Ad

ஞாயிறு, 31 ஜனவரி, 2021

`முக்கியத் தலைவர்கள் கைது; ஓராண்டுக்கு அவசர நிலை!’ மியான்மரில் ஆட்சியைக் கவிழ்த்த ராணுவம்

மியான்மரில் கொரோனா சூழலுக்கு மத்தியில் கடந்த நவம்பரில் தேர்தல் நடந்து முடிந்தது. ஆட்சியமைக்கத் தேவையான 322-க்கும் அதிகமான இடங்களில் வென்று ஆங் சாங் சூகியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. இந்தத் தேர்தலில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக ராணுவம் குற்றம்சாட்டி வந்தது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாகவே அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல் அதிகரித்து வந்தது.

ஆங் சாங் சூகி மற்றும் முக்கிய தலைவர்கள் (கோப்பு படம்)

இன்று மியான்மரில் நாடாளுமன்றம் கூட இருந்த நிலையில், தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவர் ஆங் சாங் சூகி, அதிபர் வின் மைன்ட் மற்றும் முக்கிய தலைவர்கள் பலரையும் ராணுவம் அதிகாலையில் அதிரடியாகக் கைது செய்திருக்கிறது. அதோடு, அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாகவும், இந்த எமர்ஜென்சி அடுத்த ஒரு ஆண்டுக்குத் தொடரும் என்றும் அந்த நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

Also Read: ரோஹிங்யா விவகாரத்தில் ஆங் சாங் சூகியின் 'கௌரவக் குடிமகள்' விருது பறிப்பு!- ஜஸ்டின் ட்ரூடோ அதிரடி

இப்படி நடப்பது மியான்மரில் புதிது அல்ல. 1948-ம் ஆண்டு ஆங்கிலேயர்களிடமிருந்து மியான்மர் விடுதலை பெற்றது. விடுதலைக்குப் பிறகு பெரும்பான்மையான நாள்களில் அந்த நாடு ராணுவ ஆட்சியிலேதான் கழித்து வந்தது. தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவர் ஆங் சாங் சூகி 15 ஆண்டுகளுக்கும் மேல் வீட்டுக் காவலில் தான் இருந்து வந்துள்ளார். ராணுவ ஆட்சியை எதிர்த்து அமைதியான முறையில் போராடி வந்த அவருக்குக் கடந்த 1991-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ஆங் சாங் சூகி

தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளது என்று தொடர்ந்து ராணுவம் கூறிவந்தநிலையில், தற்போது அங்கு ராணுவப் புரட்சி நடந்துள்ளது. நாட்டின் தலைநகரில் தொலைபேசி, இணைய இணைப்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், முக்கியத் தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் ஆங் சாங் சூகி கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆங் சான் சூகி மற்றும் அதிபர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் கைதையடுத்து அந்த நாட்டில் பதற்றமான சூழல் நிலவுகிறது.



source https://www.vikatan.com/government-and-politics/international/myanmar-army-declaration-of-emergency-for-one-year

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக