நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் பிரசித்திபெற்ற வேதாரண்யேஸ்வரர் சுவாமி ஆலயத்தில் தைப்பூசத் திருநாளான இன்று நெல் கோட்டை வழங்கும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வர சுவாமி ஆலயம் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோயிலாகும். 'இறைவனின் திருமணக் காட்சியைக் கண்ணாரக் காண முடியவில்லையே' என்று ஏங்கிய அகத்திய முனிவருக்கு சிவன் - பார்வதி திருமணக் கோலத்தில் காட்சி கொடுத்த அற்புதத் திருத்தலமாகும். சமயக்குரவர்களான அப்பரும், திருஞான சம்மந்தரரும் தரிசிக்க வந்தபோது, மூடியிருந்த கோயில் கதவுகளைத் திறக்க, இத்தலத்து ஈசனை பாடித் திறந்ததாக வரலாறு.
இந்தக் கோயிலுக்கு சுமார் 10,000 ஏக்கர் நிலங்கள் உள்ளன. அதில் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள குன்னலூர் கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் சாகுபடி செய்து வரும் விவசாயிகள் விளைந்த நெல்லை அறுத்து, நெல்மணிகளைக் கோட்டையாக கட்டி, இத்தலத்து சுவாமிக்கு அளிக்கும் நிகழ்வு ஆண்டுதோறும் தைப்பூசம் நாளன்று நடைபெறும்.
வழக்கம்போல இந்த ஆண்டும் நெல் அறுவடை செய்து அதனைக் கோட்டையாகக் கட்டி, விவசாயிகள் வேதாரண்யம் கொண்டு வந்து மேலவீதியிலுள்ள களஞ்சியம் விநாயகர் கோயிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். அதன்பின் மேளதாளத்துடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று வேதாரண்யம் கோயிலில் ஒப்படைத்தனர். அங்கு நெல் கோட்டைக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்குப் பிரசாதமாக நெல் கதிர்களை வழங்கினர். நெல் கோட்டையில் இருந்த நெல்லை அரிசியாக்கி சுவாமிக்கு இரண்டாம் காலத்தில் நைவேத்தியம் செய்யப்படும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிப்பட்டனர்.
source https://www.vikatan.com/spiritual/temples/vedaranyam-thaipusam-paddy-ceremony-at-vedaranyaswarar-temple
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக