Ad

வியாழன், 28 ஜனவரி, 2021

`அன்று பெறப்பட்ட கையெழுத்து... இப்போதுதான் புரிகிறது’ - அரசியல் முடிவில் லதா; மெளனம் காக்கும் ரஜினி!

ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்திருந்த சமயத்தில், பா.ஜ.க-வின் அறிவுசார் பிரிவின் மாநிலத் தலைவராக இருந்த அர்ஜுனமூர்த்தி, அக்கட்சியிலிருந்து விலகி ரஜினியுடன் கை கோத்தார். ரஜினியின் கட்சிப் பணிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பும் அர்ஜுனமூர்த்திக்கு வழங்கப்பட்டது. இந்தச் சூழலில், தன் உடல்நிலையைக் காரணம்காட்டி ரஜினி அரசியலுக்கு குட்பை சொன்னதும், குழம்பிப்போனார் அர்ஜுனமூர்த்தி. சிலகாலம் அமைதியாக இருந்தவர், திடீரென நேற்று ஜனவரி 28-ம் தேதி புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்கப் போவதாக அறிவித்துள்ளார். “எனது கட்சியின் கோட்பாடுகள், கொள்கைகள் நிச்சயம் பா.ஜ.க-வில் இருந்து மாறுபட்டதாக இருக்கும். ரஜினி ரசிகர்கள் எனது கட்சியில் இணைந்து கொள்ளலாம்” என்றும் தெரிவித்திருக்கிறார் அர்ஜுனமூர்த்தி.

அர்ஜுனமூர்த்தி

ரஜினி வட்டாரத்தில் என்னதான் நடக்கிறது?, மன்றத்தின் செயல்பாடுகள், போயஸ்கார்டனின் நகர்வுகளை அறிந்த சிலருடன் பேசினோம். “அண்மையில், பெங்களூருவுக்குச் சென்றிருந்தார் ரஜினிகாந்த். 12 நாள்கள் அங்கு தனது நண்பர்களுடன் பொழுதைக் கழித்துவிட்டு சில நாட்களுக்கு முன்புதான் சென்னை திரும்பினார். பெங்களூருவுக்குக் கிளம்புவதற்கு முன்பாக, ரஜினியைச் சந்திக்க அர்ஜூனமூர்த்தி நேரம் கேட்டார். ஆனால், ரஜினி நேரம் தரவில்லை. ரஜினி சென்னை திரும்பியபிறகே அர்ஜுனமூர்த்திக்கு நேரம் ஒதுக்கப்பட்டு சந்திப்பு நடைபெற்றது. அப்போது தனது புதிய கட்சி தொடர்பாக ரஜினியிடம் பேசியிருக்கிறார் அர்ஜூனமூர்த்தி. அவர் சொன்னதைக் கேட்டுக் கொண்ட ரஜினி, உத்திரவாதம் எதையும் தரவில்லை.

சன் பிக்சர்ஸுன் `அண்ணாத்தே’ பட ஷூட்டிங் பணிகள் 50 சதவிகிதம் முடிந்துள்ளன. அடுத்த ஒரிரு மாதங்களில், மீதமிருக்கும் ஷூட்டிங் பணிகளையும் முடித்துவிட்டு, மருத்துவ பரிசோதனைக்காக ஏப்ரலில் அமெரிக்கா செல்லவிருக்கிறார் ரஜினி. அதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. ஆக, தமிழகத் தேர்தல் சமயத்தில் ரஜினி சென்னையில் இருக்கமாட்டார். அவர் இல்லாத இந்த காலகட்டத்தில் ரஜினியின் வீட்டில் இருந்து புதிய நபர் ஒருவரின் அரசியல் பிரவேசம் இருக்கும் என்கிற செய்தி சில நாள்களாக ரஜினி மக்கள் மன்றத்தினர் மத்தியில் சுற்றி வருகிறது. புதிய கட்சி தொடங்கியிருக்கும் அர்ஜூனமூர்த்தியின் பின்னணியில் லதா ரஜினிகாந்த் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

ரஜினிகாந்த்

ரஜினி பெங்களூருவில் இருந்த சமயத்தில், போயஸ்கார்டனில் லதா ரஜினிகாந்தை மூன்று முறை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியிருக்கிறார் அர்ஜுனமூர்த்தி. அப்போது, ‘தமிழகத்தில் ரஜினிக்கு 10 சதவிகித வாக்குகள் இருக்கின்றன. இளைஞர்கள், புதிய வாக்காளர்கள் அவரை விரும்புகின்றனர். இந்த வாக்குகள் மற்ற அரசியல் கட்சிகளுக்குப் போவதை ரஜினியும் விரும்பமாட்டார். தனக்கு உடல்நிலை சரியில்லாததால், மன்றத்தினர் தாங்கள் விரும்பிய கட்சிகளுக்குச் செல்லலாமென ரஜினி கூறினாலும், அவரது லட்சக்கணக்கான ரசிகர்கள் அதற்குத் தயாராக இல்லை. அவர்களை நாம் இழந்துவிடக்கூடாது. நீங்கள் தலைமை ஏற்க வாருங்கள்’ என்று லதாவிடம் தூபம் போட்டப்பட்டதாம்” என்றவர்கள், ரசிகர் மன்றத்திலிருந்தும் சிலர் லதாவை அரசியலுக்கு இழுக்கும் வேலையை ஆரம்பித்திருப்பதைப் பற்றியும் கூறினார்கள்.

“ஒரு சில மாவட்டங்களில் லதா ரஜினியை தலைமை ஏற்க அழைத்துக் குரல் எழும்பியிருக்கின்றன. ரஜினிக்கும் அதைத் தெரியப்படுத்தி இருக்கிறார்கள். ரஜினியின் மக்கள் மன்ற முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான தூத்துக்குடி ஸ்டாலின் உள்ளிட்ட மூன்று மாவட்டச் செயலாளர்கள் சமீபத்தில் தி.மு.க-வுக்குத் தாவினர். மேலும் சிலர் அ.தி.மு.க-வுக்குத் தாவ முயன்றனர். குறிப்பாக, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் ஒருவர் பேரம் பேசியிருக்கிறார். பதவிக்கு தகுந்தமாதிரி ரேட் நிர்ணயிக்கப்பட்டதாம். ஆனால், ரஜினி தரப்பில் யார் எங்கு வேண்டுமானாலும் போகலாம் என்று பச்சைக்கொடி காட்டியதும், அ.தி.மு.க. பிரமுகர்கள் மௌனம் ஆகிவிட்டார்கள்.

லதா ரஜினிகாந்த்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரஜினியை அரசியலுக்கு வரச் சொல்லி கூட்டம் நடந்தது அல்லவா... அப்போது லதாவை அரசியலுக்கு வரும்படி தூபம் போட்ட சிலரும் கலந்துகொண்டார்கள். குறிப்பாக, லதாவின் `பீஸ் பார் சில்ட்ரன்’ என்கிற சமூக அமைப்பின் பொறுப்பை கவனிப்பவர் திண்டுக்கல் தம்புராஜ். இவரும் வள்ளுவர் கோட்ட கூட்டத்தில் கலந்துகொண்டார். இவர் முன்பு மன்றத்தில் இருந்தவர். லதாவின் தீவிர ஆதரவாளர். ரஜினியின் மக்கள் மன்றம் ஆக்டிவ் ஆக செயல்பட்டபோது, தம்புராஜும் அவர் பங்குக்கு மாவட்ட விசிட் செய்து அமைப்பின் கட்டமைப்பை வலுப்படுத்தினார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுமார் 10,000 பேர் அமைப்பின் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ரஜினியின் புதிய கட்சி ஒருபக்கம் விஸ்வரூபம் எடுத்தபோது, `பீஸ் பார் சில்ட்ரன்’ அமைப்பின் கட்டமைப்பும் தானாக வளர்ந்தது. இதுபற்றியும் ரஜினிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும், தம்புராஜுன் நடவடிக்கைகளை தடுக்கவில்லை. ஒருவேளை லதா அரசியலுக்கு வந்தால் தம்புராஜுன் பங்கு அதிகமாக இருக்கும்” என்றனர்.

Also Read: மன்றத்தினரின் கோரிக்கை: அரசியலில் குதிக்கிறாரா லதா ரஜினிகாந்த்?

அரசியலுக்கு ரஜினி வருவதாக சொல்லிய சமயத்தில், ரஜினி கட்சியாக மக்கள் சேவை கட்சியும், தேர்தல் சின்னமாக ஆட்டோவும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு, கிடைத்துள்ளதாக தகவல் வெளியானது. அந்த கட்சியின் நிர்வாகிகளாக ஆவணங்களில் காட்டப்பட்டிருந்தவர்களை சென்னைக்கு திடீரென அழைத்தார்களாம். அவர்களிடம் மன்ற மேலிட நிர்வாகி ஒருவர் சில ஆவணங்களில் கையெழுத்து வாங்கினாராம். இதுகுறித்து நம்மிடம் பேசிய மன்ற பிரமுகர் ஒருவர், “அப்போது ஏன் கையெழுத்து வாங்கினார்கள் என்பது புரியவில்லை. இப்போதுதான் புரிகிறது... லதா ரஜினிகாந்த் பெயரில் மக்கள் சேவை கட்சியை மாற்றுவதற்கு கையெழுத்து வாங்கியிருப்பதாகக் கருதுகிறோம். லதாவின் உறவினரான ஒருவர், அர்ஜூனமூர்த்தியின் நண்பர், ஒரு வழக்கறிஞர்... இந்த மூவரும்தான் லதாவின் அரசியல் பிரவேசத்துக்கான பின்னணியில் செயல்படுகிறார்கள்” என்றார்.

ரஜினிகாந்த்

சரி.. லதா ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்துக்கு ரஜினி உடன்படுவாரா, அவரது ஆசி உண்டா?... என்று விசாரித்தோம்.

”ரஜினிக்குத் தெரியாமல் அவர் குடும்பத்தில் எதுவும் அசையாது. ஆனாலும், மனைவி லதாவே களத்தில் இறங்கியிருப்பதால், மௌனம் காக்கிறார் ரஜினி. அரசியலில் குதிக்க ரஜினிக்கு மனமில்லை. தன் முடிவுக்கு ஆதரவாக குடும்பத்தினரும் இருப்பார்கள் என்று நினைத்தார். அதற்கு மாறாக, குடும்பத்தினர் முடிவெடித்துவிட்டதால், அவரால் என்ன செய்ய முடியும். முடிவெடுக்க முடியாத நிலையில் இருக்கிறார் ரஜினி” என்கிறார்கள் போயஸ் தோட்டத்தின் உள்விவரம் அறிந்தவர்கள்.

இதற்கிடையே, லதாவின் அரசியல் பிரவேசம் பற்றிய செய்திகளை அர்ஜுனமூர்த்தி தரப்பினர்தான் மீடியாக்களிடம் பேசிவருவதாகக் கூறப்படுகிறது. போயஸ் தோட்டத்துக்குள் என்ன நடக்கிறது என்பது இன்னும் சில நாள்களில் விவகாரமாக வெடிக்கலாம்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/is-latha-rajinikanth-planned-to-enter-politics

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக