Ad

வியாழன், 28 ஜனவரி, 2021

Morning Motivation: குழந்தைகளிடமிருந்து நீங்கள் கற்க வேண்டிய பாடம் என்ன? எல்லோரும் இன்புற்றிருக்க!

"'உங்களின் அல்லது உங்களுக்கு அருகில் இருக்கும் குழந்தையிடமிருந்து சமீபத்தில் நீங்கள் எதை எப்போது கற்றுக் கொண்டீர்கள்?' வாரத் தொடக்கத்தில் நீ கட்டுரையை இப்படித்தானே முடித்திருந்தாய்?” என்றது என் முன் அமர்ந்திருந்த தேவதை.

“என்னது தேவதையா?”

“ஆமாம், அழகு பதுமையாக இறக்கைகளுடன் இருந்தால் அது தேவதைதானே?”

“சொல்லு! குழந்தைகள் கிட்ட இருந்து சமீபத்தில் நீ எதைக் கற்றுக் கொண்டாய்?" கேள்வியை மீண்டும் வீச, பதில் சொல்லத் திணறிய என்னிடம், “சரி! எதையெல்லாம் கற்றுக் கொள்ளலாம் என நினைக்கிறாய்? அதைச் சொல்லு“ என சலுகை காட்டியது. சற்று யோசித்தபடியே பட்டியலிடத் தொடங்கினேன்.

Morning Motivation
  1. மகிழ்ச்சியான மனநிலை

  2. கீழே விழுவதைப் பற்றி கவலைப்படாமல் மீண்டும் எழ முயல்வது

  3. பிறரைப் பற்றி யோசிக்காமல் தன் மனதிற்குப் பிடித்ததைச் செய்வது

“ஓகே. இப்படி பல விஷயங்கள் இருந்தாலும் அவர்களிடமிருந்து அனைத்து வயதினரும் கற்க வேண்டிய முக்கியமான ஒன்று எது என்பாய்?” என மீண்டும் கொக்கி போட்ட தேவதை, இம்முறை என் பதிலுக்குக் காத்திராமல், “பழைய பகையைத் தூக்கி சுமக்காத இயல்பு” எனச்சொல்லி, “உனக்கும் எனக்கும் நம் எல்லோருக்கும் தெரிந்த கதையையைச் சொல்கிறேன்" என்று தொடங்கியது.

ஈஸ்டர் திருநாளன்று நான்ஸியும் அவளின் பக்கத்து வீட்டு தோழியும் புத்தாடை உடுத்தி விளையாடப் போனார்கள். விளையாட்டின் போக்கில் நான்ஸியின் ஆடையில் கறை பட, விளையாட்டு சிறு சண்டையாக மாறி இருவரும் வீடு திரும்பினர். சண்டையில் புத்தாடையை அழுக்காக்கியபடி வந்த குழந்தைகளைப் பார்த்த அவ்விருவரின் அம்மாக்கள் கோபமடைகின்றனர். தத்தமது வீட்டை விட்டு வெளியே வந்து “உன் பிள்ளை மேலதான் தப்பு” என மாறி மாறி வசை பாட ஆரம்பித்தார்கள். அப்பகுதியில் வாழும் மக்கள் அனைவரும் அவர்களின் விவாதத்தைச் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் அளவிற்குப் பெரும் சண்டையாக அது வளர்ந்தது. சண்டை முற்றிய நிலையில் பார்த்தால், நடந்த எதையும் கணக்கில் கொள்ளாது நான்ஸியும் அவளின் தோழியும் மீண்டும் விளையாடத் தொடங்கியிருந்தனர்.

Morning Motivation

குழந்தைகளின் இயல்பு இது தான்! நம்மைப் போல, “ஆறு வருஷம் முன்னாடி அவ என்ன சொன்னா தெரியுமா?” என்றும் “ஜென்மத்துக்கும் இவனை மன்னிக்க முடியாது” என்றும் சூளுரைப்பதில்லை. அவர்கள் அளவில் நடக்கும் அத்தனையையும் இலகுவாகக் கடந்து போகிறார்கள். வருத்தங்களும் கோபங்களும் ஏமாற்றங்களும் அவர்களின் சின்னஞ்சிறு உலகிலும் உண்டு. ஆனால், அதைத் தூக்கித் திரியாமல் அடுத்த நிமிடம் குழந்தைக்கே உண்டான க்யூரியாசிட்டி கலந்த சந்தோஷத்தில் ஒன்று சேர்ந்துவிடுவார்கள். இந்த இயல்பு ஓரளவிற்கேனும் கைவரப் பெறுவதே அவர்களிடமிருந்து அனைவரும் கற்கவேண்டிய மிக முக்கியமான ஒன்று“ என்றபடி சிறகை விரித்துப் பறந்தது தேவதை.

தேவதை சொன்னது இருக்கட்டும், நீங்கள் சொல்லுங்கள். “குழந்தைகளிடமிருந்து நீங்கள் கற்க விரும்பும் முக்கிய பாடம் என்ன?”


source https://www.vikatan.com/lifestyle/miscellaneous/morning-motivation-what-should-we-learn-from-the-kids

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக