தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பாக ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, ஏலக்காய், முந்திரிப்பருப்பு, கரும்புடன் 2,500 ரூபாய் பணமும் வழங்கி வருகிறது. இதில் முறைகேடு நடப்பதாக தஞ்சையைச் சேர்ந்த தி.மு.க பிரமுகர் இறைவன் குற்றம்சாட்டியுள்ளார். முன்னாள் நகர்மன்ற தலைவரான இவர், தற்போது தி.மு.க தலைமைக் கழக சட்டத் திருத்தக் குழு உறுப்பினராக உள்ளார். தமிழக அரசு வழங்கி வரும் பரிசு தொகையை தான் இன்னும் பெறாத நிலையில், அதனை பெற்றுவிட்டதாக தன் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இவர், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள முத்தமிழ் நகரில் வசித்து வருகிறார். தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகையான ரூபாய் 2,500-ஐ பெறுவதற்கான டோக்கனை, சில தினங்களுக்கு முன் ரேசன் கடை ஊழியர்கள் இவரது வீட்டில் வழங்கினர். இன்னும் இந்த தொகையை பெறாத நிலையில், 2,500 ரூபாய் வழங்குப்பட்டுவிட்டதாக மெசேஜ் வந்ததாகவும் இதில் ஏதோ முறைகேடு நடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தஞ்சாவூர் வட்ட வழங்கல் அலுவலரிடம் புகார் அளித்துள்ளார் இறைவன்.
Also Read: பொங்கல் பரிசு: ரேஷன் கடையில் அ.தி.மு.க பேனர் - அகற்றப் போராடிய தி.மு.க-வினர் மீது வழக்கு!
தஞ்சாவூர் முன்சிபல் காலணி ரேசன் கடை ஊழியர்கள், நேற்று முன்தினம் மாலை, எங்கள் வீட்டிற்கு வந்து, பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கனை வழங்கினர். ஜனவரி 10-ம் தேதி பொங்கல் பரிசை பெற்றுக்கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த டோக்கன் தற்போது என்னிடம்தான் உள்ளது. ஆனால் பொங்கல் பரிசை நான் பெற்றுவிட்டதாக, என்னுடைய செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. எனது ரேசன் கார்டுக்கு உரிய பரிசுத்தொகையை யாரோ எடுத்துக் கொண்டு முறைக்கேடு செய்துள்ளனர். விபரம் அறிந்த எனக்கே இந்த நிலை என்றால், பாமர மக்களுக்கு எப்படி இந்த தொகை முழுமையாக போய் சேரும்.
ஆளுங்கட்சியினரும் அதிகாரிகளும் முறைகேடுகள் செய்ய வாய்ப்புள்ளது’ என தெரிவித்தார். இது குறித்து விளக்கம் அளித்துள்ள தஞ்சாவூர் வட்ட வழங்கல் அலுவலர் சமத்துவராஜ், ‘இறைவன் அளித்துள்ள புகாரை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ரேஷன் கடையில் ஆய்வு செய்தோம். இறைவனின் ரேசன் கார்டுக்கு இன்னும் பொங்கல் பரிசுத்தொகை வழங்கப்படவில்லை. அவரது செல்ஃபோனுக்கு தவறுதலாக குறுஞ்செய்தி சென்றிருக்கலாம்’’ என தெரிவித்தார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/dmk-cadre-complains-that-some-scam-in-tn-governments-pongal-gift-scheme
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக