Ad

ஞாயிறு, 31 ஜனவரி, 2021

பொய் சொன்ன கிளிக்குஞ்சு; காப்பாற்றிய பருந்து... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்?! #BedTimeStories -12

ஒரு கிராமத்துல ஒரு பலா மரம் இருந்துச்சு. அந்த மரத்துல பல வகையான பறவைகள் வாழ்ந்துட்டு வந்துச்சு. அதுல ஒரு கிளியும் ஒரு மைனாவும் அக்கா, தங்கச்சிபோல ரொம்ப அன்பா பழகிட்டு இருந்துச்சுங்க. கிளிக்கு பயங்கர துறுதுறுப்பா ஒரு கிளிக்குஞ்சு இருந்துச்சு. உச்சி மரத்துக்குப் போயிட்டு அங்க இருந்து டைவ் அடிக்கும். மாம்பழத்தைக் கொட்டையை எடுக்காம முழுங்கிட்டு தொண்டைல மாட்டிட்டு `கீ கீ’ன்னு கத்தும். மைனாவோட வாலைப் பிடிச்சு இழுத்துட்டு `பே’ன்னு கத்தி பயமுறுத்தும். கிளிக்குஞ்சு என்ன சேட்டை பண்ணாலும் கிளியம்மா அதை கோவிச்சுக்கவே கோவிச்சுக்காது. அதோட தப்பு புரியுற மாதிரி நிதானமா எடுத்துச் சொல்லும். ஆனா, கிளிக்குஞ்சு அதையெல்லாம் கேக்கும்னா நினைக்கிறீங்க... இல்லவே இல்ல. அது வழக்கம்போல தினமொரு சேட்டை செஞ்சுட்டு இருந்துச்சு.

BedTimeStories

Also Read: காட்டு நரியும் கிராமத்து கழுதையும் - ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்?! #BedTimeStories - 5

கிளிக்குஞ்சோட ஆபத்தான சேட்டைகளைப் பார்த்து மைனா மட்டும் அடிக்கடி வருத்தப்படும். ஒருநாள் கிளி கிட்ட `நீ இப்படி புத்தி சொல்லிட்டு இருந்தா மட்டும் போதாது கிளியக்கா. கிளிக்குஞ்சோட சேட்டையால அதுக்கு ஏதாவது வந்துடுமோன்னு எனக்கு பயமா இருக்கு. நீ ஒருநாள் மரப்பொந்துல இல்லாதப்போ பக்கத்து கிளையில இருக்கிற பருந்து வீட்டுக்குள்ள நுழைஞ்சு அதோட முட்டையை எடுத்துட்டு வந்து உருட்டி விளையாடிட்டு இருந்துச்சு கிளிக்குஞ்சு. நல்ல நேரமா, அம்மா பருந்து வர்றதுக்கு முன்னாடி அதை நான் பார்த்துட்டேன். அதனால முட்டையை மறுபடியும் பத்திரமா கொண்டு போய் பருந்தோட வீட்லேயே வெச்சுட்டேன்’ அப்படின்னு சொல்லுச்சு. இதைக் கேட்ட கிளியம்மா ரொம்ப பயந்துபோச்சு.

அன்னிக்கு ராத்திரி தூங்கறப்போ விளையாட்டு எப்படி வினையாகும்னு கிளிக்குஞ்சுக்கு சொல்றதுக்காக, புலி புலி வருதுன்னு ஊரை ஏமாத்தின பையன் கடைசியில புலிகிட்ட மாட்டிக்கிட்ட கதையைச் சொல்லுச்சு கிளியம்மா. கதையை நல்லா `உம்’ கொட்டி கேட்டுக்கிட்ட கிளிக்குஞ்சு திருந்தவே இல்ல. அதுக்கு பதிலா மனசுக்குள்ள, `அட இப்படிக்கூட சேட்டை செய்யலாமா’ன்னு யோசிச்சிது.

BedTimeStories

Also Read: முதலையின் அட்டகாசத்தை அடக்கிய முள்ளம்பன்றி... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories -10

மறுநாள் பொழுது விடிஞ்சது. கிளிக்குஞ்சு `கீ கீ’ன்னு கத்திக்கிட்டே மரத்துல இருந்து கொஞ்ச தூரம் பறக்கிறதும் மறுபடியும் பொந்துக்குள்ள வர்றதுமா இருந்துச்சு. சத்தத்தைக் கேட்ட எல்லா பறவைகளும் அதுங்களோட பொந்துகள்ல இருந்து என்னாச்சு அப்படின்னு எட்டிப் பார்த்ததுங்க. வெளியில ஒரு கிளையில உட்கார்ந்துட்டு கிளிக்குஞ்சு அழுதுட்டே இருக்க, கிளியம்மா அதுகிட்ட ஏன் அழறேன்னு கேட்டுக்கிட்டு இருந்துச்சு. அதுக்கு கிளிக்குஞ்சு `பக்கத்துக் கிளையில வசிக்கிற பருந்து என்னை சாப்பிட விரட்டுச்சு. நான் தப்பிச்சுட்டேன்’னு சொல்லி ஓன்னு அழுதுச்சு. கிளியம்மாவும் அதை நம்பிட்டு பருந்துகிட்ட போய் சண்டை போட்டுச்சு. அதுக்கு பருந்து, நாம எல்லாம் ரொம்ப நாளா இந்த மரத்துல வாழ்ந்திட்டிருக்கோம். உன்னோட குழந்தை எனக்கும் குழந்தைதான். அதை போய் நான் சாப்பிட நினைப்பேனா’ன்னு சொல்லி அழுதுச்சு.

கிளியம்மாவுக்கு தன்னோட குஞ்சு சொல்றதை நம்பறதா இல்ல பருந்து சொல்றதை நம்பறதான்னு ஒரே குழப்பம். இரை தேடக்கூட போகாம தலையில கை வெச்சுக்கிட்டு உட்கார்ந்துட்டு இருந்த கிளிக்கு பக்கத்துல வந்து உட்கார்ந்துச்சு மைனா. `கிளிக்குஞ்சோட சேட்டையைப் பத்திதான் உனக்கு நல்லா தெரியுமே கிளியக்கா. அது பொய்தான் சொல்லியிருக்கும். பருந்து நிச்சயமா கிளிக்குஞ்சை சாப்பிட டிரை பண்ணியிருக்காது’ன்னு ஆறுதலா பேசுச்சு. எனக்கு ஒரே குழப்பமா இருக்கு மைனா தங்கச்சின்னு வருத்தப்பட்டுச்சு கிளி.

BedTimeStories

Also Read: `க்யூட்'டான பன்றிக்குட்டிகளும் அழிந்த கர்வமும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்?! #BedTimeStories

கொஞ்ச நாள் போச்சு. பெரிய பறவைகள் எல்லாம் இரை தேடி வெளியே போயிருக்க குஞ்சுப் பறவைங்க மட்டும் மரக்கிளைகள்ல உட்கார்ந்து விளையாடிட்டு இருந்துச்சுங்க. வழக்கம்போல கிளிக்குஞ்சு மட்டும் மரத்தோட உச்சியில உட்கார்ந்துட்டு விளையாடிட்டு இருந்துச்சு. அப்போ எங்கியோ இருந்து வந்த பருந்து ஒண்ணு கிளிக்குஞ்சை தூக்கிட்டு பறக்க ஆரம்பிச்சிடுச்சு. கிளிக்குஞ்சு `கீ கீ’ன்னு கத்தி அழ ஆரம்பிக்க, அதோட சத்தத்தைக் கேட்டு பல பறவைகள் பறந்தோடி வந்துச்சாம். ஆனா, எதுக்குமே கிளிக்குஞ்சை காப்பாத்துற தைரியம் வரலை. அந்த நேரத்துல கிளிக்குஞ்சு தன்னை சாப்பிட வந்ததா பழிபோட்ட பருந்து வேகமா வந்து கிளிக்குஞ்சைப் பிடிச்சு வெச்சிருக்கிற பருந்தோட சண்டை போட்டு, கிளிக்குஞ்சைக் காப்பாத்திடுச்சு. கிளிக்குஞ்சு தான் சொன்ன பொய்யை நினைச்சு அழ ஆரம்பிச்சதோட பருந்துகிட்ட, `நான் செஞ்ச தப்பை மன்னிச்சிடுங்க பருந்து ஆன்ட்டி’ன்னு சொல்லி மனசார மன்னிப்பும் கேட்டுச்சு. அன்னியில இருந்து கிளிக்குஞ்சு பொய் சொல்றதை விட்டுடுச்சு.

- நாளை சந்திப்போம்

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.


source https://www.vikatan.com/literature/kids/story-of-mischievous-parrot-vikatan-bedtime-stories-12

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக