ஸ்டுடியோவில் மார்க்ஸும் அவனது அணியினரும் உட்கார்ந்திருக்க, வினோ உள்ளே நுழைந்தான். அங்கிருந்த மரப்பெட்டி ஒன்றின் மேல் ஒரு காலை மடித்து உட்கார்ந்தபடியே, “சீஃப் இந்த பிரசாத் திட்டம் போட்டு கான்பரன்ஸ் ரூமை திவ்யாவுக்கு அலாட் பண்ணிட்டான்” என்றான்.
“நாமதான் கான்ஃபரன்ஸ் ரூம் வேணும்னு அப்பவே அவன்கிட்ட சொல்லிட்டோமே” என்றான் பாண்டியன். “வாயல சொன்னா எல்லாம் பத்தாதாம்... அட்வான்ஸா மெயில் அனுப்பி பிளாக் பண்ணாத்தான் செல்லுமாம்" என்றான் வினோ.
“இதுக்கு மட்டும் கத்துதா அந்த பல்லி” என பாண்டியன் சிரித்தான். “விடுறா என்ன பேசுறோம்றதுதான் முக்கியம். எங்க உட்கார்ந்து பேசுனா என்ன?” எனச் சாதாரணமாக சொன்ன மார்க்ஸ், பாண்டியனைப் பார்த்து “எங்கடா பாதி பேரைக் காணோம்?” என்றான்.
“போனடிச்சு பார்க்குறேன் சீஃப்” என சொன்னபடியே பாண்டியன் தனது போனை எடுத்தான். “அவங்க எல்லாம் எதிர்கட்சியில சேர்ந்துட்டாங்கப்பா” என சட்டென சொன்னார் நெல்லையப்பன்.
நெல்லையப்பனுக்கு வயது 57 இருக்கும். நெற்றி நிறைய சித்தநாதன் கடை விபூதி. நடுவில் நெற்றிக்கண்ணாய் குங்குமம். வாயில் எப்போதும் வெற்றிலை. அவர் அருகில் வந்தாலே கும்பகோணம் சீவல் மணம் தூக்கும். இந்தத் தோற்றம் மாலை 6 வரைக்கும்தான். 6 மணிக்கு மேல் அவர் எடுக்கும் அவதாரமே வேறு. எப்போதும் தமிழில் வெளுத்து வாங்கும் அவர் ஆங்கிலத்தைச் சிதற விட்டால் மருந்து உள்ளே போய்விட்டது என்று அர்த்தம்.
அந்த அலுவகத்தின் சூப்பர் சீனியர். எழுபதுகளின் இறுதியில் நடிகனாக வேண்டும் என்ற ஆசையில் பல பிரபலங்களைப்போல சென்னைக்கு ரயில் ஏறியவர் பின்னர் பாலசந்தரிடம் உதவி இயக்குநராகி, ஒரு ரிலீஸ் ஆகாத படம் எடுத்து அதன் பின் டிவியில் வேலைக்குச் சேர்ந்து என முயற்சிகளிலேயே அவர் வாழ்க்கை முடிந்து போக இன்னும் ஓராண்டில் இங்கிருந்தும் ரிட்டயர்ட் ஆக காத்திருப்பவர். 'ரஜினியும் நானும் உட்லண்ட்ஸ்ல...' என ஆரம்பித்து அவர் சொல்லும் சினிமா கதைகள் மிகப் பிரபலம். மனதில் பட்டதை பட்டென பேசுவார். வயது காரணமாக அவரை யாரும் கோபித்துக் கொள்வதில்லை.
மார்க்ஸ் அவரை சிறிய குழப்பத்துடன் நிமிர்ந்து பார்த்தபடி “என்னண்ணே சொல்றீங்க எங்க போயி சேர்ந்துட்டாங்க?!”
“இது கரன்ட் நியூஸ்ப்பா... ஏஞ்சல் தலைமையில அந்த ஊமைகொட்டான், வத்திகுச்சி, குத்துபோனி, பட்டர் பிஸ்கட், எலிவாலு, கிளார் மண்டையன் மொத்தமாக 7 பேர் அந்த மனீஷா கொய்ராலா டீம்ல போய் சேர்ந்துட்டாங்க...”
நெல்லையப்பன் சொன்னதும் அறையில் அனைவரும் வெடித்து சிரித்தனர். நெல்லையப்பன் யாரையும் பெயர் சொல்லி அழைப்பதில்லை. எல்லோருக்கும் அவர் ஒரு பட்டப் பெயர் வைத்திருப்பார்.
“அண்ணே இந்த மாதிரி நியூஸ் எல்லாம் எங்க இருந்துன்ணே உங்களுக்கு கிடைக்குது” என சிரித்தபடியே கேட்டான் மார்க்ஸ்.
“ஏம்பா கூட்டமா முதுகுல குத்திட்டானுங்கன்னு சொல்றேன். நீ என்னமோ சிரிக்கிற?”
“நம்ம புள்ளைங்கதானன்ணே... அவங்களுக்குப் பிடிச்ச ஆளோட வேலை செய்யட்டும்”
“யப்பா நீ நல்லவனா இரு வேணாங்கல... அதுக்காக இப்படி ஏமாளிப் பயலா இருக்க கூடாதில்ல. அந்த வத்திகுச்சி புள்ளைக்கு ஸ்கூல் பீஸ் கட்டுனது நீ... நன்றிகெட்டவன். அந்த பாம்பேகாரி பின்னாடி போயிட்டான் பாரு” என்று ஆதங்கமாகச் சொன்னார் நெல்லையப்பன்.
“அண்ணே போதும்” எனக் கடுமையான குரலில் மார்க்ஸ் அவருடைய பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான். செய்த உதவியை சொல்லிக் காட்டுவது உதவி செய்யாமல் இருப்பதை விட பெரிய பாவம் என்பது மார்க்ஸின் கொள்கைகளில் ஒன்று.
“அவங்களைப்பத்தி ஒரு வார்த்தை இனி யாரும் தப்பா பேசக் கூடாது. நேத்து வரைக்கும் நம்ம கூட வேலை செஞ்சவங்கதான அவங்க... டீம் மாறிட்டா வேண்டாதவங்களா ஆயிடுவாங்களா?" அனைவரும் மெளனமாக இருக்க...
“எல்லாரும் ஒரே சேனலுக்குதானே வேலை செய்றோம். நமக்குள்ள போட்டி இருக்கட்டும். வெறுப்பு வேணாம். அந்த திவ்யாவும் சாதாரண ஆள் இல்ல. போன வருஷம் அச்சீவர் அவார்ட் வாங்குன பொண்ணு... அஞ்சாவதா இருந்த நம்ம பெங்காலி சேனலை நம்பர் ஒண்ணா ஆக்கிருச்சு... அதனாலதான் இங்க கொண்டு வந்திருக்காங்க... புரியுதா... ”
அனைவரும் மெளனமாக தலையாட்ட, மீண்டும் மார்க்ஸ், நெல்லையப்பனைப் பார்த்து “என்னன்னே புரியுதா?” என்றான்.
நெல்லையப்பன் தலையாட்டினார்...
“என்ன புரியுது?”
“இல்லப்பா அந்த மனீஷா கொய்ராலா உன் வீட்டுக்கு வந்திருக்கு. உங்க ரெண்டு பேருக்குள்ள ஒரு கரன்ட் ஓடுதுன்றாங்க... எதிரிய நீ நேசிக்கிற... நல்ல விஷயம்தான்... நாங்க பார்த்து நடந்துகிறோம்பா” என அவர் எந்தத் தயக்கமும் இல்லாமல் சொல்ல, மார்க்ஸுக்கு சட்டென சிரிப்பு வந்துவிட அவனுடன் சேர்ந்து அனைவரும் சிரித்தனர்.
“கோச்சிக்கக்கூட முடியாதுன்னே உங்ககிட்ட” எனச் செல்லமாக அவர் தோளைத் தட்டினான் மார்க்ஸ்.
“உலகம் உன் முதுக்குப் பின்னால பேசுறத, நான் உன் முகத்துக்கு முன்னால பேசுறேன்... அவ்வளவுதான் வித்தியாசம். பாண்டியன்தான்பா இந்த விஷயத்தை சொன்னது” என அவர் சொல்ல பதறிப்போனான் பாண்டியன்.
“சீஃப், மாமா என்ன கோத்து விடுறாரு... யோவ் மாமா நான் எப்பய்யா சொன்னேன்?” என பாண்டியன் பொய் கோபத்துடன் கேட்க அந்த இடம் சிரிப்பொலியால் நிறைந்தது.
மார்க்ஸ் சின்ன புன்னகையுடன் அந்தச் சூழலை ரசித்தபடி “இப்படியே ஜாலியா நாலு நல்ல புரோகிராம் பண்ணி நம்பர் வர வச்சிட்டா போதும்... அவ்வளவுதான்” என்றான்.
“இந்த சனிப்பெயர்ச்சி உனக்கு அவ்வளவு சிறப்பா இல்ல மார்க்ஸ்” என்றார் நெல்லையப்பன்.
''அண்ணே, கொரோனா வந்ததுக்கு அப்புறமா ராகு, கேது, சனி எல்லாம் டிரெண்டிங்லயே இல்லன்ணே... சனி பிடிக்குறது எல்லாம் அப்புறம். முதல்ல சளி பிடிக்காம பார்த்துக்கனும்ணே அதான் முக்கியம்'' என மார்க்ஸ் சொல்ல, அனைவரும் சிரிக்க... “அந்த கிரகங்களுக்கே பிடிச்ச கிரகம்யா நீ” என்றார் நெல்லையப்பன்.
“நாளைக்கு நம்மளோட புரோகிராமிங் பிளானை மேனன் சாருக்கு பிரசன்ட் பண்ணனும். நம்ம கதையை விட்டுட்டு நாம பண்ணப்போற கதைகளைப்பத்தி பேசுவோமா?" என்றான் மார்கஸ்.
அனைவரும் கையில் உள்ள நோட்டைப் பிரித்து விவாதத்திற்குத் தயாரானார்கள்.
“அண்ணே திவ்யாவுக்கு ஏன்னே மனீஷா கொய்ராலான்னு பழைய ஹீரோயின் பேரா வச்சிட்டீங்க... புது ஹீரோயின் பேரா வைங்கன்னே” என்றான் பாண்டியன்.
அதைக்கேட்ட மார்க்ஸ் கிண்டலாக, “டேய் அப்பப்ப வேலையும் பாருங்கடா... மறந்துடப் போகுது” எனச் சொல்ல, “யெஸ் சீஃப்” என்றபடியே, கையில் இருக்கும் நோட்டில் எதையோ எழுதுவதை போல நடிக்க ஆரம்பித்தான் பாண்டியன்.
தரைதளத்தில் மார்க்ஸ் டீமின் மீட்டிங் நடந்து கொண்டிருக்க, 13-வது மாடியில் திவ்யா கான்ஃபரன்ஸ் அறையின் வாசலில் நின்று யாரோ இருவருடன் பேசிக் கொண்டிருந்தாள்.
ஏஞ்சல், மனோன்மணி, தனபால், குரு, ரஞ்சித், சாருமதி, நிருபமா அனைவரும் அறையில் அமர்ந்திருந்தனர். அனைவரது முகத்திலும் மார்க்ஸுக்குத் தெரியாமல் ஏதோ திருட்டு வேலை செய்கிற குற்ற உணர்ச்சி இருந்தது.
மனோன்மணி மெல்லிய குரலில் ஏஞ்சலிடம், “அந்த பாண்டியன் போன் அடிச்சுகிட்டே இருக்கான்” எனச் சொன்னாள்.
“எடுக்காதே” என்றாள் ஏஞ்சல்...
“மீட்டிங் இருக்காம்... ஒரு வார்த்தை மார்க்ஸ்கிட்ட சொல்லிரலாமே”
“இந்நேரம் மாமா பக்காவா எல்லாரையும் போட்டு குடுத்திருப்பாரு... நீ கவலப்படாதே” என்றாள் ஏஞ்சல்.
“அதில்ல” என மனோ இழுக்க...
“வேணும்னா போ... போயி அந்த மார்க்ஸ் டீம்ல சேர்ந்துக்கோ” என எரிச்சலாக சொன்னாள் ஏஞ்சல்.
“சரி சரி டென்ஷன் ஆகாதே” என்று வாயை மூடிக் கொண்டாள் மனோ.
திவ்யாவும் அவளுடன் பேசிக் கொண்டிருந்த இருவருடன் வந்து நாற்காலியில் அமர்ந்தாள்.
அனைவரையும் பார்த்து புன்னகைத்தவள், “இது நந்திதா நம்மளோட புது ப்ரோமே ஹெட்'' என அறிமுகப்படுத்த அனைவரும் அவளைப் பார்த்து புன்னகைத்தனர்.
நந்திதா ஆண்களைப்போல ஒட்ட முடி வெட்டியிருந்தாள். களையான முகம், உற்சாகமான கண்கள். உலகத்தின் அழகிய நிறம் கறுப்புதான் என அவளைப்பார்க்கும் யாரும் ஒப்புக் கொள்வார்கள். இடது கரத்தில் பித்தளைக் காப்பு ஒன்று. பல்வேறு வண்ணங்களில் கயிறுகளும் கட்டி இருந்தாள். மற்றொரு கரத்தில் பெரிய டயலுடன் கூடிய கைக்கடிகாரம் அணிந்திருந்தாள். வலது கரத்தில் கைகடிகாரம் அணிபவர்கள் ஆளுமையானவர்கள் என யாரோ சொன்னது ஏஞ்சலுக்கு நினைவுக்கு வந்தது.
"இது மானஸ், நம்மளோட நான் ஃபிக்ஷன்ஸ் பார்த்துக்கப் போறார்."
“ஹாய்” என்று சொன்ன மானஸ்க்கு வயது இருபதுகளின் இறுதியில் இருக்கும். அலை அலையாக நீளமான முடியுடன் இருந்தான். பேசும்போது ஸ்டைலாக தலைமுடியை கோதிக் கொண்டான். நல்ல நிறம், இளம் இந்தி நடிகர்களின் சாயலில் இருந்தான். சட்டையின் இரண்டு பட்டன்கள் திறந்திருந்தன... அழகாய் சிரித்தான். அலட்சியமாய் இருந்தான்.
“இது ஏஞ்சல்” என அவர்களுக்கு ஏஞ்சலை அறிமுகப்படுத்தி வைத்தாள் திவ்யா.
மானஸ் அவள் கையை பற்றி குலுக்கினான். அதில் ஒரு ஸ்நேகம் இருந்ததை ஏஞ்சலால் உணரமுடிந்தது.
"நாளைக்கு நம்மளோட புரோகிராமிங் பிளானை மேனன் சாருக்கு பிரசன்ட் பண்ணனும். பெங்கால்ல என்னோட சக்ஸஸுக்குக் காரணம் எனக்கு கிடைச்ச நல்ல டீம்தான். நான் யோசிக்கிறதை ஸ்கீரின்ல கொண்டு வர்றதுக்கு உங்களோட உதவி எனக்கு வேணும். இந்த டீம்ல நிறைய பெண்கள் இருக்கீங்க. அதுவே எனக்கு ரொம்ப பாசிட்டிவா ஃபீல் ஆகுது. டிவியோட முக்கியமான ஆடியன்ஸ் பெண்கள்தான். ஆனா, அவங்களுக்கு புரோகிராம் பண்ற டீமைப் பார்த்தா முழுக்க ஆம்பளைங்களா இருப்பாங்க... இதுல ஏதாவது லாஜிக்கா இருக்கா சொல்லுங்க? பெண்களுக்கு என்ன பிடிக்குன்றத பெண்களாலதான் கரெக்டா புரிஞ்சுக்க முடியுன்னு நான் நம்புறேன். நாம அதை ப்ரூவ் பண்ணி காட்டலாம். ஹார்ட் வொர்க் பண்ணலாம். வெற்றியை ஷேர் பண்ணிக்கலாம்” என்றாள் திவ்யா.
அனைவரும் உற்சாகமாக “யெஸ் திவ்யா” என்றார்கள்.
மானஸ் ஏஞ்சலையே பார்த்துக் கொண்டிருந்தான். ஏஞ்சலும் அதை கவனிக்கத் தவறவில்லை.
நந்திதா கிசுகிசுப்பாக திவ்யாவின் காதில், “அந்த மார்க்ஸை கொஞ்சம் பார்க்கணுமே...”
“என்னடி வந்ததும் வராததுமா அவனைப் பாக்கணும்ன்ற..?”
“கல்கத்தா ஆபிஸ்ல பூரா அவனைப் பத்திதான் பேச்சு... மேனன் சாருக்கு அவனை ரொம்ப பிடிச்சு போச்சாமே!”
திவ்யா அவளை முறைத்தாள்.
“யேய் நான் ப்ரோமோ ஹெட், பொதுவான ஆளு... உன் ஷோவுக்கும் ப்ரோமோ பண்ணுவேன். அவன் ஷோவுக்கும் ப்ரோமோ பண்ணுவேன்.”
“நீ என் ஃபிரண்ட். எனக்கு ஒழுங்கா சப்போர்ட் பண்ற வேலையைப் பாரு புரியுதா” எனக் கடுப்பானாள் திவ்யா.
“அவனை நேர்ல பார்த்ததுக்கு அப்புறம் அதை நான் முடிவு பண்றேன்” என நந்திதா சிரித்தாள்.
மீட்டிங் முடிந்து ஏஞ்சலும் மற்றவர்களும் தங்களது பணியிடத்துக்கு திரும்ப... அதே சமயத்தில் நெல்லையப்பன், பாண்டியன் என மார்க்ஸ் டீமும் தங்களது இடத்துக்கு திரும்பின. நேருக்கு நேர் இரண்டு அணியினரும் சந்தித்துக்கொண்டனர்.
“என்ன மனோ, அத்தனை வாட்டி போன் பண்றேன். எடுக்கவே இல்லை...” எனப் பாண்டியன் கேட்டான்.
“அது வந்து மீட்டிங்ல இருந்தேன்” என மனோ தடுமாறி பதில் சொன்னாள்.
“பாஸ் மீட்டிங் கூப்புடுறாரு... நீ என்னமோ வேற மீட்டிங்ல இருந்தேன்னு சொல்ற” எனப் பாண்டியன் விடாமல் கேட்க,
“பாஸா, யார் பாஸ்?” என ஏஞ்சல் குறுக்கே வந்தாள்.
“நேத்து வரைக்கும் நீங்க யாரை பாஸ், பாஸ்ன்னு சொன்னீங்களோ அதே பாஸைத்தான் சொல்றோம்” என்றான் வினோ.
“டேய் ஏண்டா நன்றி கெட்டவங்ககிட்ட போய் பேசிக்கிட்டு...” என முகத்தில் அடித்தார் போல சொன்னார் நெல்லையப்பன்.
“மாமா வேணாம்..” எனக் கோபமானான் தனபால்.
“டேய்... அவரைப் பார்த்து கை நீட்டி பேசுன கைய உடைச்சிருவேன்” என பாண்டியன் ஒரு எட்டு எடுத்து வைத்து முன்னால் வந்தான்.
“உடைடா பார்ப்போம் உடைடா பார்ப்போம் ஆம்பளையா இருந்தா கைய வைடா...” என தனபால் எகிற, “பாண்டியா சாக்கடையில கல் எறியாதே தெறிக்குது பாரு” என நெல்லையப்பன் கேலியாகச் சொல்ல பாண்டியனும், வினுவும் வெடித்து சிரித்தனர்.
“டேய்... மார்க்ஸ் இருக்கிற தைரியத்தில துள்ளுறீங்களா அந்த மார்க்ஸ் ஒரு........ “ என தனபால் சொல்ல பாண்டியனுக்குக் கோபம் தலைக்கேறியது.
“யாரைப் பார்த்து என்ன வார்த்தைடா சொன்னே?” என பாண்டியன் ஓங்கி தனபாலின் முகத்தில் ஒரு குத்து குத்த, அவனது சில் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது.
பெண்கள் பதற...
“டேய்... அடிடா அவன...” என குருவும், ரஞ்சித்தும் பாண்டியனை அடிக்க வினோ அவர்களைத் தடுக்க... கண் இமைக்கும் நேரத்தில் அந்த இடமே கலவரமானது.
சத்தம் கேட்டு ஓடி வந்த தாட்சா அதிர்ந்து போய் நின்றாள். இந்த சின்ன சண்டை, மார்க்ஸுக்கு எவ்வளவு பெரிய சிக்கலை ஏற்படுத்தப்போகிறது என்பது தாட்சாவுக்குப் புரிந்தது.
- Stay Tuned...
source https://cinema.vikatan.com/literature/conflict-arises-between-marx-and-divya-teams-idiot-box-part-10
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக