தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பிறகு பொங்கல் பண்டிகையை ஒட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் அதிவிமர்சையாக நடைபெற்று வருகின்றன. இந்தாண்டு உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகளும் சிறப்பாக முடிவடைந்தது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தி.மு.க-வின் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசு வென்ற நபருக்கு, தமிழக முதல்வர் மதுரையில் கார் பரிசு வழங்க உள்ள நிலையில், அதற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கருப்பண்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனு ஒன்றை அளித்தார் அதில்....,"இந்தாண்டு கடந்த 16-ம் தேதி அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக எண்ணிக்கையில் காளைகளை அடக்கும் வீரருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது, 2-வது பரிசாக 2 பசு மாடுகள் வழங்கப்பட்டது, 3வது பரிசாக தங்க நாணயம் வழங்கப்பட்டது.
இப்போட்டியில் 33வது பனியன் அணிந்த கண்ணன் என்பவர் முதல் பரிசினைப் பெற்றார். ஆனால் 33வது பனியன் அணிந்த ஹரி கிருஷ்ணன் என்பவர் முதல் சுற்றில் கையில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அவரது 33வது நம்பர் பனியனை சட்டவிரோதமாக கொரோனா நோய்த்தொற்று பரிசோதனை செய்யாமல் கண்ணன் என்பவர் அணிந்துகொண்டு ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டுள்ளார். மேலும் கண்ணன் என்பவருக்கு 30.01.2021(இன்று)-ம் தேதி முதல் பரிசான காரினை தமிழக முதல்வர் கே.பழனிசாமி வழங்க உள்ளார்.
நடைபெற்ற முறைகேடு குறித்து பல்வேறு அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்த ஒரு முன்னேற்றம் இல்லை. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முதல் பரிசினை வழங்க இடைக்கால தடை விதிக்கவும், முறையான விசாரணை மேற்கொண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முதல் பரிசினை வழங்க வேண்டும்" என தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.ஸ்வாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் பனியன்கள் மாற்றி இரண்டு பேர்கள் இணைந்து 12 காளைகள் பிடிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு பெற்ற கண்ணனுக்கு பரிசு வழங்க இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவு பிறப்பித்தது . மேலும் வழக்கு குறித்து மதுரை கலெக்டர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது.
source https://www.vikatan.com/news/tamilnadu/madurai-alanganallur-jallikattu-issues-court-stays-first-prize
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக