மகாராஷ்டிரா மாநிலம் சதாராவைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு, முதல் மாதவிடாய் ஏற்படவே இல்லை. அதற்கான வயது மகளுக்குக் கடந்ததால் அவரின் பெற்றோர் மருத்துவ ஆலோசனைக்கு அழைத்துச் சென்றனர்.
உள்ளூர் டாக்டர்களின் பரிந்துரையின் பேரில், சிறுமி மும்பையில் உள்ள ஒரு கிளினிக்குக்கு அழைத்து வரப்பட்டார். அவரை சோதித்த டாக்டர்கள், அவர் ஓர் இடையிலிங்க (intersex) குழந்தை என்பதைக் கண்டறிந்தனர்.
அந்த சிறுமிக்கு Androgen insensitivity syndrome (AIS) இருப்பதையும் குறிப்பிட்டனர். இந்த நிலையில் இருப்பவர்கள் பொதுவாக மரபணு ரீதியாக ஆணாக இருப்பார்கள். ஆனால், பால் உறுப்புகள் பெண் போலவோ, ஆண், பெண்ணுக்கு இடையிலோ காணப்படும்.
பெண்ணுக்கான பால் உறுப்பு இருந்தாலும், இவர்களுக்கு மார்பக வளர்ச்சி இருக்காது. மேலும், கர்ப்பப்பை, சினைப்பை, சினைமுட்டையும் காணப்படாது. ஆண்களுக்கான பால் உறுப்பு உடலுக்குள் அமைந்திருக்கும்.
சம்பந்தப்பட்ட சிறுமி தொடர்ந்து பெண்ணாகவே இருக்க விரும்பியதால், டாக்டர்கள் அதற்கான அறுவை சிகிச்சையை அளிக்க முன்வந்தனர். முதல் கட்டமாக, பரிசோதனையில் அவருக்கு விந்தகங்கள் (testes) இருந்ததைக் கண்டறிந்தவர்கள், அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினார்கள். மேலும், மார்பக வளர்ச்சிக்கும் ஆபரேஷன் செய்யப்பட்டது. தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு அவருக்கு ஹார்மோன் ஊசிகள் செலுத்தப்படும் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அறுவைசிகிச்சை செய்த டாக்டர் அனுபமா கூறுகையில், ``சிறுமிக்கு மார்பக பெருக்கத்துக்கு ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. ஆண்களைப் போல் உடலில் முடி வளர்வதைக் கட்டுப்படுத்த, அவருக்கு ஹார்மோன் ஊசி போட வேண்டியிருக்கிறது. அவருக்கு பெண் தன்மையைக் கொடுக்கும் சிகிச்சை தொடரும். அவரால் பெண்ணாக வாழ முடிந்தாலும், கர்ப்பப்பை, சினைமுட்டை இல்லாத காரணத்தால் அவரால் கருத்தரிக்க முடியாது. இருந்தாலும், வாடகைத் தாய், தத்தெடுப்பது என்று அவரால் குழந்தைக்குத் தாயாக முடியும்'' என்று தெரிவித்தார்.
சிறுமிக்கு 18 வயது ஆன பிறகு, பாலுறுப்பில் ஓர் அறுவை சிகிச்சை (vaginoplasty) செய்யவேண்டியிருக்கிறது என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
லட்சத்தில் ஒரு குழந்தை, AIS குழந்தையாகப் பிறக்கின்றது. பொதுவாக, இடையிலிங்க குழந்தைகளின் பாலினத்தை பெற்றோர் தங்கள் விருப்பப்படி அறுவை சிகிச்சை மூலம் மாற்றியமைக்கும் போக்குதான் இங்கு நிலவுகிறது. `இடையிலிங்க குழந்தைகள் தங்களின் பாலினத்தை தாங்களேதான் தேர்வு செய்யவேண்டும். அறுவை சிகிச்சை செய்யவேண்டிய நிலை வந்தால், அவர்கள் எந்த பாலினமாக மாற விரும்புகிறார்களோ அதற்கேற்பவே சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும்' என்று தொடர்ந்து மருத்துவர்களால் வலியுறுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
source https://www.vikatan.com/news/healthy/15-years-old-intersex-girl-undergone-surgery-after-chosen-her-gender
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக