மத்திய ஆரசால் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியின் பல்வேறு எல்லைகளில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த குடியரசு தினம் அன்று, திட்டமிட்டு, முன் அனுமதி பெறப்பட்டு டிராக்டர் பேரணி தொடங்கியது. எனினும் அதில் சிலர் அனுமதி இல்லாத முக்கிய சாலையில் நுழைய முயன்றதால், வன்முறை வெடித்தது. தொடர்ந்து சில விவசாய அமைப்புகள் போராட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தது.
இந்த நிலையில் டெல்லியில் எல்லைகளில் விவசாயிகள் போராட்டம்நடைபெறும் இடங்களில் இன்று காலை முதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, காசிப்பூரில் ஏராளமான விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த விவசாயிகளை உடனடியாக வெளியேற மாவட்ட நிர்வாகம் நேற்று உத்தரவிட்டு உள்ளது. அவர்கள் வெளியேறாவிட்டால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவர் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழல் நிகவுகிறது. மேலும் திடீரென காசிப்பூர் எல்லை மூடப்பட்டதால் அந்தப் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தும் டிக்ரி எல்லையிலும் திடீரென போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். சிங்கு எல்லையிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கும் கடுமையான கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், பதற்றமான சூழல் நிலவுகிறது.
மறுபுறம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. டெல்லியின் எல்லைகளில் விவசாயிகள் போராடி வரும்நிலையில், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்க தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ளதால் டெல்லியின் எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதா அல்லது விவசாயிகளின் போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வர நெருக்கடி அளிக்க காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனரா என்ற கேள்விகளும் எழும்பியுள்ளது.
இந்நிலையில் விவசாயிகள், ``நாங்கள் அந்த இடத்தை காலி செய்ய மாட்டோம். எங்கள் பிரச்னைகள் குறித்து இந்திய அரசுடன் பேசுவோம். மக்கள் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என அறிவித்துள்ளனர்.
source https://www.vikatan.com/government-and-politics/protest/police-force-increased-in-the-spot-of-farmers-protest
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக