Ad

புதன், 27 ஜனவரி, 2021

மதுரை: நீலக்கடலும், பச்சைப்பசேல் மரங்களும், விவேகானந்தர் மண்டபமும்... குந்துகால் போலாமா?

நாம் இப்போது சுற்றுலா செல்லவுள்ளது தென்னையும், கடலும், வரலாறும், மீன்களும் நிறைந்திருக்கும் அழகிய கிராமமான குந்துகால்!
விவேகானந்தர் மணி மண்டபம்

சேதுபதி மன்னரின் உதவியால் உலக சர்வ சமய மாநாட்டில் கலந்துகொண்டு தாயகம் திரும்பிய சுவாமி விவேகானந்தர் கப்பலில் வந்து இறங்கிய இடம் இது.

கப்பலில் வந்த விவேகானந்தரின் பாதத்தை, தரையில் வைக்க விடாமல் மன்னர் பாஸ்கர சேதுபதி தன் தலையில் வைக்க சொன்னதால் இந்த இடத்துக்கு குந்துகால் என்று பெயர் வந்ததாகச் சொல்கிறார்கள்.

குந்துகால் துறைமுகம்

சீதையை மீட்க சென்ற அனுமன் வானரப்படையுடன் குந்தியிருந்த இடம் என்றும் ஆன்மீகவாதிகளால் சொல்லப்படுகிறது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் போர் கப்பல்களும் வர்த்தகக் கப்பலும் நிறுத்தியிருந்த துறைமுகப் பட்டினம் குந்துகால்.

பாக் நீரிணைப்பில் அரிய கடல் வாழ் உயிரினங்கள் வாழும் பவளப்பாறைகள் நிறைந்த பாதுகாக்கப்பட்ட மன்னார் வளைகுடா கடற்கரைப் பகுதி இது.

இவ்வளவு வரலாற்றுச் சிறப்பு மிக்க குந்துகாலுக்குள்தான் இன்று பயணிக்க இருக்கிறோம்.

குந்துகால் கடற்கரை

மதுரையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் நெடுஞ்சாலையில் சென்றால் 3 மணி நெரத்தில் பாம்பன் பாலத்தைக் கடந்தவுடன் வந்து விடுகிறது அக்காள் மடம். இப்பகுதி ஊர்களுக்கு அக்காள் மடம், தங்கச்சி மடம் என்று பெயர் வந்ததற்கு சேதுபதி மன்னர் ஆட்சியில் நடந்த உணர்ச்சிகரமான கதை ஒன்றை இப்பகுதி மக்கள் சொல்கிறார்கள். அதைப் பிறகு பார்க்கலாம்.

அக்காள் மடத்திலிருந்து வலதுபுறமாக பிரியும் கிராமச் சாலைக்குள் சென்றால் இரண்டு பக்கமும் தென்னந்தோப்பு நிழல் நம மேல் வெயில் படமால் காக்கும். கூடவே குளிர்ந்த கடல்காற்றும் கொஞ்சம் உப்பு தடவி முகத்தில் உரசும்.

குந்துகால் கடற்கரை

தென்னந்தோப்பு வழியாக சில நிமிட பயணத்தைக் கடந்தால் பரந்து விரிந்த கடல் நம்மை வரவேற்கும். அகன்ற அந்தக் கடற்கரையில் காவி நிறத்தில் எழுந்து நிற்கும் கட்டடம் நம்மை ஈர்க்கும்.

விவேகானந்தர் வந்திறங்கிய இடம் என்பதால் அவர் நினைவாக இங்கு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. அரசு மற்றும் ராமகிருஷ்ண மடத்தினரால் நிர்வகிக்கப்படும் இம்மண்டபத்தில் விவேகானந்தரின் முழு உருவ வெங்கலச்சிலை, விவேகானந்தர் பயன்படுத்திய பொருள்கள், அரிய புகைப்படங்கள், புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதன் அருகில் தியானம் செய்ய விரும்புகிறவர்களுக்காக தியான மண்டபம் அமைந்துள்ளது. அந்த மண்டபமே புதுவிதமான உணர்வைத் தரும்.

விவேகானந்தர் மண்டபம்

மண்டபத்தின் மேற்புறத்தில் ஏறி நின்று பார்த்தால் பாம்பன் நகரின் அழகும், பச்சை பசேலென்று தென்னை மரங்களும், அதை சுற்றிலும் ஆர்ப்பரிக்கும் நீலக்கடலும் கண்ணுக்கு விருந்தாக அமையும்.

மண்டபத்தின் வெளியே அமர்ந்தும் இளைப்பாறலாம். நமக்குத் தேவையான சந்தேகங்களை விளக்கிச் சொல்ல அங்கு ஊழியர்கள் உள்ளனர்.

குந்துகால் மீன்பிடித் துறைமுகம்

குந்துகாலிருந்து பார்த்தால் குருசடைத்தீவு தெரியும். இது பாதுகாக்கப்பட்ட தீவாக வனத்துறையல் பாதுகாக்கப்பட்டு வருவதால் அவர்கள் அனுமதியில்லாமல் உள்ளே செல்ல முடியாது. கடலியல் சார்ந்த உயர் கல்வி கற்பவர்கள், மீன் வள ஆய்வாளர்கள், அதிகாரிகளிடம் அனுமதி பெற்று அங்கு செல்வார்கள்.

Also Read: மதுரை, மூதூர் மாநகரத்தின் கதை - 2 | ராயகோபுரம் - கைவிடப்பட்ட பிரமாண்டமும் அதன் வரலாறும்!

விவேகானந்தர் மண்டபத்தை ஒட்டி கடற்கரை வழியாக நடந்து சென்றால் சின்னப்பாலம் என்ற கடற்கரை கிராமத்துக்கு வந்து விடலாம். அங்கு நாட்டுப்படகிலும், கரைவலையிலும் மீன் பிடிப்பவர்களைக் காணலாம்.

குந்துகால் துறைமுகம்

முகத்தில் கண்ணாடி அணிந்துகொண்டு கடலில் பாசி எடுக்க செல்லும் பெண்களை இங்கு காணலாம். இப்பகுதி மக்களிடம் பணம் கொடுத்தால் ஃப்ரெஷ்ஷான மீன் சாப்பாடு சமைத்து தருவார்கள்.

கடல் அலைகள் ஆங்காரமாக இருக்கும் என்பதால் இங்கு குளிப்பது கொஞ்சம் ரிஸ்க். ஆனால், கடலலையில் கால் நனைக்கலாம்.

இங்கேயே 80 கோடி ரூபாய் செலவில் பெரிய அளவில் புதிய மீன்பிடித் துறைமுகம் கட்டப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் போர் கப்பல்கள், பயணிகள் வந்து செல்லும் துறைமுகமாக விளங்கிய குந்துகால் பின்பு வந்த அரசுகளால் கவனிக்கப்பாடாமல் நசிந்து போனது.

தற்போது விவேகானந்தர் மணிமண்டபம், புதிய மீன்பிடித் துறைமுகம் போன்றவற்றால் அதன் பெருமை மீட்டெடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் வந்து கொண்டிருந்த நிலையில் கொரோனா காலத்தில் மக்கள் அதிகம் வராமல் உள்ளனர்.

குந்துகால் கடற்கரை

விவேகானந்தருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்துக்கும் உள்ள தொடர்பை அறிந்து கொள்ளவும், தமிழகத்தின் பாரம்பரியத் துறைமுகமாக விளங்கியதைத் தெரிந்து கொள்ளவும், இயற்கையை அதன் இயல்பு மாறாமல் ரசிக்கவும், தமிழகத்துக்குள் இப்படியொரு அதிசய இடமா என்று வியக்கவும் இங்கு குடும்பத்துடன் போய்வரலாம்.

குந்துகாலை விட்டு கிளம்பும்போது இங்கிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ள முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் நினைவிடத்தையும் பார்த்துவிட்டு போகலாம். பிரபலப்படுத்தப்படாத இந்த சுற்றுலா தலம் அருமையான அனுபவத்தை தரும்.

மதுரையிலிருந்து குந்துகால் - 167 கி.மீ

பயண நேரம்: 3 மணி

மதுரை, ராமநாதபுரத்திலிருந்து ராமேஸ்வரம் செல்லும் அனைத்து பேருந்துகளிலும் ஏறி பாம்பனில் இறங்க வேண்டும்.

அங்கிருந்து ஆட்டோ மூலம் குந்துகால் செல்லலாம். பாம்பனிலிருந்து குந்துகால் செல்ல குறிப்பிட்ட நேரத்தில்தான் நகர் பேருந்து வசதி உள்ளது.

குந்துகால் கடற்கரை

உணவு கொண்டு செல்வது நல்லது. நல்ல மீன் சாப்பாடு அல்லது சைவ சாப்பாட்டுக்கு பாம்பன், தங்கச்சிமடம், ராமேஸ்வரம் செல்ல வேண்டும். அக்காள்மடத்தில் ரிசார்ட்கள் உள்ளன. ராமேஸ்வரத்தில் அதிகமான அளவு தங்கும் விடுதிகள் உள்ளன.

பொதுப்பேருந்தில் ஒருவர் ஒரு நாளில் குந்துகால் சென்று வர உணவுடன் சேர்த்து 700 ரூபாய் செலவாகும்.



source https://www.vikatan.com/lifestyle/travel/take-a-tour-to-kunthukal-beach-from-madurai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக