஸ் ரேஸ்!

ஓர் ஆண்டு இடைவெளிக்குப்பிறகு கோலிவுட்டில் ரிலீஸ் ரேஸ் அனல் பறக்க இருக்கிறது. வரும் ஏப்ரல் மாதம் தனுஷின் 'கர்ணன்', கார்த்தியின் 'சுல்தான்', சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' என அதிகம் எதிர்பார்ப்பிலுள்ள மூன்று படங்கள் தியேட்டர்களில் ரிலீஸாக இருக்கின்றன. 'கர்ணன்', 'டாக்டர்' என இரண்டு படங்களும் முழுவதுமாக முடிந்துவிட்ட நிலையில், 'சுல்தான்' படத்தில் மட்டும் இன்னும் சில நாள் ஷூட்டிங் இருக்கிறதாம். 'பொன்னியின் செல்வன்' இடைவெளியில் கார்த்தி வந்துவிட்டால் 'சுல்தான்' படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துவிடும் என்கிறார்கள். ராஷ்மிகா மந்தனாவின் முதல் தமிழ்படம் 'சுல்தான்' என்பது குறிப்பிடத்தக்கது!

சென்னையில் ஆப்பிள்?!

ஐபோன் 11

ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளுக்குத் தேவையான உதிரிபாகங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் சென்னையில் தொடங்கப்பட இருக்கின்றன. டாடா எலெக்ட்ரானிக்ஸ், Pegatron, Luxshare ஆகிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளை அமைக்கின்றன. ஐபோன் தயாரிப்பில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனம் பெகட்ரான் என்பது குறிப்பிடத்தக்கது. பெகட்ரான் நிறுவனம் மறைமலைநகரில் உள்ள மஹிந்திரா வேர்ல்டு சிட்டியில் 1100 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை அமைக்கிறது. இந்நிறுவனம் மூலம் 14,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷாரூக்கானின் 'பதான்'!

ஷாருக் கான், தீபிகா படுகோன்

2018-ல் ரிலீஸான 'ஸீரோ' படத்துக்குப்பிறகு புதிதாக எந்தப்படத்தையும் ஷாருக்கான் தொடங்கவில்லை. தொடர்ந்து படங்கள் தோல்வியடைந்ததால் சினிமா பயணத்தில் இரண்டு வருட பிரேக் போட்ட ஷாருக்கான், இப்போது 'பதான்' எனும் புதிய படத்தை தொடங்கியிருக்கிறார். சித்தார்த் ஆனந்த் இயக்கும் இந்தப்படத்தின் ஷூட்டிங் துபாயில் தொடங்கியிருக்கிறது. ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்க, ஜான் ஆபிரகாம் முக்கிய கேரெக்டரில் நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தின் ஷூட்டிங் முடிந்ததும் 'அட்லி' இயக்கும் ஷாருக்கான் படத்தின் ஷூட்டிங் மே மாதம் தொடங்கயிருக்கிறது.

சென்னை டெஸ்ட்டில் ரசிகர்கள்?!

இங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 5-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியும் சென்னையிலேயே பிப்ரவரி 13-ம் தேதி தொடங்குகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கும் ரசிகர்கள், மீடியா என யாருக்கும் அனுமதியில்லை என்று முடிவெடுக்கப்பட்ட நிலையில், இப்போது இரண்டாவது டெஸ்ட்டுக்கு ரசிகர்களை அனுமதிக்கும் முடிவை எடுத்திருக்கிறது பிசிசிஐ. தமிழக அரசின் அனுமதி கிடைத்ததும் இரண்டாவது டெஸ்ட்டுக்கான டிக்கெட்கள் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் 'அண்ணாத்த' ஷூட்டிங்!

'அண்ணாத்த'

கொரோனா பரவல் மற்றும் ரஜினியின் உடல்நலக்குறைவால் கடந்த டிசம்பரில் பாதியில் நிறுத்தப்பட்ட 'அண்ணாத்த' படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்குகிறது. பிப்ரவரி மாத இறுதியில் ரஜினி ஷூட்டிங்கிற்கு வர விருப்பம் தெரிவித்திருக்கிறார் என்கிறார்கள் சன் பிக்சர்ஸுக்கு நெருக்கமானவர்கள்.



source https://cinema.vikatan.com/tamil-cinema/rajnikanths-annathe-shoot-ready-to-resume

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக