பொள்ளாச்சி பாலியல் வழக்கு தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. திருநாவுக்கரசு, ரிஷ்வந்த் என்கிற சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய 5 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் இருக்கின்றனர். இதுதொடர்பாக சி.பி.ஐ விசாரித்து வருகின்றனர். கடந்த 2019-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, கோவை மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வருகிறது.
Also Read: இன்ஸ்டாகிராம் பழக்கம், தனிமையில் பேச்சு... பொள்ளாச்சி இளைஞர் கொலையில் நடந்தது என்ன?
சமீபத்தில் இதன் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருந்த அரசியல் பிரமுகர்கள் உள்பட பலர் கைது செய்யப்படாமல் உள்ளனர் என தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வந்தது.
இந்நிலையில், நேற்று மாலை இந்த வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி ஆச்சிபட்டியைச் சேர்ந்த ஹேரேன் பால் (29), வடுகபாளையத்தைச் சேர்ந்த பாபு என்கிற பைக் பாபு (27), அருளானந்தம் (34) ஆகியோர் சி.பி.ஐ போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஹேரேன் பால் பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியிருந்தது.
அதேபோல, பாபு என்கிற பைக் பாபு அடிதடி வழக்கில் விசாரணை வளையத்தில் இருந்தவர். கைது செய்யப்பட்டுள்ள மற்றொரு நபரான அருளானந்தம் பொள்ளாச்சி அ.தி.மு.க நகர மாணவரணி செயலாளராக இருந்து வருகிறார். இவர், பொள்ளாச்சி முன்னாள் சேர்மன் கிருஷ்ணகுமாருக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது.
அருளானந்தத்துக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. அதில் அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அருளானந்தம் துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோருடன் இருக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அருளானந்தத்தை நேற்று கட்சி அலுவலகத்தில் வைத்து சி.பி.ஐ கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், பொள்ளாச்சியில் அ.தி.மு.க-வினர் அச்சத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட 3 பேரும் சற்று நேரத்தில், மகளிர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அருளானந்தத்துக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பொள்ளாச்சி ஜெயராமன் விளக்கம் அளித்துள்ளார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/cbi-arrest-3-persons-over-pollachi-sexual-abuse-case
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக