நடிகர் ரஜினிகாந்த் தொடங்குவதாக இருந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனமூர்த்தி என்பவர் அறிவிக்கப்பட்டார். பா.ஜ.க-வின் அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்த அவர், இதற்காக அந்தக் கட்சியில் இருந்து விலகினார். ஆனால், அரசியல் கட்சி தொடக்கம் என்ற தனது முடிவிலிருந்து ரஜினி பின்வாங்கினார்.
இதுகுறித்து பேசிய அர்ஜுனமூர்த்தி, ரஜினியின் முடிவை மதிப்பதாகக் கூறியிருந்தார். இந்தநிலையில், திடீரென நேற்று அறிக்கையொன்றை வெளியிட்ட அர்ஜுனமூர்த்தி, ``எந்தச் சூழ்நிலையிலும் எனக்குத் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான். அரசியலில் இல்லையென்றாலும், எனக்குத் தலைவர் என்பதையும் தாண்டி, நான் ஒரு ரசிகன் என்பதில் பெருமைகொள்கிறேன். அந்த அக்கறையில் அவரது புகழுக்கு எந்த இடத்திலும் கெட்டபெயரை நாம் ஏற்படுத்த மாட்டோம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஆசீர்வாதம் மட்டும் போதும்... அவர்களின் ஆசையை நாம் நிறைவேற்றுவோம். மிக்க நன்றி. விரைவில் மாற்றத்தின் சேவகனாக உங்கள் முன்...” எனக் குறிப்பிட்டிருந்தார். இதனால், அவர் புதிய அரசியல் கட்சி தொடங்கப்போவதாகத் தகவல் வெளியானது.
இந்தசூழலில் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அர்ஜுனமூர்த்தி. அவர் கூறுகையில், ``தற்போது ஒரு மாற்றுச் சிந்தனை கொண்ட தமிழகத்தில் இருக்கிறோம். இந்த மாற்றுச் சிந்தனை கொண்ட தமிழகத்துக்கு ஒரு மாற்றான அரசியல் அமைப்பும், அரசாங்கமும் தேவை என்பது மக்களின் மனதில் நிறைந்திருக்கிறது. அந்த மாற்றத்தைக் கொடுக்கப் போவது யார் என்ற தேடல் மக்கள் மனதில் நிறைந்துள்ளது.
தமிழகத்தில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் பலமாக இருக்கும் நேரத்தில், புதிய அரசியல் கட்சிகள் என்ன செய்துவிடமுடியும்? எந்த மாதிரியான மாற்றத்தைக் கொடுத்துவிட முடியும் என்ற கேள்வியும் அனைவரின் மனதிலும் இருக்கும். நோக்கியா போன்ற ஒரு மொபைல் போன் இருக்கும்போது ஆண்ட்ராய்டு போன்ற ஸ்மார்ட்போன் வரும் என்று யாரேனும் நினைத்திருப்போமா? எப்போதுமே ஒரு ஒரு தொலைநோக்கு பார்வை இருந்தால் மட்டுமே அது சாத்தியம்.
Also Read: `ரஜினிகாந்தின் ஆசீர்வாதம்; விரைவில் மாற்றத்தின் சேவகனாக..!’ - அர்ஜுனமூர்த்தி சொல்வதென்ன?
தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை அப்படியான ஒரு தொலைநோக்கு பார்வை ஏற்படும். அப்படியான ஒரு சுழற்சி தற்போது தமிழகத்தில் நிலவி வருகிறது. அப்படியான ஒரு சுழற்சி வந்ததால்தான் இன்னொரு தலைமை வராதா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. அதுவும் இந்த கொரோனா காலகட்டத்தில் அந்த எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்துள்ளது.
அப்படியான ஒரு நம்பிக்கை வாய்ந்த தலைவரைக் கண்டுபிடிக்கும் சூழல் இல்லை. இளைஞர்கள் நினைத்தால் முடியாதது எதுவுமே இல்லை. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இளைஞர்கள் செய்துகாட்டியதை நினைவில் கொள்ளவேண்டும். இளைஞர்களின் சதியைக் குறைத்து மதிப்பிடக்கூடாது. நம்பிக்கையின் மீது நம்பிக்கை வைத்தால் முடியாதது எதுவும் இல்லை.
Also Read: `ரஜினி என்னை விட்டுக்கொடுக்க மாட்டார்!' - தனிக்கட்சி ஆரம்பிக்கும் அர்ஜுனமூர்த்தி
மக்கள் ஒரு சுதந்திரமான சூழலில் வாழவேண்டும். இப்போது மக்கள் நாம் சுதந்திரமான சூழலில் இருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். கண்டிப்பாக நாம் சுதந்திரமாக இல்லை. மக்களுக்கு நல்ல சுதந்திரம் வேண்டும். அதற்கு நல்ல ஒரு அமைப்பும் நேர்மையும் நாணயமும் உள்ள மனிதர்கள் வேண்டும். அப்படிப்பட்ட மனிதர்களுக்கு நாம் உதவி, வரும் தேர்தலில் அவர்களை பெரும் மாற்றுச் சக்தியாக உருவாக்கிட வேண்டும்.
இந்த அரசியலமைப்பு என்பது கோயில் போன்றது. ஆனால், உள்ளே இருக்கும் மூலவருக்கு எந்த சக்தியும் இல்லாது இருக்கிறார். வெறும் கோயிலாக உள்ளது. இளைஞர்களால் அந்த மாற்றத்தைக் கொண்டுவர முடியும். இந்த மாற்றத்தை என்னால் மட்டும் ஏற்படுத்திவிட முடியாது. இளைஞர்களை ஒன்றிணைத்து ஒரு புதிய கட்சியை வெகுவிரைவில் தொடங்கவுள்ளோம். நேர்மையான, பெரும் தொலைநோக்குப் பார்வை கொண்ட சிறப்பான கட்சியாக அது அமையும்" என்று கூறினார்.
source https://www.vikatan.com/news/politics/arjunamurthy-to-announce-new-party-soon
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக