Ad

ஞாயிறு, 31 ஜனவரி, 2021

புதுச்சேரி: `சங்கடங்களைத் தீர்க்கும் விநாயகப் பெருமான்!’- ஜெ.பி.நட்டாவைப் புகழ்ந்த நமச்சிவாயம்

புதுச்சேரி ஏ.எஃப்.டி மைதானத்தில் ஜனவரி 31-ம் தேதி நடைபெற்ற பா.ஜ.க சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி நட்டா, புதுச்சேரி மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, தமிழகப் பொறுப்பாளர் சி.டி.ரவி, சமீபத்தில் அக்கட்சியில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். அப்போது பேசிய நமச்சிவாயம், ``உலகிலுள்ள சங்கடங்களைத் தீர்க்கும் விநாயகப் பெருமானைப் போற்றும் சங்கடஹர சதுர்த்தி நாளில் பா.ஜ.க தலைவர் நட்டா புதுச்சேரிக்கு வருகை தந்திருக்கிறார்.

பா.ஜ.க தேசிய தலைவர் ஜெ.பி நட்டாவுடன் நமச்சிவாயம

தமிழக பண்பாட்டோடும், தமிழர் அடையாளத்தோடு நம் முன்னே அவர் வந்திருப்பது கோடிக்கணக்கான மக்களை மதிக்கும் விஷயம். தமிழர்களின் பண்பாடுகளை மாறாமல் காக்க வேண்டும் என்பதுதான் பா.ஜ.க-வின் கொள்கை - கோட்பாடு. வெவ்வேறு மாநிலங்களில் பிறந்தாலும் நாம் அனைவரும் ஒரே குடும்பம், பாரத அன்னையின் பிள்ளைகள். புதுவை மாநில மக்களின் சங்கடங்களைத் தீர்க்கும் விநாயகப் பெருமானாக ஜெ.பி நட்டா இருக்கிறார். நானும், தீப்பாய்ந்தானும் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்த போது நட்டா, அமித்ஷா, சந்தோஷ், சுரானா, சாமிநாதன் ஆகியோர் எங்களை தாயுள்ளத்தோடும், பாசத்தோடும், பரிவோடும், சகோதரத்துவத்துடனும் வரவேற்று கட்சியில் இணைத்துக் கொண்டனர். புதுவை மாநிலத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும் என்பதை மக்களுக்கு உணர்த்தவே இந்த மாநாடு.

இது வெறும் மாநாடு அல்ல. புதுவை மாநிலத்தின் வளர்ச்சிக்கான மாநாடு. புதுவை மாநில வளர்ச்சிக்காகவும் மாநில மக்களுக்காகவும்தான் இங்கு கூடியிருக்கிறோம். எனவேதான் அகில இந்தியத் தலைவர்கள் எல்லாம் இந்த மாநாட்டுக்கு வந்திருக்கிறார்கள். முதல்வர் நாராயணசாமியால் தாழ்ந்திருக்கும் இந்த புதுவை மாநிலத்தை தலைநிமிரச் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். என் மீது அன்பு கொண்டவர்கள், `ஏன் பா.ஜ.க-வில் சேர்ந்தீர்கள்?’ என்று என்னைக் கேட்டார்கள்.

Also Read: புதுச்சேரி: காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்ட நமச்சிவாயம்; அமைச்சர், எம்.எல்.ஏ ராஜினாமா! - பின்னணி என்ன?

அவர்களுக்கும், காங்கிரஸ்காரர்களுக்கும் நான் சொல்லிக்கொள்வதெல்லாம் இதுதான். புதுச்சேரியில் ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும். புதுச்சேரி பலம்பெற வேண்டும். புதுச்சேரி மேம்பட வேண்டும் என்றால் தாமரை வாழ்ந்தாக வேண்டும். தாமரை மலரும்போது புதுவை மாநிலம் ஒளிரும். புதுவை மாநில மக்களும் உணர்வார்கள் வாழ்வார்கள். எனவே, 2021-ம் ஆண்டு புதுச்சேரியில் தாமரை ஆட்சி மலர நாம் அனைவரும் சபதம் ஏற்போம்” என்றார்.



source https://www.vikatan.com/news/politics/puducherry-namasivayam-praises-jp-natta

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக