Ad

செவ்வாய், 11 ஜூலை, 2023

புதுவை: "கோயில் நில அபகரிப்பில் ஈடுபட்ட பாஜக எம்.எல்.ஏ-க்களைக் கைதுசெய்ய வேண்டும்!”- ஜி.ராமகிருஷ்ணன்

புதுவை மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காமாட்சியம்மன் கோயில் நில அபகரிப்பு வழக்கில் குற்றவாளிகள்மீது பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது. புதுச்சேரி மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ராஜாங்கம் தலைமை வகித்த அந்த ஊர்வலத்தில், மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியினர் கலெக்டர் வல்லவனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஜி.ராமகிருஷ்ணன், பெருமாள், புதுவை கோ.சுகுமாறன்

அந்த மனுவில், `கோயில் நில மோசடியில் தொடர்புடைய எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்ட அனைவர்மீதும் உறுதியான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மோசடியில் தொடர்புடைய உயர்மட்ட அதிகாரிகளைக் கைதுசெய்து விசாரிக்க வேண்டும். 2011 முதல் பதிவுத்துறையில் நடந்துள்ள மோசடிகள், அரசு புறம்போக்கு நிலம் பற்றிய முழு விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கோயில் சிலைகள், தங்கம், வெள்ளி ஆபரணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் மின்னணு முறையில் ஆவணப்படுத்தி பொதுமக்கள் பார்வைக்கு இணையத்தில் வெளியிட வேண்டும். வீடு, நிலம், சொத்து அபகரிப்பை தடுக்க சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும். குற்றவாளிகள்மீது பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.ராமகிருஷ்ணன், ``காமாட்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 64,000 சதுர அடி நிலத்தை போலி பத்திரம் மூலம் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் ஜான்குமார், அவரின் மகன் ரிச்சர்டு ஆகியோர் மோசடி செய்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவுசெய்த பின் இரண்டு ஆண்டுகளின் ஆவணங்கள் பதிவேடுகள் துறையில் அழிக்கப்பட்டுள்ளன. நிலமோசடி வழக்கில் இரண்டு பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களையும், இதில் தொடர்புடைய அதிகாரிகள் அனைவரையும் கைதுசெய்து விசாரணை நடத்த வேண்டும். புதுவையில் நீண்டகாலமாக தனியார் நிலங்கள், கோயில் நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நில மோசடிகள் தொடர்பாக அரசு விசாரணைக்குழு அமைக்க வேண்டும். பா.ஜ.க அல்லாத மாநில அரசுகளை சீர்குலைக்க மத்திய அரசு கவர்னர்களை நியமித்து அரசியல் செய்கிறது. கவர்னர்கள் அரசியல் பேசுவதை ஏற்க முடியாது.

ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின்

காய்கறி விலை உயர்ந்து வருவதில் அரசு தலையிட்டு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் நியாய விலையில் காய்கறி விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதேபோல புதுவை அரசும் நியாயமான விலையில் காய்கறிகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில கவர்னர் அரசு நிர்வாகத்தில் தலையிடக் கூடாது. எதிர்க்கட்சித் தலைவர்போல நாள்தோறும் அரசு திட்டங்களையும், அரசையும் விமர்சனம் செய்யக் கூடாது. முதலமைச்சர் ஸ்டாலின் மூலதனத்தை ஈர்க்க வெளிநாடுகளுக்குச் செல்கிறார். ஆனால் வெளிநாடுகளுக்குச் சென்றால் மூலதனம் வந்துவிடுமா என கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்புகிறார். அரசியல்வாதிபோல கவர்னர் பிரசாரம் செய்ய அதிகாரம் கிடையாது. எனவே தமிழக கவர்னரை ஜனாதிபதி திரும்பப் பெற வேண்டும்” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/g-ramakrishnan-urged-puducherry-govt-to-arrest-bjp-mlass-who-were-involved-in-temple-land-fraud-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக