தங்கமகனாக துருவ் விக்ரம்!
இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்கிறார் துருவ் விக்ரம். 'ஆதித்யா வர்மா'வுக்கு அடுத்தபடியாக துருவ் நடிக்கும் இரண்டாவது படம் இது. ஆசிய போட்டிகளில் இந்தியாவுக்காக தங்கம் வென்றுதந்த தமிழகக் கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக்கொண்ட கதை இது. இதில் தங்கம் வென்ற கபடி வீரராக நடிக்கிறார் துருவ் விக்ரம். தனுஷின் 'கர்ணன்' படத்தை முடித்துவிட்ட மாரி செல்வராஜ் இந்தப் படத்தின் ஷூட்டிங்கை பிப்ரவரி மாத இறுதியில் தொடங்குகிறார்.
அரையிறுதியில் தமிழ்நாடு - ராஜஸ்தான்!
இந்தியாவின் உள்ளூர் டி20 போட்டியான சையது முஸ்தாக் அலி டிராபியின் அரையிறுதிப்போட்டியில் இன்று ராஜஸ்தானுடன் மோதுகிறது தமிழ்நாடு. கடந்த ஆண்டு இறுதிப்போட்டியில் கர்நாடகாவிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியைத்தழுவி கோப்பையை இழந்தது தமிழ்நாடு. ஆனால், இந்த முறை தொடர் வெற்றிகளால் அசத்திவரும் தமிழ்நாடு இன்றைய அரை இறுதியை வெல்லும் என்றே எதிர்பார்க்கலாம். தமிழ்நாட்டில் ஜெகதீசன், ஹரி நிஷாந்த் என இரண்டு ஓப்பனர்களும் நல்ல ஃபார்மில் இருப்பது பெரிய பலம். ராஜஸ்தானில் மஹிப்பால் லாம்ரோர் செம ஸ்ட்ரைக்கில் இருக்கிறார். அதனால் போட்டி இன்று கடுமையாகவே இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
வருகிறது 5ஜி!
2021 செப்டம்பருக்குள் இந்தியாவில் 5ஜி இன்டர்நெட் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கலாம். தொலைத்தொடர்பு தொழில்நுட்பட்பத்தில் ஏதும் மாற்றங்கள் செய்யவேண்டும் என்றால் ஒரு வருடத்துக்கு முன்பாகவே அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்கிற விதிமுறையை மத்திய அரசு இப்போது ஆறு மாதகாலமாகக் குறைத்திருக்கிறது. இதனால் 5ஜி சேவைகள் இந்த ஆண்டே நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களுக்கிடையே யார் முதலில் 5ஜி சேவையை இந்தியாவில் தொடங்குவது என்கிற போட்டாபோட்டி தொடங்கியிருக்கிறது. இதில் ஏர்டெல், ஹைதரபாத்தில் தாங்கள் மேற்கொண்ட சோதனைகளில் 5ஜி சேவை வெற்றிகரமாகச் செயல்பட்டதாக அறிவித்திருக்கிறது.
முதலமைச்சர் சூர்யா!
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் அவரது 40-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்தப்படத்தின் ஷூட்டிங் இன்னும் சில நாட்களில் தொடங்குகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்தில் நடித்திருப்பவர்தான் பிரியங்கா. இமான் இசையமைக்கும் இந்தப் படத்தில் 5 கெட்அப்களில் சூர்யா நடிக்க இருக்கிறார். அதில் ஒரு ரோல் தமிழக முதலைமைச்சராம்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இந்திய லெக் ஸ்பின்னர்!
பிக்பேஷ் லீகில் பட்டையைக் கிளப்பிவருபவர் தன்வீர் சங்கா. லெக் ஸ்பின்னரான இவர் இந்தியாவில் இருந்து குடிபெயர்ந்த பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்த மாதம் நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெற இருக்கும் டி20 தொடரில் விளையாடுவதற்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்திருக்கிறார் சங்கா. 19 வயதான தன்வீர் சங்காவின் தந்தை ஆஸ்திரேலியாவில் டாக்ஸி ஓட்டுநராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். தன்வீர் சங்கா இந்த ஆண்டு பிக்பேஷ் லீகில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். ஆஸ்திரேலிய தேசிய அணிக்காக விளையாடயிருக்கும் இரண்டாவது இந்தியர் தன்வீர் சங்கா!
source https://www.vikatan.com/news/general-news/top-5-news-of-29-january-covering-cinema-tech-and-sports
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக