Ad

வெள்ளி, 29 ஜனவரி, 2021

``கமல்ஹாசன் கட்சியினர் என்னைத் திட்டுகிறார்கள்’’ - கார்த்தி சிதம்பரம் கவலை!

கட்சித் தாவல்களும், கூட்டணி மாறுதல்களும் தேர்தல் நெருக்கத்தை அறிவித்துவருகின்றன. இந்தநிலையில், தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் வந்து இணைந்துகொள்ளுமாறு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு தொடர்ச்சியாக அழைப்பு விடுத்துக்கொண்டே இருக்கின்றனர் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள். அண்மையில், கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்திருந்த காங்கிரஸ் கட்சியின் எம்.பி கார்த்தி சிதம்பரத்திடம் இது குறித்துப் பேசினேன்.

``கூட்டணிக்குத் தலைமை வகிக்கின்ற கட்சியின் ஒப்புதலின்றி நீங்களாகவே ஒரு கட்சியை கூட்டணிக்குள் வருமாறு அழைப்பு விடுப்பதெல்லாம் கூட்டணி தர்மம் ஆகுமா?''

``தனிப்பட்ட என்னுடைய ஆசையைத் தெரிவிக்கிறேன். அடுத்து, சித்தாந்தரீதியில் முரண்பாடான கருத்துகளைக்கொண்ட கட்சியை நான் அழைத்திருந்தால்கூட இந்த முயற்சியை 'முரண்பாடு' என்று நீங்கள் சொல்ல முடியும். இது அப்படிப்பட்டதும் அல்லவே. ஆனாலும் ம.நீ.ம கட்சித் தொண்டர்களேகூட, `எங்களை எப்படிக் கூப்பிடலாம்...' என்று சொல்லி என்னை ட்விட்டர் வழியே திட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை, தேர்தல் அரசியலுக்குள் வந்துவிட்ட பிறகு யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு செயல்படுவதுதான் கெட்டிக்காரத்தனம்!''

கமல்ஹாசன்

``கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போதும் கூட்டணிக்குள் வருமாறு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்தது. ஆனாலும் கமல் அதை ஏற்கவில்லையே?''

``உண்மைதான். அப்படி காங்கிரஸ் கட்சி விடுத்த அழைப்பை அவர் ஏற்காததன் விளைவை அந்தத் தேர்தலிலேயே அவர் சந்தித்தும்விட்டாரே... ஓரிடத்தில்கூட அவர் கட்சி வெற்றி பெறவில்லை. அரசியலில் நீண்டநாள் பயணம் செய்ய வேண்டும்; வெற்றியடைய வேண்டும் என்றெல்லாம் கமல்ஹாசன் நினைத்தால், அரசியல் யதார்த்தங்களைப் புரிந்து, நடந்துகொள்ள வேண்டும். சமுதாயத்தில், தங்கள் கட்சியின் குரலும் கேட்க வேண்டும் என்று நினைப்பவர்கள், தேர்தல் வெற்றி மூலமாக தங்கள் கட்சியின் பிரதிநிதிகளைச் சட்டமன்றத்திலோ அல்லது நாடாளுமன்றத்திலோ கொண்டுபோய் நிறுத்துவதுதான் கெட்டிக்காரத்தனம்.

நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால்தானே என்னுடைய பேச்சையும் இரண்டு பேராவது கேட்கிறார்கள்... நான் எம்.பி-யாக இல்லாவிட்டால், என்னுடைய பேச்சை யார் கேட்கப்போகிறார்கள்... இந்த யதார்த்தத்தை கமல்ஹாசன் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, தேர்தல் அரசியலில், ஒரு கட்சிக்கு எம்.எல்.ஏ., எம்.பி என்று பிரதிநிதித்துவம் கட்டாயம் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து.''

``புதுச்சேரியில் அடுத்து தி.மு.க தலைமையில்தான் ஆட்சி அமையும் என்று ஜெகத்ரட்சகன் சொல்கிறார். உங்கள் கூட்டணியிலேயே பிரச்னை இருக்கிறதே?''

``தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி, திடமாகவே இருக்கிறது. எங்களுக்கிடையே எந்தப் பிரச்னையும் இல்லை. தி.மு.க-வில் உள்ள தலைவர்கள் தனிப்பட்ட அவரவர் கருத்துகளைச் சொல்கிறார்கள். அவற்றையெல்லாம் நாங்களும் சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அதேசமயம், அவர்களது கட்சித் தலைமை என்ன சொல்கிறது என்பதுதான் எங்களுக்கு முக்கியம். அந்தவகையில், 'தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் எந்தப் பிரச்னையும் இல்லை' என்று மு.க.ஸ்டாலின் தெளிவுபடச் சொல்லிவிட்டார். இனி அவர்களது கட்சியில் யார் என்ன சொன்னாலும் அது பற்றிப் பேசுவதற்கு என்ன இருக்கிறது?''

மு.க.ஸ்டாலின்

``தி.மு.க கூட்டணிக்குள் ம.நீ.ம கட்சியை அழைப்பதென்பது, தி.மு.க-வுக்கு நீங்கள் கொடுக்கிற அழுத்தமா அல்லது தி.மு.க கூட்டணிக்கு மாற்றாக மூன்றாவது அணி என்ற ஒரு மாற்று வழியை உருவாக்குகிறீர்களா?''

``அழுத்தம் என்று எதுவும் கிடையாது. கூட்டணிக்குள் ம.நீ.ம கட்சியும் வந்தால், பிரசாரத்துக்கு இன்னும் நன்றாக இருக்கும் என்பதால், கமல்ஹாசன் மீதுள்ள நல்லெண்ணத்தின் அடிப்படையில் அழைக்கிறோம்... அவ்வளவுதான். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு முன்பே தி.மு.க கூட்டணிக்கு வருமாறு நான் கமல்ஹாசனை அழைத்துவிட்டேன்.

மூன்றாவது அணி அமைவதற்கான எந்த வாய்ப்பும் இந்தத் தேர்தலில் இல்லை. எங்கே இருக்கிறது அப்படி ஓர் அணி... 2016 சட்டமன்றத் தேர்தலிலேயே 'மக்கள் நலக் கூட்டணி' என்ற மூன்றாவது அணி எந்தவொரு தாக்கத்தையும் இங்கே ஏற்படுத்தவில்லையே...

எனவே, இன்றைய தமிழக அரசியலில், தி.மு.க - அ.தி.மு.க இடையேதான் நேரடிப் போட்டி. இந்த இரண்டு கட்சிகளை ஒதுக்கிவிட்டு மூன்றாவது அணியாக யாராலும் பெரிய வெற்றியை எட்ட முடியாது என்பதுதான் யதார்த்தம். இந்த உண்மைநிலையை கமல்ஹாசனும் புரிந்துகொண்டுவிட்டால், நிச்சயம் கூட்டணி அரசியலில் வந்து இணைந்துகொள்வார். அப்படி ஒரு முடிவை அவர் எடுத்தாரானால், அவருடைய மதச்சார்பின்மை கொள்கைக்கு முழுவதும் ஒத்துப்போகிற கூட்டணியாக காங்கிரஸ் கூட்டணி இருக்கும்.''

Also Read: கொடைக்கானல்: பா.ஜ.க பிரசாரத்துக்கு வந்த வேலூர் இப்ராஹிம் - எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கைது!

``கமல்ஹாசனை கூட்டணிக்குள் வருமாறு அழைப்பதில் தி.மு.க-வுக்குத் தர்மசங்கடம் இருப்பதால், உங்களைப் போன்ற கூட்டணிக் கட்சியினர் வாயிலாக அழைப்பு விடுக்கப்படுகிறதா?''

``கமல்ஹாசனை கூட்டணிக்குள் அழைத்துவாருங்கள் என்றெல்லாம் என்னிடம் யாரும், எதுவும் சொல்லவில்லை. என் மனதில் இருப்பதை வெளிப்படையாக நான் பேசிவருகிறேன். அதாவது ம.நீ.ம கட்சி தி.மு.க கூட்டணிக்குள் வந்தால் நன்றாக இருக்கும் என்ற அபிப்ராயம் எனக்கு இருக்கிறது. என்னைப்போல் கட்சியிலும் நிறைய பேருக்கு இருக்கிறது. அதனால் அழைக்கிறேன். அரசியலைப் பொறுத்தவரை, நடைமுறை யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு நடந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பவன் நான். அதாவது, தேர்தலுக்காக, சிலபல சமரசங்களைச் செய்துகொள்ளும்போதுதான், சமூகரீதியாகவும் நாம் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இல்லையெனில், வெறும் கருத்துகளை மட்டுமே நாம் சொல்லிக்கொண்டு போக வேண்டியதுதான். இந்த நடப்பு அரசியலை உணர்த்தும்விதமாகத்தான் நானும் கமல்ஹாசனை கூட்டணிக்குள் அழைக்கிறேன்.''

கமல்ஹாசன்

``முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன்-என்று ம.நீ.ம கட்சி தீர்மானமே இயற்றியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், ம.நீ.ம கட்சி எப்படி தி.மு.க கூட்டணிக்குள் வர முடியும்?''

``எல்லாக் கட்சிகளுமே அவரவர் கட்சித் தலைவர்களை `முதல்வர் வேட்பாளர்' என்றுதான் சொல்லிக்கொள்வார்கள். ஆனால், நடைமுறை யதார்த்தம் என்னவென்றுதான் பார்க்க வேண்டும். எந்தெந்தக் கட்சிகளுக்கு என்னென்ன விகிதத்தில் வாக்கு சதவிகிதம் இருக்கின்றன என்பதையெல்லாம் நாங்களும் சர்வே எடுத்துப் பார்த்துவருகிறோம். எந்த அரசியல் கட்சியுமே படிப்படியாகத்தான் வளர முடியும். ஆரம்பித்த உடனேயே முதல்வராகிவிட முடியாது. திரைத்துறையிலேயேகூட நேரடியாக ஹீரோவாகிவிட முடியுமா என்ன... கமல்ஹாசனேகூட குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக வந்து, அதற்கடுத்துதானே ஹீரோ அந்தஸ்து பெற்றார்.''

Also Read: `இளைஞர்களை ஒன்றிணைத்து வெகுவிரைவில் மாற்றத்துக்கான புதிய கட்சி' - அர்ஜுனமூர்த்தி

``சொந்தக் கட்சியின் நடவடிக்கைகளையே மிகக் கடுமையாக நீங்கள் விமர்சிப்பது ஏன்?’’

``என் கட்சி நன்றாகச் செயல்படவேண்டும் என்ற அக்கறையில்தான் என் கருத்துகளைத் தெரிவிக்கிறேன். இதைச் சொல்வதாலேயே நான் கட்சி வேலைகளைப் பார்ப்பது இல்லை என்று யாரும் கருதிவிடக் கூடாது. கட்சி எனக்களிக்கும் வேலைகளைச் செய்வதற்காக நான் அடிக்கடி சத்தியமூர்த்தி பவன் சென்று வருகிறேன். எனவே, என்னைச் சந்திக்கமுடியாது என்று யாரும் சொல்லிவிட முடியாது.

கே.எஸ்.அழகிரி

தமிழ்நாட்டிலுள்ள மிகப்பெரிய கட்சிகளே குறைந்த எண்ணிக்கையில்தான் கட்சி நிர்வாகிகளை நியமனம் செய்கின்றன. ஆனால், காங்கிரஸ் கட்சியில் மட்டும் 32 துணைத் தலைவர்கள், 57 பொதுச்செயலாளர்கள், 104 செயலாளர்கள் என தாராளமாக பதவிகளை வாரி வழங்கினால், இதில் யாருக்கு என்ன அதிகாரம், அங்கீகாரம் இருக்கும்... ஒட்டுமொத்தமாக இப்படி 194 நிர்வாகிகளை நியமித்திருப்பதென்பது நிர்வாகரீதியாகவோ அல்லது கட்சியின் வளர்ச்சிக்கோ எந்தவிதத்திலும் துணை புரியாது. எனவே, இந்த நியமனம் என்பது தவறுதான்.

நீங்களே சொல்லுங்களேன்.... காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் யார், யார் என்பதை காங்கிரஸ் தொண்டர்களாலேயே சொல்லிவிட முடியுமா... தி.மு.க-வில் 11 பேர் மட்டுமே நிர்வாகிகளாக இருப்பதால், யார், யார் என்னென்ன பொறுப்புகளில் இருக்கிறார்கள் என்பதை அந்தக் கட்சித் தொண்டர்கள் தெளிவாகச் சொல்லிவிடுவார்கள். எனவே, அதிக எண்ணிக்கையிலான நிர்வாகிகள் நியமனத்தை இப்போதுவரை நான் ஏற்றுக்கொள்ளவில்லை!''



source https://www.vikatan.com/government-and-politics/politics/mnm-cadres-are-scolding-me-karthi-chidambaram-worried

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக